
சிரஞ்சிவி நடிக்கும் ’ஆசார்யா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தைத் தொடர்ந்து ஆசார்யாவும் வெளியீட்டுக்கு முன்பே தனது வெற்றியை முரசரைந்திருக்கிறது.
கரோனா காரணமாக முடங்கிக் கிடந்த மெகாபட்ஜெட் திரைப்படங்கள் ஒவ்வொன்றாக திரையரங்குகளை ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்த ஆசார்யாவும் அடங்கும். ஆர்ஆர்ஆர் போலவே ஓடிடியை நிராகரித்து நேரடி திரையரங்க வெளியீட்டில் தீர்மானமாக இருந்த ஆசார்யா, கடைசியில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்துடன் களத்தில் மோத வேண்டியதாயிற்று. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஒரு மாதம் தள்ளி ஏப்ரல் 29 வெளியீட்டுக்கு முடிவானது ஆசார்யா. இரண்டு திரைப்படங்களிலும் நடித்திருக்கும் ராம்சரண் இந்த சுமுக முடிவுக்கு காரணமானார்.
ஆசார்யாவில் கவுரவ பாத்திரத்தில் தோன்றுவதாக இருந்த மகேஷ் பாபு கடைசியில் பின்வாங்க, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் அந்த வேடத்துக்கு முடிவானார். தந்தையும், மகனும் கைகோக்கும் கதை என்றதும், ராம்சரணுக்கான கவுரவ வேடத்தை இன்னொரு நாயகனாக இயக்குநர் கொரட்டல்லா சிவா விரிவாக்கினார். இது படத்துக்கான எதிர்பார்ப்புகளை இன்னும் எகிறச் செய்திருக்கிறது. பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 12-ல் வெளியானதும் யூடியூப் இந்தியா டிரெண்டிங்கில் முன்நின்றது.
தென்னகத்துக்கு அப்பால் வட இந்திய பார்வையாளர்களும் ஆசார்யா ட்ரெய்லரை புகழ்ந்து ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். ட்ரெய்லரில் இடம்பெறும் கோயில்கள், வழிபாடுகளைப் பார்த்து சிலிர்த்தவர்களாக, இந்திய பண்பாடு, மத வழிபாட்டை தென்னிந்தியர்களே உணர்ந்து பின்பற்றுவதாக புகழ்ந்து வருகிறார்கள்.
கவிஞரும், கலாச்சார செயற்பாட்டாளருமான சுப்பாராவ் ஆந்திராவில் முன்னெடுத்த நக்சலைட் இயக்கத்தை மையமாகக் கொண்ட கதையே ஆசார்யா என்பதை படம் வெளியான பிறகே வட இந்தியர்கள் அறிய நேரிடும். அப்போது தங்கள் நிலைப்பாட்டில் அடியோடு அவர்கள் மாறவும் நேரிடலாம். தென்னிந்தியர்களின் அரசியல், கலாச்சாரம், மொழி மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவின் போக்கும் வடக்கர்களுக்கு அத்தனை எளிதில் பிடிபடாதது போலிருக்கிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.