இணைய உலகம்

ட்விட்டர்: அதிரிபுதிரி அரசியல் சதுரங்கம்
இணைய உலகம்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் அரங்கேறிய அரசியல் அலப்பறைகள் மற்றும் அதிரிபுதிரி சுவாரசியங்கள், நிஜமான சதுரங்க மோதல்களுக்கு ஈடுகொடுத்தன. அந்த அரசியல் லாவணிகளை உடனுக்குடன் பிரதிபலித்த ட்விட்டர் பதிவுகளும், கச்சைகட்டிய மீம்ஸ் பதிலடிகளும் தனியாவர்த்தனமாய் உருவெடுத்தன.

ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடியின் வருகையை முன்வைத்து முதல் சுற்று அரசியல் சதுரங்க மோதல் முளைத்தது. விழா விளம்பர பதாகைகளில் பிரதமரின் படம் இல்லையென்று. பாஜக - திமுக கட்சிகளின் ஐடி அணிகளின் இணைய அடிதடி அவற்றின் தொடக்கமானது. அடுத்தபடியாக, மோடி வருகைக்கு எதிர்வினையாற்றும் முழக்கங்கள் ட்விட்டர் டிரெண்டிங்கில் அலைபாய்ந்தன. ‘வெல்கம் மோடி’க்கு எதிரான உபிக்களின் ‘கோபேக் மோடி’ ட்விட்டரில் மட்டுமன்றி நிதர்சனத்திலும் ஈனஸ்வரத்தில் ஒலித்தன. சுதாரித்த தீவிர திராவிட ஸ்டாக்கிஸ்டுகள் ’கோபேக் மோடி’யை முன்னெடுத்த பதிவுகளில் அங்கதம் விளையாடியது.

திமுக அரசு சார்பிலான சகல ஏற்பாடுகளிலும் அரசியல் சதுரங்க வியூகங்கள் உள்ளடங்கியிருப்பதாக அவர்கள் விளக்கியதிலும் சுவாரசியங்கள் மேலிட்டன. அப்படியான விளம்பரங்களிலும் வீடியோ பதிவுகளிலும் அரசியல் குறியீடுகளை கண்டும் விண்டும் குறி சொன்னார்கள். உதாரணத்துக்கு, முதல்வர் அலுவலகம் ட்விட்டரில் பகிர்ந்த முன்னோட்ட வீடியோவில், கறுப்பு வெள்ளை அங்கத்தினர் இடையிலான அடையாள வேறுபாடு, சதுரங்க மோதலில் இறுதி வெற்றி யாருக்கு உள்ளிட்டவற்றில் இழை பிரித்து விளக்கினார்கள்.

ஒலிம்பியாட் தொடக்க விழா மேடையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பிரதமர் மற்றும் ஆளுநர் பெயர்களை விளித்தபோது கைத்தட்டலை எதிர்பார்த்து ஏமாந்தார். அதுவரை கமுக்கம் காத்த கூட்டம், முதல்வர் ஸ்டாலின் பெயரை முருகன் உச்சரித்ததும் அரங்கம் அதிர கரவொலி எழுப்பியது. இந்த நிகழ்வுகளை சுடச்சுட மீம்ஸ்களாக உலவவிட்டு இணையத்தின் அரசியல் கணப்பை உபிக்கள் எகிற வைத்தனர். அதேசமயம், விழா மேடையில் பகிரங்கமாய் வெளிப்பட்ட மோடி - ஸ்டாலின் இடையிலான புதிய புரிதல்கள் இணையவாசிகளை கிறுகிறுக்கவும் செய்தன.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக - திமுக இடையிலான கூட்டணிக்கு அச்சாரமே இந்த மேடை இணக்கம் என்றெல்லாம் தொடர்ந்த அரசியல் ஹேஷ்யங்கள் இணையவாசிகளை தெளியவைத்து குழப்படிக்கவும் செய்தன.

யூடியூபில் விரியும் ’பொறி’கள்!

தமிழகத்தில் சற்றே ஓய்ந்திருந்த பொறியியல் கல்வி மோகம் இந்த வருடம் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. பிள்ளைகளின் உயர்கல்வி குழப்பத்தில் அல்லாடும் பெற்றோரை இவை மேலும் அலைக்கழித்து வருகின்றன. பொறியியல் சேர்க்கை மீதான கவர்ச்சியை மீட்டதில் தமிழின் குபீர் யூடியூபர்கள் பலருக்கும் பங்குண்டு.

உயர்கல்வி ஆலோசனைகளுக்கு என பொதுவெளியில் அறிமுகமான ஜெயப்பிரகாஷ் காந்தி, ரமேஷ் பிரபா, அஸ்வின் உள்ளிட்டோர் தங்களது யூடியூப் சேனல்கள் மூலமாகவும் வழக்கம்போல வழிகாட்டி வருகிறார்கள். ஆனால், காளானாய் முளைத்த திடீர் ஆலோசகர்கள், மாணவர்களையும், பெற்றோர்களையும் மாயையில் ஆழ்த்தி வருகிறார்கள். பொறியியல் உயர்கல்வியை முன்னிறுத்தி இவர்கள் விரித்த வலையில் சிக்கியவர்களும் அதிகம். பொறியியல் உயர்கல்வி சேர்க்கைக்காக குவிந்த விண்ணப்பங்கள், இந்த வருடம் 2 லட்சத்தை தாண்டியிருப்பதே இதற்கு சாட்சி.

மாணவர் சேர்க்கையின்றி காற்றுவாங்கும் பொறியியல் கல்லூரிகளில் கணிசமானவை மூடுவிழா காண்பதும் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இந்த பொறியியல் கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், உரிய உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகள் இல்லாத சுமார் 300 கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டதன் தகவல்களும் அண்மையில் வெளியாகி பெற்றோரை கலங்கடித்தன.

ஆனபோதும், ஆன்லைனில் ட்யூஷன் எடுப்பவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் அரைகுறை யூடியூபர்கள் என சகலரும் வசீகர உயர்கல்வி ஆலோசகர்களாக அவதாரமெடுத்ததில் பெற்றோருக்கு குழப்பமே மிஞ்சியது. இந்த யூடியூபர்களில் பலரும் தனியார் கல்லூரிகளிடம் ஆதாயம் பெறுவதுடன், வீடியோ பதிவுக்கு அப்பாலான தங்களது ஆன்லைன் ஆலோசனைக்கு பெற்றோரிடம் கறந்தும் கல்லாகட்டி வருகிறார்கள். இந்த யூடியூப் ஜோதியில் மறைமுகமாக ஐக்கியமான சில தனியார் கல்லூரிகள், தங்களது தற்போதைய மாணவ - மாணவிகளை ஏவியும் விட்டில்களை சாய்த்து வருகின்றன.

ஃபேஸ்புக்: பாலையாவுக்கு சவாலான சரவணன்

எதிர் விமர்சனங்களை உரமாக்கி வளரும் அரசியல் மற்றும் கலையுலக ஜீவன்கள் அதிகம். அந்த வரிசையில் அண்மையில் இணைந்திருக்கிறார் கோலிவுட் கண்டெடுத்த சகலகலா ரத்தினமான ’லெஜண்ட்’ சரவணன். இந்த வாரம் அவரது நடிப்பிலான தமிழ் திரைப்படம் தென்னக மொழிகளில் மட்டுமன்றி இந்தியிலும் வெளியாகி இருக்கிறது. இதையொட்டி சரவணனை கலாய்க்கும் முயற்சியில் படத்துக்கு இலவச விளம்பரம் சேர்த்து வருகின்றனர் முகநூல் பதிவர்கள்.

பாலையாவின் விநோதமான சண்டை மற்றும் நடன காட்சிகள் நிறைந்த தெலுங்கு திரைப்படங்களுக்கு வெகுகாலமாய் பதில் சொல்ல ஆளில்லாத சூழலே தமிழில் நிலவியது. அந்த வகையில் கோலிவுட் எதிர்பார்த்திருந்த பவர் ஸ்டார் போன்ற ஒரு சிலரும் ஏமாற்றவே செய்தனர். சற்று தாமதமானபோதும் பாலகிருஷ்ணாவுக்கு சரியான போட்டியாக தமிழில் களமிறங்கி இருக்கிறார் சரவணன். இதனால் குதூகலமடைந்த ரசிகர்கள் மற்றும் ரசிக எண்ணங்களை பிரதிபலிக்கும் முகநூல் பதிவர்கள் லெஜண்ட் புகழ்பாடி வருகின்றனர்.

திரைப்படத்தை பார்க்காது இவர்கள் வளைத்து வளைத்து எழுதும் பகடி பதிவுகளும், மீம்ஸ் சரங்களும் படத்தின்மீது தனி எதிர்பார்ப்பை கட்டமைத்து வருகின்றன. அடுத்த பான் இந்திய திரைப்படத்துக்கு சரவணன் தயார் என்ற தகவல் அவர் தரப்பிலிருந்து வெளியாகும் அளவுக்கு பகடிகளால் பதிவுகளால் உசுப்பேற்றி வருகிறார்கள்.

தத்துவ முத்துக்கள்

1. மற்றவர்களுக்காக நமது விருப்பங்களை விட்டுக்கொடுத்தே பழகினோம் என்றால், காலப்போக்கில் நமக்கான தனித்துவ கனவுகளை இழக்கும் பரிதாபத்துக்கு ஆளாவோம் @Ashok_04

2.விஷயங்களை எந்த இடத்தோடு நிறுத்திக்கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்பதில் தெளிவு இருந்தாலே போதும்; இறங்கி விளையாடலாம், சாதிக்கலாம் @Kannan_Twitz2

3. கடந்து வந்தவை வெறும் பாதைகள் அல்ல; பாடம் புகட்டிய வேதங்கள் @Tamil65283970

4. செயல் வடிவம் பெறாத அறிவு, வெறும் வறட்டுப் பெருமையில் முறியும் @thisiswhatigot

5. கிட்டியதன் அருமை, தொலைக்கும் வரை தெரிவதில்லை @yaadhu143

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in