இணைய உலகம்

கேண்டி
கேண்டி

யூடியூப்: நாகஸ்வரத்தில் சுண்டியிழுக்கும் கேண்டி

யுவனிசத்தின் வெள்ளி விழா ஆண்டில் ரசிகர்களுக்கு ’கேண்டி’ மூலமாக இன்னொரு இனிக்கும் இசை தந்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

ராஜாவின் பெயர் சொல்லும் பிள்ளை, தனக்கான ராஜபாட்டையில் பீடுநடை போட்டு வருகிறார். 16 வயதில் இசைக்கத் தொடங்கிய யுவன், பிசிறில்லாது 25 வருடங்களாக ரசிகர்களை வசீகரித்து வருகிறார். இந்த வரிசையில் மார்ச் 3 அன்று இவரது தனி இசைப்பாடலாக கேண்டி வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா

பாலிவுட் பாப் பாடகி த்வானி பன்சாலியை முன்னிறுத்தும் இந்த மியூசிக் வீடியோவில், யுவனின் ராஜாங்கமே பிரதானமாய் ஆள்கிறது. மேற்கத்திய இசையில் கோர்வைகளில் இந்திய மரபு இசைக் கருவிகளை பயன்படுத்தும் நவீன தொனியில், இந்த பாடலில் நாகஸ்வரத்தை வித்தியாசமாக கையாண்டிருக்கிறார் யுவன். துள்ளலிசையில் பொருத்தமான இடங்களில் எல்லாம் நாகஸ்வரம் வியப்பில் ஆழ்த்துகிறது.

இந்தி மற்றும் தமிழில் வெளியாகி இருக்கும் இந்த மியூசிக் வீடியோவில், தமிழுக்கான பாடலை ’தெருக்குரல்’ அறிவு பாடியிருக்கிறார். இரண்டிலும் த்வானி பன்சாலி பாடியிருக்கிறார். அரங்க வடிவமைப்பு, உடையலங்காரம் என எல்லாமே பாடலின் தலைப்பை பிரதிபலிக்கும் வகையில் பஞ்சு மிட்டாய் நிறத்தில் கண்களை கவர்கின்றன. இடையிடையே படு ஸ்டைலிஷாக யுவனும் தோன்றி ’அட..’ போட வைக்கிறார்.

யுவனின் திகட்டாத இசையில், இளசுகளை லூப் மோடில் செவிகளால் ருசிக்க வைத்திருக்கிறது ’கேண்டி’.

இன்ஸ்டாகிராம்: உக்ரைன் அதிபரின் அறைகூவல்

இளைஞர்களின் ரசனைக்கும், கொண்டாட்டத்துக்குமான தளமாக விளங்கும் இன்ஸ்டாகிராம், உக்ரைன் போரை முன்னிட்டு உக்கிரம் பெறத் தொடங்கியது. இன்ஸ்டாவில் சஞ்சரிக்கும் புத்தாயிரத்தில் பிறந்தவர்களை சாட்சியாக்கி நடக்கும் முதல் சர்வதேசளவிலான போர் என்பதால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் கோரத்தாண்டவம் அவர்களை உலுக்கி எடுத்திருக்கிறது.

சர்வதேச நாடுகளால் தாங்கள் நிர்கதியாய் விடப்பட்டோம் என்பதை உலக மக்களுக்கு உக்ரைன் சொல்லவும் இன்ஸ்டாகிராம் உதவி வருகிறது. சர்வதேச தலைவர்கள், நட்சத்திரங்களுக்கு போட்டியாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி இன்ஸ்டாவின் திடீர் பிரபலமானார். சுமார் ஒன்றரை கோடி பேர் ஸெலன்ஸ்கியின் அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஸெலன்ஸ்கியும் அதனை சரியாக பயன்படுத்தி வருகிறார். சர்வதேச சமூகத்துக்கான அவரது செய்திகள் உடனுக்குடன் இன்ஸ்டாவில் வலையேறுகின்றன. அதிபரின் அன்றாடங்கள், சர்வதேச நாடுகளுக்கான அவரது அறைகூவல்கள், ரஷ்யாவின் கோரத் தாக்குதல்கள் குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இங்கே அதிகம் பகிரப்படுகின்றன.

ஸெலன்ஸ்கி
ஸெலன்ஸ்கி

தூக்கம் தொலைத்த விழிகள், கவலையும் உறுதியும் தொனிக்கும் வார்த்தைகள், தீர்க்கமான பார்வை ஆகியவற்றுடன் ஸ்லென்ஸ்கி ஆற்றும் பிரத்யேக உரையாடல், ஆங்கில சப்டைட்டிலுடன் காணக் கிடைக்கிறது. ஒரு அதிபர் போலன்றி மிக எளிமையான அவரது அணுகுமுறையும், உரையாடலும், தோற்றமும் இளைஞர்களை அதிகம் ஈர்க்கிறது.

மார்ச் 4 அன்று ’ஐரோப்பியர்களே விழித்தெழுங்கள்’ என்ற தலைப்பில் ஸெலன்ஸ்கி ஆற்றிய உரையும் இதில் சேரும். ஐரோப்பாவின் மிகப்பெரும் அணு உலையான செர்னோபில் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உட்பட உக்ரைனின் 15 அணு உலைகளுக்கான அச்சுறுத்தலை முன்வைத்து ஸெலன்ஸ்கி இந்த வீடியோவில் உரையாற்றினார். ஐரோப்பியர்களை நோக்கிய வழக்கமான இறைஞ்சுதலாக இல்லாது; உக்ரைன் அணு உலை மீதான தாக்குதல், ஐரோப்பாவை சுடுகாடாக்கும் என்ற எச்சரிக்கையே இதில் வெளிப்பட்டது. ஸெலன்ஸ்கி எதிர்பார்த்தது போலவே அவரது உரையை முன்வைத்து, ஐரோப்பிய அரசியல்வாதிகளை ஐரோப்பியர்கள் நெருக்க ஆரம்பித்துள்ளனர்.

ட்விட்டர்: அஜித் ரசிகர்களின் அரசியல்

அரசியலில் குதிக்கிறார் அஜித் குமார் என்பது இந்த வாரத்திய ட்விட்டர் அக்கப்போர்களில் ஒன்றானது.

‘வலிமை’ வெளியான நாள் முதலே அஜித்தை மையமாக வைத்து நெட்டிசன்கள் நிமிடத்துக்கு ஒரு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்தனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளில் (பிப்.24) ‘வலிமை’ வெளியானதன் மூலம் தனது அரசியல் சமிக்ஞையை அஜித் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கொளுத்திப் போட்டார்கள். ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் இதனை பொதுவெளியில் பகிர்ந்ததும், அஜித் ரசிகர்கள் பற்றிக்கொண்டனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வழிமொழிந்ததில் இன்னும் பரபரப்பு எகிறியது.

அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ட்விட்டரில் பகிர்ந்த லேட்டஸ்ட் அஜித் - ஷாலினி படம்
அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ட்விட்டரில் பகிர்ந்த லேட்டஸ்ட் அஜித் - ஷாலினி படம்

அஜித் - ஷாலினி திருமணத்தில் ஜெயலலிதா வருகைக்கு முன்னுரிமை தந்தது, கருணாநிதி முன்பாக பொதுமேடையில் அஜித் கொந்தளித்தது என்று ஆரம்பித்து அஜித்துக்கு அதிமுக சாயம் பூச ஆரம்பித்தார்கள். அஜித் குறித்த அரசியல் சார்பு செய்திகளில் உண்மையில்லை என அவர் சார்பாக மேனேஜர் சுரேஷ் சந்திரா மறுப்பு விடுத்த பிறகும் ரசிகர்களின் ஆவலாதி அடங்கியபாடில்லை.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்களது வெற்றியைக் கொண்டாடி தீர்த்தபோது, அரசியலில் அஜித் என்பது புரளியாயினும் ஏகே ரசிகர்களுக்கு ஆறுதல் தரவே செய்தது.

அரசியல் மட்டுமல்ல, அஜித் தனது அடுத்த திரைப்படத்துக்கான புதிய கெட்டப்பில் குடும்பத்தினரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வலிமை திரைப்படம் குறித்த புளூசட்டை மாறனின் சர்ச்சை விமர்சனம் ஆகியவற்றை முன்வைத்தும், ரசிகர்கள் கொண்டாடவும், திட்டித்தீர்க்கவும் செய்தார்கள்.

தான் நடித்த திரைப்படத்தின் புரமோஷக்கே வர முடியாது அடம் பிடிக்கும் அஜித்தா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பொதுவான சினிமா ரசிகர்களின் கேள்விக்கு அஜித் ரசிகர்களிடம் பதில் இல்லை.

தத்துவ முத்துக்கள்

1. நமக்கு நாமே ஆறுதல் கூறும் பக்குவம் வாய்த்திருப்பின் அனைத்தையும் கடந்து விடலாம் @wings_twitz

2. கடந்து வந்த பாதையை அவ்வப்போது திரும்பிப் பார்ப்பது நல்லது. கை கொடுத்தது யார், கால் வாரியது யார் என்பதை அப்போதுதான் உணர்ந்து கொள்ள முடியும் @queentwtz

3. டைம் பாஸுக்காக நாம் உருவாக்கின டிவி, போன் மாதிரி, கடவுள் தன்னோட டைம்பாஸ்க்கு நம்மை உருவாக்கி விட்டிருப்போரோ..? @Rajucute_7

4. ஏற்றுக்கொள் அல்லது மாற்றிக்கொள்! அம்புட்டு தாங்க வாழ்க்கை @MadhuBharathi__

5. உலகின் அழகெல்லாம் மனதுக்குப் பிடிப்பதில்லை. ஆனால், மனதுக்குப் பிடித்ததெல்லாம் மிகவும் அழகாய் தெரியும் @star_nakshatra

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in