
தமிழகத்தின் நட்சத்திர யூடியூபர்களில் ஒருவர் முகமது இர்ஃபான். தனது ’இர்ஃபான்ஸ் வியூ’ சேனல் வாயிலாக நடைபாதை உணவகங்கள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை, உணவு ரகங்களை சுவைத்து அந்த அனுபவத்தை வீடியோவாக்கி பிரபலமானவர். உணவு ரகங்களைக் காட்டிலும் அதை ரசித்து ருசித்து, சிலாகிக்கும் இர்ஃபானின் அங்க சேட்டைகளுக்காகவும் தனியாக ரசிகர்கள் உண்டு.
சர்வதேச உணவு ரகங்களுக்காக விமானமேறி வெளிநாடுகளுக்குப் பறக்கும் அளவுக்கு யூடியூபில் சம்பாதிக்கவும், செலவிடவும் துணிந்தவர். வீடியோவுக்காக ஏடாகூடமான அசைவ ரகங்களை விழுங்கி மருத்துவமனையிலும் அனுமதியான அனுபவங்களும் இர்ஃபானுக்கு உண்டு. ஆனபோதும் உணவின் மீதான காதலையும், அவற்றை ருசிப்பதன் மகிழ்ச்சியையும் இர்ஃபான் கைவிட்டதில்லை.
இப்படியான இர்ஃபான் சில தினங்களுக்கு முன்பு துடித்துப்போனார். இவரது வீடியோக்களில் ஒன்று தங்கள் வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாக யூடியூப் நிர்வாகம் ‘இர்பான்ஸ் வியூ’ சேனலைத் தடை செய்தது. அவ்வளவுதான் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது இதர சமூக ஊடகங்கள் வாயிலாக இர்ஃபான் பொங்கித் தீர்த்தார்.
அதிகமில்லை, இர்ஃபான் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு அரை நாளில் யூடியூப் நிர்வாகம் அவரது சேனலைத் திரும்பக் கையளித்தது. அந்த அனுபவத்தையும் இர்ஃபான் ஓர் உணர்ச்சிகரமான வீடியோவாக்க, இந்த வாரத்தின் வைரல் வீடியோக்களில் இதுவும் ஒன்றானது. இந்த வைரல் வீடியோ மூலமாக, மடைமாறிப்போன தனது பழைய பார்வையாளர்களையும் மீளப் பெறத் தொடங்கியிருக்கிறார் இர்ஃபான்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.