இணைய உலகம்

பிஜோர்னின் ‘ஹே பேபி’
பிஜோர்னின் ‘ஹே பேபி’

யூடியூப்: பிஜோர்னின் ’ஹே பேபி’

யூடியூப்பில் வெளியாகி வரும் தனியிசைப் பாடல்களின் வரிசையில் இந்த வாரம் தமிழில் சேர்ந்திருக்கிறது ’ஹே பேபி’. சென்னைப் பையனான பிஜோர்ன் சுர்ராவ், தான் விரும்பிய இசையில் சுயமாக வளர்ந்து வந்தவர். அண்மைக் காலமாக இசையைவிட திரைப்படங்களின் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வாய்ப்புகளில் அதிகம் தென்படுகிறார். பிஜோர்ன் பழியாய் கிடந்த இசை தராத பிரபல்யத்தை சினிமா தந்திருக்கிறது.

இவற்றுக்கு மத்தியில் தங்கிலீஷ் பாடலானா ’ஹே பேபி’யை உருவாக்கி, வீடியோவிலும் தற்போது கலக்கியிருக்கிறார் பிஜோர்ன். ’திங்க் மியூசிக் இந்தியா’ வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ ஒரே நாளில் அரை மில்லியன் பார்வைகளை தாண்டியிருக்கிறது. ’உனைப்போல்... உனைப்போல்’ எனத் தொடங்கும் இந்த பாடலுக்காக வண்ணமயமான காட்சியாக்கத்துக்கும் மெனக்கிட்டிருக்கிறார்கள்.

இந்த ஹே பேபி இசை வீடியோவின் கீழ், பிஜோர்ன் சினிமா குறித்த கேள்விகளையே ரசிகர்கள் அதிகம் கேட்டு வைத்திருக்கிறார்கள். டாக்டர் படத்தில் ’ஆம்பள... பொம்பள காமெடி சூப்பர்’ என்ற பாராட்டுகளும், ‘பீஸ்ட்’ திரைப்படம் குறித்த விசாரிப்புகளும் இவற்றில் அடங்கும். சினிமா பிரபல்யம் மூலமாக பிஜோர்னின் தனித்துவ இசை முயற்சிகள் நிறைந்திருக்கும் அவரது பிரத்யேக யூடியூப் பக்கத்துக்கும் பார்வைகள் அதிகரித்திருக்கின்றன.

இன்ஸ்டாகிராம்: மாலத்தீவில் ஆலியா

தென்னக திரைப்படங்களில் வலதுகால் வைக்கும் ஆலியா பட்டின் ஆசை ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வாயிலாக சாத்தியமாகி இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாக்களில் நடித்திருந்தபோதும், ஆலியாவின் பாலிவுட் பிரவேசம் 2012-ல் சாத்தியமானது. அதன் 10 ஆண்டுகள் நிறைவு மற்றும் தனது 29-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் மாலத்தீவில் முகாமிட்டுள்ளார் ஆலியா. அதேவேளையில், பான் இந்தியா படமான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும், அதில் ஆலியாவின் நடிப்பும் வரவேற்பு பெறவே, மாலத்தீவில் ஆலியாவின் மகிழ்ச்சி மேலும் கூடியிருக்கிறது.

மாலத்தீவில் ஆலியா
மாலத்தீவில் ஆலியா

நட்பு வட்டம் அல்லது காதல் துணையுடன் மாலத்தீவு செல்வோர் மத்தியில் தங்கை ஷாஹீன் பட் மற்றும் தாயார் சோனி ரஸ்தான் ஆகியோருடன் மாலத்தீவில் வலம் வருகிறார் ஆலியா. ஷாம்பெய்ன் கோப்பை தளும்ப, மாலத்தீவின் மஞ்சள் வெயிலும், மரகத கடல்வெளியுமாக கொண்டாட்டங்களுக்கு குறைவின்றி கழித்து வருகிறார். நெட்ஃப்ளிக்ஸின் ஸ்பை த்ரில்லரான ’ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ மூலம் இந்த வருடம் ஹாலிவுட்டிலும் தடம் பதிக்கிறார் ஆலியா. அடுத்து வெளியாக உள்ள ‘பிரம்மஸ்திரா’ இந்தி திரைப்படத்தின் வெளியீட்டுக்காகவும் ஆலியா காத்திருக்கிறார். இதில் அமிதாப் பச்சன் மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.

ட்விட்டர்: மீண்டும் மீம்ஸ்களில் வறுபட்ட சொமேட்டோ

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு சமூக ஊடகங்கள் திட்டுக்களை வாங்கிக்கட்டி வருகிறது. ‘சொமேட்டோ இன்ஸ்டன்ட்’ என்ற பெயரில் 10 நிமிடத்தில் அதிவேக உணவு விநியோகத்தை தொடங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்ததே இதற்கு காரணம்,

சொமேட்டோ இன்ஸ்டன்ட் சேவையை இந்தியாவின் பிரதான மாநகரங்களில் ஏப்ரல் முதல் தொடங்க இருப்பதாக அறிவித்தார் அதன் நிறுவனத் தலைவரான தீபிந்தர் கோயல். ட்விட்டரில் அவரது அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் நெட்டிசன்கள் சொமேட்டோவுக்கு எதிராக குமுறித் தள்ளினார்கள். அரை மணி நேர அவகாசத்திலான நடப்பு உணவு விநியோகம் காரணமாகவே, சொமேட்டோ சிப்பந்திகள் கடும் அவதிக்கு ஆளாவதாகவும், அவர்களது விரைவு காரணமாக விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் நீடிக்கின்றன. இந்நிலையில், 10 நிமிடத்தில் டெலிவரி என்பது சிக்கல்களை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்றும் நெட்டிசன்கள் குறைபட்டனர்.

சொமேட்டோ மீம்
சொமேட்டோ மீம்

ஆனபோதும், தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார் தீபிந்தர் கோயல். நாங்கள் இல்லாவிட்டால் போட்டி நிறுவனமொன்று நிச்சயம் 10 நிமிட டெலிவரியை செய்யத்தான் போகிறது என்ற தீபிந்தர், ஊழியர்களுக்கான விபத்துக்காப்பீடு குறித்தெல்லாம் விளக்கமளித்தார். தனது முடிவில் அவர் திடமாக இருக்கவே, சொமேட்டோவின் புதிய ஏற்பாட்டினை மீம்ஸ் வாயிலாக கிண்டல் செய்து, வழக்கம்போல நெட்டிசன்கள் ஆறுதல் அடைந்து வருகின்றனர். இந்த மீம்ஸ்களால் சொமேட்டோ எதிர்பார்த்த இலவச விளம்பரமும் ட்விட்டர் வாயிலாகவே சேர்ந்திருக்கிறது.

முகநூலில் உலாவந்த ஆட்டோகிராஃப்

கௌஹாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த அலுவலர் ஒருவரின் கையொப்பத்தில் எல்லாம் ஆரம்பித்தது. முள்ளம்பன்றியைத் தீட்டிய கணக்காக அவரது அதிசய ஒப்பம் முகநூலில் வைரலானது. அதைப்பார்த்து ஆச்சரியமான பலரும் தங்கள் வசமிருந்த விநோத கையொப்பங்களை முகநூலில் பரிமாற ஆரம்பித்தனர்.

வளைகுடா பின்னணியில் வெளிப்பட்ட ஒருவரின் கையொப்பம் அச்சு அசலாய் அழகான குருவியை சித்தரித்திருந்தது. ஒவ்வொரு முறை கையொப்பமிடும்போதும் அன்னார் எப்படித்தான் அலுக்காது குருவி வரைந்து வைப்பார் என்று தெரியவில்லை. இன்னொருவரின் கையொப்பத்தில் இரட்டைப் பறவைகள் கொஞ்சிக்கொண்டிருந்தன. இன்னும் வாகனங்கள், விநோத விலங்குகள் எல்லாம் கையொப்ப வடிவில் வலம் வந்தன.

கலக்கல் கையொப்பங்கள்
கலக்கல் கையொப்பங்கள்

இந்த பதிவுகளின் தொடர்ச்சியாய் ஆர்வக்கோளாறு பதிவர்கள் பலரும் தங்களது கையொப்பத்தினை முகநூலில் பதிவிட்டு திருப்தியடைந்தனர். இந்த எண்ணிக்கை அதிகமானதில் முகநூல் டைம்லைன் ஆட்டோகிராஃப் புத்தகம் கணக்காக விரிந்தது. பொதுவெளியில் கையொப்பத்தினை பகிர்வதன் அபாயக்கூறுகளை விளக்கி இன்னொருவர் எச்சரிக்கை பதிவிட்ட பின்னரே இந்த போக்கு குறைந்தது.

கையொப்ப பதிவுகள் ஒருவழியாக கையெழுத்து தொடர்பான பதிவுகளாக மாறின. மணிமணியான கையெழுத்து, தொழில் சார்ந்த கிறுக்கல் கையெழுத்து, கணினி மற்றும் ஸ்மார்ட் போன் வருகையால் குறைந்துபோன கையெழுத்து குறித்த ஏக்கம்... ஆகியவற்றை பிரதிபலிப்பதாக பின்னர் முகநூல் பதிவுகள் தொடர்ந்தன.

தத்துவ முத்துக்கள்

1. பேசிப் புரிய வைக்க முடியாத பல விஷயங்களை மௌனம் புரிய வைத்துவிடும் @sankariofficial

2. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பது வெயிலுக்கு பொருந்தாது @Vasanth920

3. நம்மிடம் எத்தனை குறைகள் இருப்பினும், எவரிடமும் நம்மை விட்டுக்கொடுக்காத நேசம் வாய்ப்பது வரம் @pavaay

4. யாருக்காக அல்லது யாருடன் செலவிடுகிறோம் என்பதை பொறுத்து, நேரம் என்பது பொக்கிஷமாகவும் மாறக்கூடும் @paruthi_moottai

5. எந்த தயக்கமும் இன்றி மறுத்துப் பேச முடிகிற நபரிடம், சட்டென ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடுகிறது! @Kozhiyaar

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in