இணைய உலகம்

இணைய உலகம்

இன்ஸ்டா பாடல்; இன்ஸ்டன்ட் பிரபல்யம்!

ஒற்றைப் பாடலில் ஓஹோ என்று பிரபல்யமாகி இருக்கிறார் நக்‌ஷா சரண்.

ஹிட்டடித்த பாடல்களுக்கு ’கவர் சாங்’ பாடும் யூடியூபர்களில் ஒருவராகப் பொதுவெளியில் அறிமுகமானவர் நக்‌ஷா சரண். ’ரோஜா’ திரைப்படத்தின் ’புது வெள்ளை மழை பொழிகிறது...’ பாடலை 4 மொழிகளில் ஒரே கவர் சாங்காகப் பாடி வீடியோ வெளியிட்டார். அப்பாடலுக்கு கவிஞர் வைரமுத்துவிடம் பாராட்டு பெற்றதில், அந்த வீடியோ 5 லட்சம் பார்வைகளைத் தாண்டியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பள்ளியில் குரலிசை பயின்ற இவர் தனக்கான வாய்ப்புக்காக, யூடியூப் வீடியோக்களுக்கு அப்பால் என்ன செய்வதென்று யோசித்தார்.

 நக்‌ஷா சரண்
நக்‌ஷா சரண்

அந்த வகையில் கவர் சாங் பாடுவதற்கு அப்பால், சுயமாய் மியூசிக் வீடியோ வெளியிட உத்தேசித்தார். அப்படி உதித்ததுதான் ’இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்’ பெப்பி சாங். தமிழ் பாப் ஆல்பம் வரிசையில் சேர்ந்திருக்கும் இந்த மியூசிக் வீடியோவுக்கு, சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். வீடியோவின் இறுதியில் இருவருக்குமான பட்டையை கிளப்பும் குத்து நடனம் ஒன்றும் இடம்பெறுகிறது.

இளசுகளைக் கவரும் பதங்களின் பிரயோகமும், அட்டகாசமான நடன அசைவுகளுமாக ஒரே நாளில் ’இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்’ இசைப் பாடல் வைரலானது. சோனி மியூசிக் வெளியிட்டிருக்கும் இந்த இசை ஆல்பம் வாயிலாக சினிமாவில் பாடவும், நடிக்கவும் வாய்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் நக்‌ஷா சரண்.

உருமாறும் விஜய் ரசிகர்கள்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில், இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

விஜய் என்ற நட்சத்திரத்தின் பின்னணி இருந்தபோதும், அவர் நேரடியாக களமிறங்காது வெளிப்படையாக மக்களிடம் கோரிக்கை விடுக்காத போதும், மக்கள் இயக்கத்துக்கான வாக்குகளை அறுவடை செய்து ஆச்சரியமூட்டி உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல்களில் தொடரும் வெற்றி விஜய் ரசிகர்களை புதிய ரசவாதத்துக்கு ஆளாக்கி இருக்கிறது. இந்த மாற்றம் சமூக ஊடக வெளியிலும் பிரதிபலிக்கிறது.

நடிகரின் ரசிகர்கள் என்பதற்கு அப்பால், தலைவரின் தொண்டர்கள் என்ற உருமாற்றத்துக்கு விஜய் ரசிகர்கள் ஆளாகி வருகின்றனர். இந்த முதிர்ச்சி அவர்களின் சமூக ஊடக களமாடலிலும், அங்கத்திய குழுச் சண்டைகளிலும் முதிர்ச்சியாக பரிணமித்திருக்கிறது.

கீச்சுலகின் சந்துகளில் சினிமா ரசிகர்களின் வசவுகள் பெயர் பெற்றவை. கல்லூரி மாணவப் பருவத்திலிருக்கும் இந்த ரசிகர்களில் பலர், எடுத்த எடுப்பில் வாசம் மணக்கும் வசவை வாரி வழங்கி வாயடைப்பார்கள். இவர்களில் விஜய் ரசிகர்கள் தற்போது, ஆச்சரியமூட்டும் வகையில் நின்று விளையாடுகிறார்கள். பிரச்சார களத்தில் இறங்கியது முதலே வாதங்கள் வைப்பதும், உரையாடலை நீட்டிப்பதுமாக பக்குவம் பெற்றிருக்கிறார்கள். அவசரத்தில் வார்த்தை விடும் சக ரசிகர்களை கண்டிக்கவும் செய்கிறார்கள்.

இவர்களுடன் சகலத்திலும் எதிர் நிற்கும் அஜித் ரசிகர்கள், ’வலிமை’ திரையரங்குகளில் உற்சாக மேலீட்டில் உடைத்து நாசம் செய்தபோது, விஜய் ரசிகர்கள் ஓட்டு வித்தியாசம் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தனர். ’வலிமை’ உற்சாகம் வடிந்த பிறகு, விஜய் ரசிகர்களின் உருமாற்றம் குறித்து அஜித் ரசிகர்கள் அநேகமாக ஆராயத்தலைப்படுவார்கள்.

துப்பாக்கியை சரித்த புத்தகம்!

இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் யார், புகைப்படத்தை எங்கே எடுத்தார்கள், புகைப்படக்காரர் யார் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், முகநூலின் பெரும்பாலான வாசிப்பு குழுக்களில் இந்த புகைப்படம் இவ்வாரம் அதிகம் பகிரப்பட்டது. சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு, முகநூலில் கூடிய வாசகர்கள் இந்த புகைப்படத்துக்கும் இதயங்களை பறக்கவிடுகின்றனர்.

பார்ப்பதற்கு தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர் போலிருக்கிறார். புத்தகக் கடையொன்றில், பிடித்த புத்தகத்தின் பக்கங்களில் ஆழ்ந்ததில், துப்பாக்கிச் சுமையை தரைக்கு இறக்கி உள்ளார். இந்த புகைப்படத்தை பகிர்ந்ததோடு, ஆளாளுக்கு நச் கமென்ட்டுகளாலும் நிரப்பி வைத்திருந்தனர். அவற்றில் சில இங்கே:

புத்தகம் கையில் ஏறும்போது, ஆயுதம் தானாக கீழிறங்கும்.

துப்பாக்கியைவிட மேலான ஆயுதம் புத்தகம்

நிஜமான போராளி புத்தகத்தையே ஏந்துவான்

கதை சொல்லும் ’ஹூட்’

குரல் வழி சமூக வலைதளச் செயலியாக அறிமுகமான ’ஹூட்’, போட்டியாளர்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடி வருகிறது. குரல் வழித் தகவல்தொடர்புக்கு இதர சமூக ஊடகங்களும் வழி செய்திருப்பதால், அவற்றிலிருந்து வித்தியாசம் காட்டுவதில் ஹூட் தவித்து வருகிறது.

முன்னைவிட குரலின் துல்லியம் கூடி இருப்பதும், கூடுதல் படங்களைச் சேர்க்க முடிவதும், உரையாடலுக்கு மத்தியில் அவற்றை பகிர்வதுமாக சில சிறப்பம்சங்களை ஹூட் அப்டேட் செய்துள்ளது. ஆனால், பிரபலங்கள் எவரும் தங்கள் பக்கங்களை அப்டேட் செய்யாததில், அவர்களை பின்தொடரும் விசிறிகள் இன்றி ’ஹூட்’ காற்றாடுகிறது.

ஆனால் எதிர்பாரா திசையிலிருந்து ஹூட் கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது. சிறுகதைகளின் துரித பதிப்புகளாக உலவிய ஒரு பக்கக் கதைகள், ஒரு நிமிட கதைகள் வரிசையில் அரை நிமிடக் கதைகளை வலையேற்றி வைத்திருக்கிறார்கள். சொந்தக் கதையோ, சுட்டதோ, இந்த குரல் வழி கதையாளர்களை பின்பற்றுவோர் அதிகரித்து வருகின்றனர்.

கதையின் மையச் சரடுக்கு உகந்த புகைப்படத்தை மட்டும் பகிர்ந்து, 30 - 40 விநாடிகளில் கதை சொல்கிறார்கள். யூடியூப் கதைகளில் விளம்பர வருமானத்துக்காக நீட்டி முழக்குவார்கள்; ஸ்பாட்டிஃபை தளத்தில் முற்றுப்புள்ளியே இல்லாது பேசி கொட்டாவி வரவழைப்பார்கள். இந்த இரண்டுக்கும் மாற்றாக நச்சென்று அரை நிமிடத்தில் வேகமெடுத்து முடியும் கதைகள், இன்றைய அவசர உலகத்தில் கிடைக்கும் சிறு அவகாசத்திலும் கதைகள் கேட்டு ஆசுவாசமாக உதவுகின்றன. கதைகள் கேட்டு பழகியவர்களுக்கு இது, புது அனுபவமாகவும் இருக்கும்.

தத்துவ முத்துகள்

1. அம்மா தனக்காக சமைத்தது இல்லை; அப்பா தனக்காக சம்பாதித்ததும் இல்லை. @THARZIKA

2. சிலரிடமிருந்து விலக, ஏதொன்றும் பெரிதாக செய்யத் தேவையில்லை. நல்லதாக 4 அறிவுரை சொல்ல முயற்சித்தால் போதும்! @pandi_prakash_

3. வாழ்க்கையின் ஆகப்பெரும் சுவாரசியம் என்பது, அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற போதும் கடமையை தொடர்வதே! @kanavukathalan

4. வார்த்தைகளைவிட ஒருவரின் மௌனம் உங்களை கனக்கச் செய்கிறது என்றால், உங்கள் வாழ்க்கைக்கு அவரும் அந்த மௌனமும் முக்கியமானவை. @Latchu_twits

5. சிறுவயதில் அழுவதுபோல பாசாங்கு செய்தோம். பெரியவர்களான‌ பின்பு அழாததுபோல பாசாங்கு செய்கிறோம். @Legend_2910

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in