ட்விட்டர்: எமோஜிகளில் சேதி சொன்ன ஏ.ஆர்.ஆர்
கடந்த வாரம் தன்னுடைய ஸ்டுடியோவுக்கு வருகை தந்த இளையராஜாவுடன் இணைந்த புகைப்படத்தை பதிவிட்டு இசை ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த வாரம் இன்னும் ஸ்பெஷலாய் தன்னுடைய மனைவி சாய்ராபானு உடனான புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
திருமணமாகி 27 வருடங்களாவதை (மார்ச் 12) முன்னிட்டு தம்பதி சமேதரமாய் காட்சியளித்த அந்த புகைப்படத்தில், இருவரும் தீராத இளமை மற்றும் அந்நியோன்யத்தோடு காட்சியளித்தனர். திருமண நாளை ஒட்டிய இந்த புகைப்படத்துடன், தனது தனி பாணியிலான நறுக் வாசகமும், கூடவே சில எமோஜிக்களையும் இணைத்திருந்தார் ரஹ்மான். இதய எமோஜிக்கு மட்டுமல்லாது இடிமின்னல், மழை, குடை, மலை, தொட்டிச் செடி ஆகியவையும் அந்த எமோஜிக்களில் அடங்கும்.
ரஹ்மானின் இசைக்கோர்ப்பில் சிறு இழைகளை சேர்ப்பது என்றாலும், அதற்கான காரிய காரணங்களோடு கவனமாக அவற்றைக் கோர்த்திருப்பார். ஒவ்வொரு முறை கேட்கும்போதும், கேட்பவரின் மனநிலை மற்றும் சூழலைப் பொறுத்தும், அந்த சிறு இசைத் துணுக்குகள் வெவ்வேறு அனுபவங்களில் ஆழ்த்தும். அதே வரிசையில் இந்த எமோஜிக்களிலும் ரஹ்மான் உணர்த்த வந்த செய்தி குறித்த விவாதங்களும் ட்விட்டரில் கலகலத்தன.
ஒவ்வொரு எமோஜிக்கும் ரஹ்மான் சொல்ல வந்த சேதி இதுதான் என்பதாக தம் புரிதலின் அடிப்படையில் ரசிகர்கள் பொழிப்புரையுடன், ரசிகர்கள் தயாரிப்பிலான வீடியோக்களும் ரஹ்மான் - சாய்ரா மணநாளை மேலும் சிறப்பித்தன.
இன்ஸ்டாகிராம்: சளைக்காத சமந்தா!
கடந்த வாரம் தனது திரையுலகப் பிரவேசத்தின் 12 ஆண்டுகள் நிறைவை மகிழ்வோடு ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார் சமந்தா. ஆனால், நயன்தாராவை நெருக்கும் சம்பளம் மற்றும் குவியும் பட வாய்ப்புகள் குறித்து தனது பதிவுகளில் கவனமாக தவிர்த்திருந்தார் சமந்தா. சொந்த வாழ்வின் சறுக்கல்கள், நெருக்கடிகள் காரணமாக இடையில் சற்றே மன அழுத்தத்தில் இருந்த சமந்தா, ஆன்மிக இளைப்பாறலுக்குப் பின்னர் இன்னொரு சுற்றுக்கு தயாராகிவிட்டத்தை மட்டும் அவரது இன்ஸ்டா பதிவுகள் உரக்கச் சொல்கின்றன.
விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். இந்த படப்பிடிப்பு வெளிகளில், ஜாலி ஜோடியான சிவன் - நயன் உதவியால் முன்னெப்போதையும்விட உற்சாகம் பெற்றிருக்கிறார் சமந்தா. பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என சமந்தா மீண்டும் வர்த்தக வாழ்க்கையில் பிசியாகி இருக்கிறார். அதிலும் சினிமா வாய்ப்புகளைக் கவனமாக தேர்வு செய்வதுடன், ஊதியத்தையும் கணிசமாக உயர்த்தியபோதும், சமந்தாவுக்கான காத்திருப்புகள் குறைந்தபாடில்லை.
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான வசீகரம், நடிப்பிலும் உடுப்பிலும் திடீர் தாராளம், நேர பிசகின்மை, சகலத்தாரோடும் இணக்கம் பாராட்டுவது, அதிகரித்திருக்கும் ரசிக வட்டம் என சமந்தாவின் கிராஃபும் எகிறி வருகிறது. இன்ஸ்டாவிலும் விளம்பர வீடியோக்களை குவித்து வரும் சமந்தா, கவர்ச்சிகரமான ஃபோட்டோ ஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களையும் குளிர்வித்து வருகிறார்.
யூடியூபில் வருமானம் ஈட்டும் நரேந்திர மோடி!
உபி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வாகை சூடியதன் மூலம், 2024 மக்களவை தேர்தல் எதிர்பார்ப்புகளில் நம்பிக்கை வார்த்திருக்கிறது பாஜக. இடையில் குறுக்கிட்ட இடைத்தேர்தல் சறுக்கல்களை சமாளித்து மீண்டிருக்கிறது மோடி - அமித் ஷா கூட்டணியின் வியூகம். இதனையொட்டி சமூக ஊடகங்களில் பாஜகவினரின் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது.
’ரஷ்யாவின் ஆயுத தளவாடங்களுடன் இறக்குமதியான அதி நவீன தொழில் நுட்பங்களே பாஜகவின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம்’ என்று எதிர்தரப்பு நெட்டிசன்களின் கரிப்புகளை கண்டுகொள்வார் இல்லை. இடையில் சற்றே ஓய்ந்திருந்த மோடி புகழ் துதிகள் இணையவெளிகளில் மீண்டும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. பெட்ரோல் விலையுயர்வுக் கவலைகளை மறந்து மோடி புகழ் பாடல் வலுத்து வருகிறது.
உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக புகழப்படும் பிரதமர் மோடியின் சமூக ஊடக கணக்குகளும், அவற்றை பின் தொடர்வோர் எண்ணிக்கையின் அடிப்படையில் அதனை உறுதி செய்கிறது. இதர சமூக ஊடங்களைவிட, யூடியூப் வீடியோக்கள் விளம்பர அடிப்படையில் வருமானத்துக்கும் வழி செய்வதால், இந்தியாவின் அதிகம் சம்பாதிக்கும் பிரபல யூடியூபர்களின் வரிசையில் ஜொலித்து வருகிறார் மோடி. சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான அதிகாரபூர்வ சந்தாதாரர்களும், அதனைவிட அதிகமான பல மடங்கு அதிகமான பார்வையாளர்களுமாக, மாதம்தோறும் சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை மோடியின் யூடியூப் வீடியோக்கள் வருமானம் ஈட்டித்தருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீடியோக்களை உள்ளடக்கி இதர சமூக ஊடக வெளிகள் மற்றும் பிரத்யேக செயலி ஆகியவற்றை பயன்படுத்தியபோதும், யூடியூபின் ரீச் அவற்றில் கிடைத்தபாடில்லை. மேலும், இதர சமூக ஊடகங்களைவிட, பாமரர் மத்தியிலும் யூடியூப் வீடியோக்கள் சுலபமாய் சென்றடைவது தெரிய வந்துள்ளது. எனவே, மோடியின் உரைகளை ’டப்’ செய்தும், சப் டைட்டில் வசதிகளுடனும் யூடியூபில் பதிவேற்ற திட்டமிட்டுள்ளனர். மோடி உரையின் பிரதான கருத்துக்கள் அடங்கிய வீடியோ நறுக்குகள் இதன்பொருட்டு தொகுக்கப்பட்டு வருகின்றன. 2024 தேர்தலை குறிவைத்து பரப்பப்படவிருக்கும் இந்த குறு வீடியோக்கள், இந்தி அறியாத தென்னக மாநிலங்களில் மோடியை இன்னும் அதிகமாக கொண்டுபோய் சேர்க்கும் என்றும் கணித்திருக்கிறார்கள்.
இவ்வாறான வீடியோக்களை பொதுஜனத்தின் பார்வைக்கு உறுதி செய்ய, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணிகள் முழுமூச்சுடன் களமிறங்க உள்ளன. அப்போது மோடியின் யூடியூப் இன்னும் செல்வாக்கு மிக்கதாக மாறக்கூடும். ஆனபோதும் யூடியூப் வருமானத்தை பொறுத்தவரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போன்றவர்கள், யூடியூபில் பிரதமர் மோடியைவிட அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்ற கொசுறுத் தகவலும் உண்டு.
தத்துவ முத்துகள்
1. பிழைக்கத் தெரிந்தவர்களாலே தான் பிழைத்துக் கிடக்கிறது இவ்வுலகம் @star_nakshatra
2. பிறரிடம் குறைகளையே தேடுவது மிகப்பெரும் வன்முறை @THARZIKA
3. தெரிந்து கொண்டேன் என்பதைவிட, தெளிந்துவிட்டேன் என்பதே அனுபவம் @FilmFoodTravel
4. ஒப்பிட எதுவும் இல்லாத போது, இங்கு எல்லாமே அழகு @yaadhu143
5. இளைப்பாறும் தூரத்துப் பறவைக்கு ஒற்றை மரம் பெருங்காடாகி விடுகிறது @Aara_Dad