இணைய உலகம்

இணைய உலகம்

நள்ளிரவு பிரியாணிக்கு நல்ல விளம்பரம்

நள்ளிரவு குல்ஃபி ஐஸ் போல திடீரென நள்ளிரவு பிரியாணி விற்பனையும் அதனையொட்டிய புதிய புரளிகளும் அண்மையில் விஸ்வரூபமெடுத்தன. குல்ஃபியில் சேர்க்கப்படும் பாதாமை முன்னிறுத்தி அதன் நள்ளிரவு விற்பனைக்கு விசேஷ காரணம் சொல்வார்கள். ஆனால், பிரியாணி புரளியில் அதற்கு எதிர்திசையில் ஏடாகூடங்களை கிளப்பி விட்டிருந்தார்கள்.

சென்னை, மதுரை போன்ற தூங்கா நகரங்களில் விடிய விடிய சாலையோர உணவகங்களின் தேவை நீடித்திருக்கும். அலுவல் நிமித்தம் இரவில் பணிபுரிவோருக்கு இந்த நள்ளிரவு உணவகங்கள் வரப்பிரசாதம். அவற்றில் சென்னையிலிருந்து பிரியாணி கடைகள் திடீரென்று பிரபலமாயின. மலிவு விலை மற்றும் மட்டுக்குறையாத சுவை காரணமாக இரவுப் பணியாளர்களுக்கு அப்பால், நள்ளிரவு பிரியாணிக்கான காதலர்கள் அதிகரித்தனர்.

மூங்கில், இளநீர் கூடு, மண்பானை என்று தயாரிப்பின் அடிப்படையிலும், திண்டுக்கல், ஆம்பூர், ஹைதராபாத் என்று ஊரின் பின்னணியிலும் அறியப்பட்ட பிரியாணிகளுக்கு மத்தியில், தெருவோர பிரியாணி கடைகளுக்கு திடீர் மவுசு அதிகரித்தன. பொறுக்காத வாட்ஸ் - அப் யுனிவர்சிட்டி பேராசிரியர்கள், பிரியாணிக்கு எதிரான தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமூக ஊடகங்களில் சமர்பித்திருந்தனர்.

அதனை முன்வைத்து, பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு ஏற்படுமா என்ற வினாக்களும், விவாதங்களும் முகநூலில் களைகட்டின. இந்த விவாதங்களின் ஊடாக நள்ளிரவு பிரியாணி கடைகள் குறித்த விளம்பரங்கள் முகநூல் வாயிலாகவே பரவி வருகின்றன. பிரியாணி புரளியாளர்களுக்கு, பிரியாணி விற்பனை மூலம் தொழில்முனைவோர் ஆனவர்கள், மனதார நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

ஊழல் எதிர்ப்பு ஓகே; போதை ஒழிப்பு எப்போது?

ட்விட்டர் இந்தியாவில் திடீர் பிரபலமாக உருவெடுத்திருக்கிறார் பஞ்சாப்பின் புதிய முதல்வரான பகவந்த் மான் சிங். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றது. அதன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பகவந்த் மான், பொறுப்பேற்பதற்கு முன்னரே அதிரடிகளை ஆரம்பித்து இருந்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் பிரதான கொள்கையின்படி ஊழல் எதிர்ப்புக்கான அறிவிப்புகளும் அவற்றில் முதலிடம் பிடித்துள்ளன. இதன்படி அரசு அலுவலர்கள் எவரேனும் தங்கள் கடமையை செய்வதற்கு லஞ்சம் கேட்டால், அது குறித்த ஆடியோ அல்லது வீடியோ ஆதாரத்துடன் நேரடியாக முதல்வரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு பொதுமக்கள் புகார் செய்யலாம். உடனடியாக புகார் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஆக தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் உறுதியளித்திருக்கிறார்.

கேஜ்ரிவாலுடன் பகவந்த் மான் சிங்
கேஜ்ரிவாலுடன் பகவந்த் மான் சிங்

புகார் அளிப்பதற்கான வாட்ஸ் - அப் எண்ணை தனது ஆதர்ஷமான பகத் சிங்கின் தியாகத் திருநாளான மார்ச் 23 அன்று வெளியிடப்போவதாக பகவந்த் மான் ட்விட்டரில் அறிவித்தார். இதற்கு பொதுவெளியில் ஏகோபித்த வரவேற்பு கிளம்ப, பகவந்த் சிங்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை ஒரே நாளில் அதிகரித்தது. அப்படியானவர்கள் பஞ்சாப்பின் பிரதான பிரச்சினை குறித்து ட்விட்டர் வாயிலாகவே முறையிட்டு வருகிறார்கள்.

எல்லையோர மாநிலம் என்பதால் போதைப்பொருட்களின் கடத்தல், விநியோகம், நுகர்வு ஆகியவற்றுக்கு பஞ்சாப் அதிகம் ஆளாகி வருகிறது. தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் இந்த போதை ஒழிப்பு தொடர்பான வாக்குறுதிகளை பாஜக உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்திருந்தன.

ஆனால், ஆஆக சார்பில் பகவந்த் மான் சிங் போதை ஒழிப்பு குறித்து வாய் திறக்கவே இல்லை. தனிப்பட்ட வகையில் குடிபோதையில் சிக்கி, அதன்பொருட்டு பெருமளவில் அரசியல் எதிரிகளால் அவமதிப்புக்கு ஆளானவர் பகவந்த் மான் சிங். இதனால் போதை ஒழிப்பு குறித்து வெளிப்படையாக பேசுவதை தவிர்த்தும் வருகிறார். இந்த நேரத்தில் அவரது பழைய தள்ளாட்ட வீடியோக்களையும் எடுத்துப் போட்டு, ‘இனி, பஞ்சாப்பின் நிலையை யோசித்துப் பாருங்கள்’ என்று சிலர் கிண்டலடிக்கிறார்கள்.

போதையின் பாதையிலிருந்து மீண்டவர் என்பதாலும், போதையின் கொடூரத்தை நிதர்சனமாய் உணர்ந்தவர் என்ற வகையிலும், போதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பஞ்சாப்பின் புதிய முதல்வருக்கு தார்மிக கடமை காத்திருக்கிறது என்று பகவந்த் மான் சிங்கை ட்விட்டரில் பின்தொடர்வோர் அறிவுறுத்தி வருகின்றனர். ஊழலோடு,போதையையும் ஒழிக்க முன்வருவாரா பகவந்த் மான் சிங்?

ரசிகரால் சன்னி லியோன் பரவசம்

இந்திய சினிமாக்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு சன்னி லியோனுக்கு வெளிப்படையான ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக, கேரளாவில் கோயில் கட்டாத குறையாக அதிகளவில் ரசிகர் மன்றங்களும் சன்னி லியோனுக்கு வைத்திருக்கிறார்கள். தனது கேரள பயணத்தின்போதெல்லாம் கடல்போல ரசிகர்களின் வரவேற்பை எதிர்கொண்டு வருகிறார் சன்னி லியோன். அப்படியான ரசிகர் திரள் ஒன்றினை போட்டோ ஷாப் செய்து, தேசியக் கட்சி தலைவருக்கான வரவேற்பாக சித்தரித்து பொதுவெளியில் அம்பலமான சம்பவங்கள் கூட நடந்திருக்கின்றன.

அதிகளவில் இளைஞர்கள் கூடும் நிகழ்ச்சிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிறப்பு விருந்தினராக சன்னி லியோனை அழைப்பதும் அதிகரித்து வருகிறது. அந்த வரவேற்பு தொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகிழ்ச்சியடையும் சன்னி லியோன், அண்மையில் ஒரு வித்தியாசமான வீடியோவினை பகிர்ந்திருந்தார்.

பச்சை குத்திய ரசிகருடன் சன்னி லியோன்
பச்சை குத்திய ரசிகருடன் சன்னி லியோன்

படப்பிடிப்பு தளம் ஒன்றில் தாவணி உடுத்திய சன்னி லியோனை சந்திக்கும் ரசிகர் ஒருவர், தன் கையில் சன்னி லியோன் என்று பச்சை குத்தியிருப்பதை காண்பிக்கிறார். இதனைக் கண்டு ஆச்சரியம் கொள்ளும் சன்னி லியோன், ரசிகருடனான வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து, ‘என்றென்றும் என்னைக் காதலிப்பீர்கள் என்றே நம்புகிறேன். ஆனாலும் தற்போதைக்கு வாய்ப்பில்லை ராஜா... நல்ல மனைவியை கண்டுகொள்ள வாழ்த்துகள்’ என்று ஜாலியாக கமென்ட் செய்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 5 கோடிக்கும் மேலானோர்களால் பின்தொடரப்படும் சன்னி லியோன், அந்த வகையில் இந்தியாவின் இன்ஸ்டா பிரபலங்களின் முதல் வரிசையில் வீற்றும் இருக்கிறார்.

தத்துவ முத்துகள்

1. மனதுக்குள் மகிழ்ச்சி இல்லாதவரை, எவராலும் வெளியிலிருந்து மகிழ்வூட்ட முடியாது @Im_David7

2. வாழ்க்கையை அழகாக்க கடல் போன்ற பெரும் சந்தோஷங்கள் அவசியமில்லை. கால்கள் நனைக்கும் கடலலை போன்ற சின்னச்சின்ன சந்தோஷங்களே போதும் @MadhuBharathi__

3. மனதுக்கு பிடித்தவர்களோடு சண்டையிட்டு விலகியிருக்கும் தருணங்களில், நம் நேசிப்புக்கு அதிகம் ஆளாகிவிடுகிறது இந்த அலைபேசி! @Itz_Rmd

4. சுலபமாய் கிடைக்கும் மன்னிப்புகளே, தவறுகள் சற்றும் குறையாமல் இருப்பதற்கு காரணமாகி விடுகின்றன @Its_kavi2122

5. தேடுவதற்கு ஆள் இல்லை எனும்போது, தொலையாமல் இருப்பதே புத்திசாலித்தனம் @star_nakshatra

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in