இணைய உலகம்

ட்விட்டரை விழுங்க முயலும் எலான்!
இணைய உலகம்

அதிரடி நடவடிக்கைகளால் தன்னை எப்போதும் ட்ரெண்டிங்கில் முன்னிறுத்துவதில், உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்குக்கு அலாதியான ஆர்வம் உண்டு. ட்விட்டரில் தனது 82 மில்லியன் ஃபலோயர்ஸ் உடன் எப்போதும் தொடர்பில் இருப்பதை விரும்பும் எலான் மஸ்க், அவ்வப்போது அவர்களின் விருப்பங்களைக் கருத்துக்கணிப்பு வாயிலாக அறியவும் விழைவார்.

அந்த வகையில் அண்மையில், ‘ட்விட்டரில் பேச்சுரிமைக்கு வாய்ப்பு உள்ளதா?’ என்று ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார் எலான் மஸ்க். அவர் எதிர்பார்த்தது போலவே 70 சதவீதத்தினர் ’இல்லை’ என்ற பொத்தானை அழுத்தியிருந்தனர். இதையொட்டிய தொடர் உரையாடலில், ’முன்மாதிரி சமூக ஊடகம் ஒன்றை உருவாக்கப்போவதாக’வும் அறிவித்தார்.

இப்படித்தான், தனது கருத்துகளை இருட்டடிப்பு செய்வதாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டருக்கு எதிராகப் பொங்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், ’ட்ரூத் சோஷியல்’ என்ற சமூக ஊடக தளத்தை ஆரம்பித்து கையைச் சுட்டுக்கொண்டார். எனவே, சகலரும் எலானின் புதிய சமூக ஊடகம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்திருக்க, அவரோ, ’ஒட்டுமொத்தமாய் ட்விட்டரை வாங்கப் போகிறேன்’ என்று அதிரடித்தார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

முன்திட்டத்துடன் நடப்பாண்டின் தொடக்கம் முதலே ட்விட்டரின் பங்குகளை விழுங்க ஆரம்பித்திருந்த எலான் மஸ்க், தற்போது சுமார் 7.3 கோடி பங்குகளுடன் ட்விட்டரின் தனிப்பெரும் முதலீட்டாளராக தன்னை முரசறைந்துள்ளார். இந்த ட்விஸ்டை எதிர்பாராத ட்விட்டர், மென்று முழுங்கியவாறு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர எலானுக்கு ஓலை அனுப்பியது. அந்த வாய்ப்பை நிராகரித்திருக்கும் எலான் மஸ்க், ட்விட்டரை செரிப்பதற்கான இன்னபிற திரைமறைவு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறார்.

இதற்கு எதிராக ட்விட்டரும் தன்னால் இயன்ற ஆகப்பெரும் பிரயத்தனங்களில் இறங்கி உள்ளது. எலான் மஸ்க் - ட்விட்டர் இடையிலான இந்த மோதலில், ட்விட்டர் தளத்தில் பல கவர்ச்சிகரமான அம்சங்களின் அறிமுகம் மற்றும் மெருகேறல்கள் அரங்கேறி வருவதால் கீச்சுலகம் மகிழ்ச்சி கொண்டிருக்கிறது.

யூடியூப்: வசமாய் சிக்கிய வாஸ்து; வெச்சுச் செஞ்ச ஜிகே

வறட்டுப் பொழுதுபோக்கு மற்றும் வம்பு புரளிகளுக்குப் பிரபலமான யூடியூப் வீடியோக்களின் மத்தியில், பார்வையாளர்களையும் அவர்களின் நேரத்தையும் மதித்து உருப்படியான பதிவுகளை வழங்கும் சானல்கள் அரிது. அப்படி பார்வையாளர்களின் அறிவுப் பசிக்கு விருந்தளிக்கும் சானல்களில் ஒன்று மிஸ்டர்.ஜி.கே!

நிரூபிக்கப்பட்ட அறிவியல் கூற்றுகளின் அடிப்படையில், அன்றாட வாழ்வியலில் தொடங்கி சிக்கலான விஞ்ஞானக் கோட்பாடுகள் வரை மிஸ்டர்.ஜி.கே என்பவர் இந்த சேனலில் தர்க்கபூர்வமாய் விளக்குவார். குவாண்டம் இயற்பியல் முதல் ஏலியன்கள் வரை இவர் அலசாத அறிவியல் மற்றும் வரலாற்று தலைப்புகள் குறைவு. அனைத்து வயதினர் மத்தியிலும் பார்வையாளர்களை ஈர்த்திருக்கும் மிஸ்டர்.ஜி.கே அவ்வப்போது தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்பதுண்டு.

மிஸ்டர்.ஜி.கே
மிஸ்டர்.ஜி.கே

அப்படி அண்மையில் பங்கேற்ற ’வாஸ்து உண்மையா?’ என்ற விவாத மேடையில் மிஸ்டர். ஜி.கே உரையாற்றியதன் பெரும்பகுதி துண்டாடப்பட்டிருந்தது. அதற்கான குறைபடலில் அலட்டிக்கொள்ளாத ஜி.கே, தனது யூடியூப் சேனல் வாயிலாக பார்வையாளர்களுக்குச் சென்று சேர்ந்தாக வேண்டிய அறிவியல் விளக்கங்களை அளித்துள்ளார். அப்படி மிஸ்டர். ஜி.கே வெளியிட்ட பதிவை இந்த வாரத்தின் ட்ரெண்டிங் வீடியோக்கள் வரிசையில் யூடியூப் நிர்வாகம் சேர்த்துள்ளது.

அறிவியலுக்கு எதிரான, மூட நம்பிக்கை சார்ந்த சகல வஸ்துக்களையும் வைத்து செய்யும் மிஸ்டர். ஜி.கே, இந்த வீடியோவில் வாஸ்துவைப் பிரித்து மேய்ந்திருக்கிறார். கருத்தளவில் எதிர்வரிசையில் இருப்போருக்கும் மதிப்பளித்து அறிவியல்பூர்வமாக வாதிடும் மிஸ்டர்.ஜி.கே-யின் இந்த வீடியோவும் வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம், பள்ளிப் பருவ பிள்ளைகள் முதல் பழமையில் ஊறிய பெரியவர்கள் வரை பலரது அறிவுக் கண்களைத் திறக்கும் இவரது இதர வீடியோக்களும், பொதுவெளியில் மீண்டும் கவனம் பெற்றிருக்கின்றன.

ஃபேஸ்புக்: இளையராஜாவும் பின்னே பாக்யராஜும்!

’தமிழணங்கு’ படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்ததன் மூலம் சமூக ஊடகங்களில் தேசியளவிலான பெரும் விவாதம் உருவானது. இசைப்புயலால் எழுந்த இந்த ஆரவாரம் அடங்குவதற்குள், இசைஞானியை மையங்கொண்ட அடுத்த சமூக ஊடகப் புயல் புறப்பட்டது. பிரதமர் மோடி குறித்த நூல் ஒன்றில் அவரை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா அளித்திருந்த அணிந்துரையால் ஃபேஸ்புக் அமளிதுமளியானது.

இசையின் கடவுளென இளையராஜாவை துதித்து வந்தவர்கள்கூட வசைபாடத் தொடங்கினார்கள். அமலாக்கத்துறை விசாரணைகளின் அழுத்தம் காரணமாகவே இளையராஜா இவ்வாறு மோடி புகழ்பாடியிருக்கிறார் என்பதில் தொடங்கி, ராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி முதல் குடியரசுத் தலைவர் பதவி வரையிலான அனுகூல ஆருடங்களையும் வாரியிறைத்தனர்.

பொதுவெளியில் இதுவரை சந்திக்காத சீற்றத்தை எதிர்கொண்ட போதும், இளையராஜா தனது நிலையில் பின்வாங்காதிருந்தார். ஆனால், அவரை ஆதரிக்கிறோம் பேர்வழியென சில பாஜகவினர் தங்கள் பங்குக்கு இளையராஜா புகழுக்கு இழுக்கு சேர்க்க, நிஜமான ராஜா ரசிகர்கள் சங்கடத்தில் தவிக்க ஆரம்பித்தனர்.

பெரியார் சிலையுடன் பாக்யராஜ்...
பெரியார் சிலையுடன் பாக்யராஜ்...

பிரதமர் மோடியை புகழும் நோக்கில் இயக்குநர் பாக்யராஜ் திருவாய் மலர்ந்ததில், இளையராஜாவுக்கு எதிரான சர்ச்சைகள் மடை மாறின. தேசியளவில் புகழ்பெற்ற இந்த திரைக்கதை வசனகர்த்தா, ‘குறைப் பிரசவம்’ சொல்லாடல் காரணமாக வலிய வந்து சர்ச்சை வலையில் சிக்கினார். எதிர்வினையாக எழுந்த எதிர்ப்பின் உக்கிரம் தாங்காத பாக்யராஜ், உடனடியாக மன்னிப்பு கேட்டதோடு, பாஜவுடனான தொடர்பையும் மறுதலித்தார். பாக்யராஜின் தன்னிலை விளக்க வீடியோவில், வழக்கத்துக்கு மாறாக அவருடன் இடம்பெற்றிருந்த சிறிய பெரியார் சிலை ஒன்றும் நிறைய சேதிகளை விளக்கியது.

பொதுவெளி விமர்சனங்களுக்குத் தயாராக இருப்போர் மட்டுமே கருத்துரிமையின் பெயரால் வாய் திறக்க முடியும் என்பதை, முன்னெப்போதும் இல்லாத வகையிலான இந்த வலைதள காலம் வலியுறுத்துகிறது. இளையராஜா முதல் பாக்யராஜ் வரை ஆகிருதிகள் எவரும் இதில் விதிவிலக்கல்ல.

தத்துவ முத்துக்கள்

1. இயற்கையை ரசிக்க மெதுவாகச் செல்; இயற்கை எய்த வேகமாகச் செல் #சாலை விதி @urs_venbaa

2. பொருந்தாத முகமூடிகளை அணிவதாலே, இங்கு பலரின் கோர முகங்கள் வெளிப்பட வாய்ப்பாகின்றன @its_saraa_ram

3. எது ஒன்று நம்மை அதிகமான தேடல்களுக்கு இழுத்துச் செல்கிறதோ அதில் நிலை பெறுவதே நல்லது! @murugan_itz

4. பிழைத்தலுக்கான பிரயாசையில் இழந்து தொலைக்கிறோம் வாழ்தலை! @star_nakshatra

5. சிரித்த நாட்களை நினைத்து அழ வைப்பதில் நட்புக்கே முதலிடம் @TRAMESH21548526

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in