சுஹானா கான்
சுஹானா கான்

இணைய உலகம்

ஆஹா... சுஹானா!

பிரபல ஆடை வடிவமைப்பாளரான மனீஷ் மல்ஹோத்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வாரம் பகிர்ந்திருந்த, பாலிவுட் பிரபலம் ஒருவரின் வாரிசு புகைப்படம் ஒரேநாளில் பற்றிக்கொண்டது. அந்த புகைப்படத்தில் காட்சியளித்தவர், பாலிவுட் பாஷாவான ஷாருக் கான் மகள் சுஹானா கான்!

கடந்த அக்டோபரில், போதைப்பொருள் புகாரின்கீழ் மகன் ஆரியன் கான் கைதானபோது, ஷாருக் கான் சோர்ந்து போனார். சமூக ஊடகப் புரளிகள், அரசியல் முட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் கான் குடும்பம் வெகுவாக அலைக்கழிந்தது. சிறை, வழக்கு, விசாரணை என ஆரியன் மீண்ட பிறகும், குடும்பத்தில் சிக்கல்கள் தொடர்ந்தன. மருத்துவ கவுன்சிலிங், நீதிமன்ற உத்தரவை மீறும் வெளிநாட்டு ஆர்வம் என ஆரியனை சமாளிக்கத் தடுமாறிப்போனார்கள். இந்த நேரத்தில் அமெரிக்காவில் படிப்பு முடித்து திரும்பிய சுஹானா கான், தனது சகோதரனை தடுத்தாட்கொண்டார்.

தங்கையின் அரவணைப்பும், வழிநடத்தலும் ஆரியனை மீட்டிருப்பதோடு, கான் குடும்பத்தில் மறுபடியும் மகிழ்ச்சி திரும்பியிருக்கிறது. வாரிசுகள் இருவருமாக சேர்ந்து தந்தையின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணிக்கான பெங்களூரு ஏல நிகழ்வில் கடந்த வாரம் பொறுப்புடன் பங்கேற்றனர். சுஹானா உதவியுடன் குடும்ப நிறுவனமான ரெட் சில்லிஸ் நிர்வாகங்களை ஆரியன் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். குடும்பத்தில் மகளின் ஆதுர உதவியை மெச்சிய ஷாருக் - கௌரி தம்பதியர், சுஹானாவின் சினிமா கனவுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

தந்தை விதித்த நிபந்தனைக்காக நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்திருக்கும் சுஹானா, அடுத்த கட்டமாக தனது கனவுகளை ஈடேற்ற பாலிவுட்டில் கால் பதிக்கத் தயாராகிறார். அப்படி சுஹானாவுக்காக மனீஷ் மல்ஹோத்ரா எடுத்த புகைப்படங்களே வைரலாகி வருகின்றன.

பாலிவுட் நாயகிகளுக்கான கற்பித இலக்கணங்களை உடைத்து, சாமானியப் பெண்ணை திரையில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் என்பது சுஹானாவின் சினிமா ஆசைகளில் ஒன்று. அவரது வைரல் புகைப்படமும் அதையே பிரதிபலிக்கிறது.

விஜய்க்கு மலேசிய மழலையின் வாவ்!

காதலர் தினத்தன்று, பீஸ்ட் திரைப்படத்தின் ‘ஹலமதி ஹபிபோ’, அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இந்த வாரத்தின் யூடியூப் டாப் ட்ரெண்டிங் வீடியோக்களில் இடம் பிடித்தது. பாட்டு, இசை, நடனம், வீடியோவுக்கான படத்தொகுப்பு, உச்சமாக விஜய்யின் வித்தியாசமான தோற்றம், விசேஷ நடன அசைவுகளுமாக இந்த வீடியோ ஹிட் அடித்தது.

செய்தி இதுவல்ல.

இந்த ஹலமதி ஹபிபோ பிரபல்யத்தையும், மக்கள் மத்தியிலான வரவேற்பையும் பயன்படுத்தி பல நூறு வீடியோக்கள் யூடியூபில் முளைத்தன. அவை அனைத்துக்கும் ரசிகர்கள் வஞ்சனை வைக்காது பார்வைகளை வாரி வழங்கினர். அவற்றில் ரியாக்ட் வீடியோ என்ற ரகத்திலானவை அதிகம்.

ஹிட் அடித்த வீடியோக்களை தாங்கள் பார்த்து ரசிப்பதை, பார்வையாளர்களும் ரசிக்குமாறு வழங்குவதே இந்த ரியாக்ட் வீடியோவின் அடிப்படை. முகத்தை அஷ்டக்கோணலாக்கி, செயற்கையாய் சிரித்துப் பேசி, மழுப்பி, புகழ்ந்து... என்றெல்லாம் ரியாக்ட் வீடியோ வெளியிடுவார்கள்.

’ஃபில்மி ரியாக்ட்’ என்ற பெயரில் மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின் வீடியோக்கள் அண்மையில் இவற்றில் சேர்ந்துள்ளன. வீடியோ ரசனைக்கான முகபாவங்களோ, வீடியோவின் உள்ளடக்கம் குறித்த விமர்சனமோ இவர்களிடம் பெரிதாய் தென்படாது. ஆனால், இந்த வீடியோவில் இடம்பெறும் குட்டிக் குழந்தையின் க்யூட் ரசனைகள் வீடியோவை மேலும் அழகாக்கும்.

அந்த வகையில் ’ஹலமதி ஹபிபோ’ பாட்டுக்கும், பெற்றோர் மத்தியில் அமர்ந்தபடி இந்தக் குழந்தையின் வாய் ஓயாது வாவ் சொல்லிக்கொண்டே இருந்தது. ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் போன்றோரின் வெற்றிக்குப் பின்னே, அவர்கள் குழந்தைகளின் உள்ளம் கவர்ந்தவர்களாக இருப்பதை இந்த மலேசிய குழந்தையிடம் அறிந்துகொள்ளலாம்.

முகநூல் எங்கும் நூல் மணம்!

கரோனா தடுமாற்றங்களை தகர்த்து இந்த வருடத்தின் சென்னை புத்தகக் காட்சி சாத்தியமாகி இருக்கிறது. வாசிப்பாளர்களின் தீபாவளியான இந்த புத்தகக் காட்சியை முன்னிட்டு, முகநூல் பக்கமெங்கும் நூல் மணம் பரப்பி வருகிறது. புதிய புத்தக வெளியீடுகள், பிரபல நூல்களின் மறு பிரசுரங்கள், அதிகம் வரவேற்பு பெற்றவை, நூல் விமர்சனங்கள் போன்றவை முகநூல் காலக்கோட்டில் காணவே கண்கொள்ளா காட்சியாக இருக்கின்றன.

முகநூல் குழுக்கள் வாசிப்பு மாரத்தான் மற்றும் பரிந்துரை பட்டியல்களில் பரபரத்துக் கிடக்கின்றன. இந்தப் பட்டியலை முன்வைத்து முளைக்கும் வழக்கம்போலான பஞ்சாயத்துகளுக்கும் பஞ்சமில்லை. போற்றுவோர் - தூற்றுவோர் அணிகளுக்கு மத்தியில் ஆக்கபூர்வமான தகவல்களை பகிரும் தளங்களும் அதிகம் உண்டு.

சென்னைக்கு வெளியே இருக்கும் வாசகர்கள், யூடியூப் வாயிலாக தங்களது ஆதர்ச எழுத்தாளர்களை தரிசிக்கவும், அவர்களது உரைகளை கண்டு ரசிக்கவும் வாய்ப்பளித்த ஸ்ருதி டிவியின், ’ஸ்ருதி இலக்கியம்’ உள்ளிட்ட முகநூல் கணக்குகள் அந்த வகையில் வசீகரிக்கின்றன. சென்னை புத்தகக் காட்சியின் அன்றாடங்கள், அறிமுக நூல்கள், எழுத்தாளர் வருகை, விழா நிலவரம் ஆகியவற்றுடன், சலுகை விற்பனை விவரங்களையும் இந்தப் பக்கங்கள் அவ்வப்போது பதிவிட்டு வருகின்றன. கூடவே குழந்தைகள் மத்தியில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கும் அரங்குகள் குறித்த தகவல்களையும் அப்டேட் செய்கின்றன. அதன் யூடியூப் பக்கத்தில் இலக்கிய கர்த்தாக்கள் மற்றும் ஆர்வலர்களின் உரைகளும் தொகுக்கப்பட்டு வருகின்றன. புத்தகக் காட்சியின் நோக்கத்தை இவை முழுமையடையச் செய்கின்றன.

கருத்து முத்துகள்

1. வெறுப்பையும் துரோகத்தையும் துளி கண்ணீர் இன்றி கடப்பதற்கு வாழ்க்கை பழகிவிட்டது. ஆனால், இந்த அன்பு என்பது சட்டென்று கிடைக்கையில், கண் கலங்காது இருக்க முடியவில்லை. @mrithulaM

2. ஏதுமில்லா குடுவையில் காற்று நிறைந்திருந்தது. @yaadhu143

3. தைரியமா ஒரு முடிவை எடுக்க முடியலைன்னா.. அதுக்கு காரணம் பயம் மட்டுமல்ல, பணமாவும் இருக்கலாம். @Raajavijeyan

4. கரோனாவை ஒழிச்ச பெருமை, தேர்தலையே சாரும். @Sabarish_twittz

5. அன்புக்காக பிச்சைகூட எடுக்கலாம். ஆனால் பிச்சையாக அன்பை எதிர்பார்க்கக் கூடாது; அது நிலைக்காது. @latha_pinky

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in