இணைய உலகம்

இன்ஸ்டாகிராம்: ரவுண்டு கட்டும் ராஷ்மிகா
தளபதி 66 பட பூஜையில்...
தளபதி 66 பட பூஜையில்...

இந்த வாரம் கொண்டாடிய 26-வது பிறந்தநாள், தனது வாழ்க்கையில் மறக்க முடியாததாகிவிட்டது என சிலிர்க்கிறார் ராஷ்மிகா மந்தனா. ஆம், பிறந்தநாள் பரிசாக, பெயரிடப்படாத அடுத்த விஜய் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகும் அறிவிப்பு வெளியாகி ராஷ்மிகாவை அத்தனை உற்சாகம் கொள்ளச் செய்திருக்கிறது. அந்த திரைப்படத்துக்கான பூஜை நிகழ்வில், ஒரு ரசிகையின் குதூகலத்துடன் விஜய்யுடன் குலாவிய ராஷ்மிகா, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமிலும் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.

”சார் படங்களை பார்த்து ஆண்டுக்கணக்கில் காத்திருந்த நானும் இப்போது அவருடன் நடிக்கப் போகிறேன்; நடனமாடப் போகிறேன், வசனம் பேசப்போகிறேன்... கடைசியில் எல்லாம் நிறைவேறப்போகிறது...” என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். பூஜை நிகழ்வில் ராஷ்மிகாவின் குழந்தைத்தனமான சேட்டைகளும், விஜய்க்கு கண்ணேறு பாணியில் அவர் நெட்டி முறித்ததும், அதற்கு விசேஷமான விஜய்யின் வெட்கச் சிரிப்புமான புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் தனியாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

‘புஷ்பா’ வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகாவின் கிராஃப் ஏறுமுகத்தில் இருக்கிறது. தமிழில் விஜய்யுடன் கைகோர்த்திருப்பவர், பாலிவுட்டிலும் வலதுகால் வைத்திருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா உடன் இணையும் ’மிஷன் மல்ஹோத்ரா’ முன்னிற்க, அமிதாப் உடனான ’குட்பை’, ரன்பீர் கபூருடனான படம் என மேலும் 2 படங்களில் ராஷ்மிகாவின் பாலிவுட் கனவுகள் காத்திருக்கின்றன. தனக்கும் கண்ணேறு கழித்திருப்பாரா ராஷ்மிகா?

யூடியூப்: பள்ளி மாணவர்களை சிதறடிக்கும் சேனல்கள்

கரோனா தாண்டவத்தால் 2 ஆண்டுகளாக பள்ளிகளை மறந்த மாணவர்கள், இந்த கல்வியாண்டின் பாதியில்தான் நேரடி வகுப்பறை கல்வியை பெற முடிந்தது. பொதுத் தேர்வுக்கான கால நீட்டிப்பு, பாடப்பகுதிகள் பாதியாய் குறைப்பு என தமிழக அரசும் தாயுள்ளத்தோடு பள்ளி மாணவர்களை அரவணைத்து தேர்வுக்கு தயார் செய்து வருகிறது.

ஆனால் ஒரு சில யூடியூப் சேனல்கள், விவரமறியா பள்ளி மாணவர்களின் கவனத்தையும், ஆர்வத்தையும் சிதறடித்து வருகின்றன. பொதுத்தேர்வுகள் மேலும் தள்ளிப்போகும் என்றும், தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் திட்டமிட்டு பொய்ச் செய்திகளையும் வதந்திகளையும் பரப்பி வருகின்றன. இவற்றை நம்பி ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பை மறந்துவிட்டு இந்த சேனல்கள் அன்றாடம் வலையேற்றும் பம்மாத்து வீடியோக்களுக்காக காத்திருக்கின்றனர்.

இந்த விட்டில்களில் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களே அதிகம் தென்படுகின்றனர். வருமான நோக்கிலான வீடியோக்களின் பார்வைகள் அதிகரிப்புக்காக, மாணவர்களின் கிலேசத்தை இந்த சேனல்கள் அதிகரித்து வருகின்றன.

வினாத்தாள் கசிவு தொடங்கி, தடம்புரளும் ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கை வரை வேகம் காட்டும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த யூடியூப் அட்ராசிடிகளுக்கு எதிராகவும் உரிய நடவடிக்கை எடுப்பது நல்லது. அமைச்சர் அன்பில் மகேஷை சந்திப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாயிலாக அழுத்தம் கொடுப்பதாகவும் இந்த சேனல்கள் அவ்வப்போது பொய்களை பரப்பி வருவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.

அரசு சார்பிலான அதிகாரபூர்வமான எச்சரிக்கை, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கி சிறு அறிவிப்போ, காவல்துறை சார்பிலான ஓர் எச்சரிக்கையோ வெளியானால் இந்த யூடியூப் சேனல்களின் கொட்டம் அடங்கும். தங்கள் சுயலாபத்துக்காக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் யூடியூப் சானல்களுக்கு கடிவாளம் இடப்படுமா?

விக்கித்த விஜய் ரசிகர்கள்

தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவிருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்துக்காக சமூக ஊடகங்களில் தீவிரமாக களமாடி வரும் விஜய் ரசிகர்களுக்கான விசித்திர சோதனைகள் ஏராளம். ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் கதை குறித்த சாடல்களுடன், முழுக் கதையும் ட்ரெய்லரில் வெளியானது குறித்த கிண்டல்களையும் ஒருவாறாக சமாளித்து வருகின்றனர். ஆனால் ‘விக்’ அணிந்தவாறே நடிகர் விஜய் வெளியுலகிலும் நடமாடுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு விஜய் ரசிகர்களால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை.

தொலைக்காட்சி பேட்டியில் விஜய்...
தொலைக்காட்சி பேட்டியில் விஜய்...

சமூக ஊடகங்களில் வரிந்துகட்டும் ரசிக கண்மணிகளில் பெரும்பாலானோர் இளவட்டத்தினர் என்பதால், தலையில் கேசம் குறைவதை சாமி குத்தம் என்பதுபோல பரிகசிக்கிறார்கள். அப்படி, ‘பீஸ்ட்’ ட்ரெயிலரில் தொடங்கி சன் டிவி பேட்டி வரை விஜய் தலையில் இருக்கும் கேசம், நிஜமா அல்லது செயற்கையா என்ற வாதம் வலுத்து வருகிறது. அது விக் அல்ல இம்பிளான்ட் செய்யப்பட்ட கேசக் கற்றை என்ற விளக்கத்தையும்கூட விஜய் ரசிகர்கள் நிராகரித்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்களை பிராண்டும் ரசிக குஞ்சுகளில் ரஜினி ரசிகர்களும் இணைந்து கொண்டது, விஜய் ரசிகர்களை வேறு வகையில் சீண்டி வைத்தது. சினிமாவில் விக் உடன் நடிக்கும் ரஜினிகாந்த், வெளிநிகழ்வுகளில் விக் இன்றி வலம் வருவதை, படம் மற்றும் வீடியோவாக பகிர்ந்து ரஜினி ரசிகர்களும் சதாய்க்க ஆரம்பித்தனர். ரஜினி ரசிகர்களின் இந்த விவாதங்களால் விக்கித்த விஜய் ரசிகர்கள், ரஜினியின் பொய்த்த அரசியல் புறப்பாட்டை நக்கலடிக்க ஆரம்பித்தனர். ட்விட்டர் நெடுக, விக் அணிந்த, ’ஹேர் இம்பிளான்ட்’ செய்துகொண்ட, இயல்பான கேசம் கொண்ட என விதவிதமான உதாரண படங்கள் பகிரப்பட்டு விஜய் ரசிகர்களை ரணமாக்கி வருகின்றன.

இதற்கிடையே, கல்பாத்தி இல்ல திருமண விழாவில் விஜய் – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு தொடர்பான படங்களை பகிர்ந்தும் ’விக்’ தொடர்பான விவாதங்கள் வேறு திசையில் வேகம் பிடித்தன. இந்த விக் தவிர்த்தும் பல்வேறு அரசியல் விவகாரங்களில் விஜய் ரசிகர்களின் விவாதங்கள் எல்லை மீறுவதை தவிர்க்க, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பகிரங்க எச்சரிக்கை விடுத்தும் ரசிகர்களின் வேகம் தணிந்தபாடில்லை.

தத்துவ முத்துகள்

1. சில நேரங்களில் விரும்பிய ஒன்று கைகூடாதுபோவதை, பின்னாளில் அதிர்ஷ்டம் என்றும் அர்த்தம் கொள்ள நேரிடலாம் @asdbharathi

2. அதீத எதிர்பார்ப்புகள் எனும் சுமையை இறக்கிவைத்தால், வாழ்க்கைப் பயணத்தில் சுகம் கூடும் @sasitwittz

3. வார்த்தைகள் மட்டுமல்ல, பிறரைக் காயப்படுத்தாத மௌனமும் சிறந்ததே @2wings_twitz

4. புரிதல் உள்ள உறவுகள் மத்தியில் பிரிதல் என்பதற்கு இடமில்லை @Im_David7

5. அன்பு பெருக்கெடுத்து வரும்போது மனதையும், அதில் அளவு குறையும்போது மூளையையும் பயன்படுத்தினால் வாழ்க்கையில் வலிகள் குறையும் @pandi_prakash

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in