இணைய உலகம்

யூடியூப்: சொல்லரசி பரப்பும் ஆன்மிகம்
இணைய உலகம்

பொழுதுபோக்குக்கு அடுத்தபடியாக ஆன்மிக பதிவுகளே யூடியூப் வீடியோக்களில் தனித்தடம் பதிக்கின்றன. ஆனபோதும் அவர்களில், மக்களின் ஆன்மிக நம்பிக்கையை பொறுப்போடு கையாளுவோர் அரிது. கிருபானந்த வாரியரின் சீடரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான சொல்லரசி மங்கையர்கரசி இந்த அரிதானவர்களில் ஒருவர். இவரது ’ஆத்ம ஞான மையம்’ யூடியூப் சேனல் ஆன்மிக அன்பர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.

ஒரு காலத்தில் மக்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டிருந்த மேடைப் பேச்சாளர்கள் பலரும், சேட்டிலைட் சேனல்கள், சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள் உள்ளிட்டவற்றின் வருகையால் காணாமல் போனார்கள். காலத்துக்கேற்ற மாற்றத்தை உள்வாங்கிக்கொண்ட மங்கையர்கரசி, யூடியூப் வாயிலாக தனது நேயர்களுடன் தொடர்பு அறுபடாதிருக்கிறார். தனது பாணியிலான ஆன்மிக சொற்பொழிவுகள் மட்டுமன்றி பண்டிகை வழிபாடுகள், அவற்றுக்கான ஆன்மிக நெறிமுறைகள் ஆகியவற்றையும் தனது கணீர் குரலில் வழங்கி வருகிறார்.

இவற்றோடு சுயமுன்னேற்றம், மகளிருக்கான பிரத்யேகங்கள் , ஜோதிடம், ஆரோக்கியம், இல்லறம் தொடர்பான வழிகாட்டுதல்களையும் மங்கையர்கரசி வழங்குகிறார். அறிவியலாளர்களின் கேள்விக்குட்பட்ட தலைப்புகளையும் உரிய பொறுப்பு துறப்புடன் சமயோசிதமாய் அணுகுகிறார். இரண்டரை மில்லியன் சந்தாதாரர்களை நெருங்கும் இவரது சேனலில், தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு சொல்லரசி வெளியிடும் சிறப்பு வீடியோக்கள் அமோக வரவேற்பை அள்ளி வருகின்றன.

சமூக ஊடகங்களால் சிதைந்த இளைஞர்கள்

சமூக ஊடகங்களின் ஆகச்சிறந்த பயன்பாடுகள் ஏராளம் என்றபோதும் அதனை அழிவுப் பாதையில் பயன்படுத்துவோரே அதிகம். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு எதிரான வன்முறையும் அதில் கைதான இளைஞர்களின் எதிர்காலமும் இதற்கு அண்மை உதாரணமாக மாறியிருக்கிறது. சமூக ஊடகங்களால் கட்டமைக்கப்படும் வதந்திகளையும் ஊதிப்பெருக்கப்பட்ட தகவல்களையும் நம்பி களத்தில் இறங்குவோருக்கு பாடம் புகட்டியிருக்கிறது இந்தச் சம்பவம்.

கனியாமூர் பள்ளியில் நடந்த மாணவியின் துர்மரணம், அவரது தாய் விடுத்த சமூக ஊடக அறைகூவல் மூலமாகவே வெளியுலகை எட்டியது. மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக, பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு எதிராக அவர் வெளியிட்ட குமுறல் காண்போர் மனதை கரைய வைத்தது. வாட்ஸ் - அப் தொடங்கி முகநூலிலும் இந்த வீடியோ பரவியதில், கொதிப்படைந்த இளைஞர்கள் மத்தியில் இறந்த மாணவிக்கு நீதிகேட்கும் போராட்டம் உருவெடுத்தது.

ஆனால், எதையும் ஊதிப் பெரிதாக்கும் சமூக ஊடக புரட்டாளர்களுக்கு இந்தச் சம்பவம் அவலானது. உட்கார்ந்த இடத்தில் வாய்க்கு வந்தபடி மாய்ந்து எழுதிய பதிவுகளை சுற்றலுக்கு விட்டார்கள். மரபான ஊடகங்களின் செய்திகள், காவல்துறை விசாரணை மற்றும் நீதிமன்றத்தின் வழக்கு நிலுவை ஆகியவற்றுக்கு அப்பால் நுனிப்புல் மேயும் விடலைகளை இந்த பதிவுகளே ஈர்த்தன. விடுமுறை நாளன்று பள்ளியை நோக்கி திரண்டவர்களால் அரங்கேறிய வன்முறைகளை அதன் பின்னர் நாடே அறிந்தது.

கனியாமூரை நோக்கிப் படையெடுத்த இளைஞர்களின் பயணத்துக்கு, பின்னணியில் சினிமா வசனங்கள் மற்றும் இசை சேர்த்து சமூக ஊடகங்களில் பரப்பட்ட வீடியோக்கள் பக்குவமற்றவர்களை தூண்டிவிட்டன. மெய்நிகர் உலகில் வம்பளப்பதற்கும், நிதர்சனத்தில் போராட்டக் களம் காண்பதற்குமான இடைவெளியில் இளைஞர்கள் சரிந்து விழுந்தனர். கட்டவிழ்ந்த வன்முறையின் கோரச் சம்பவங்களை சுயமாக வீடியோ எடுத்து சுடச்சுட சமூக ஊடகங்களில் பரப்பும் அளவுக்குச் சென்றன. அன்று இரவே காவல்துறையின் கைது வேட்டையில் அவர்கள் சிக்கவும் அந்த வீடியோ பதிவுகளே காரணமாயின.

கூர்நோக்கு இல்லங்களில் சேர்க்கப்பட்ட 20 சிறுவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உரிய தலைமை, கொள்கை, கட்டுப்பாடு எதுவுமின்றி, சமூக ஊடகங்களின் பதிவுகளை மட்டுமே நம்பி போராடத் துணிந்தவர்களால், வருங்காலத்தின் நியாயமான போராட்டங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பு இழக்கும் அபாயத்துக்கு ஆளாகியிருக்கிறது.

இன்ஸ்டாகிராம்: ’தல’யை புறக்கணித்தாரா ஸ்ரீதேவி புதல்வி?

வடக்கே சென்றபோதும் தாய்மண்ணை மறக்காதிருந்தவர் மறைந்த ஸ்ரீதேவி. பல்வேறு தமிழ் திரைப்படங்களை கணவர் போனி கபூர் தயாரிக்க, மைத்துனர் அனில் கபூருடன் ஜோடி சேர்ந்து பாலிவுட் வெற்றிக் கணக்கிலும் இடம்பெறச் செய்ததிலும் ஸ்ரீதேவிக்கு பங்குண்டு. ’மயிலு’வை மறக்க முடியாத தமிழக ரசிகர்களின் மத்தியில் குட்டி மயில் ஜான்வி கபூரின் தமிழ் தரிசனம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்து அடங்குவதிலும் வியப்பில்லை.

தனது இன்ஸ்டா ரீல்ஸ் வாயிலாக மொழி பேதமின்றி நாடு நெடுக இளசுகளின் நெஞ்சங்களில் கூடு பாய்ந்திருப்பவர் ஜான்வி கபூர். இவருக்கு எதிராக ’பெற்றோர் புகழ் நிழலில் பிழைத்திருப்பவர், நடிப்பில் தாய் பெயரை கெடுப்பவர், ஹார்மோன் ஊசிகள் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரிகளை நம்பி வாய்ப்பு தேடுபவர்’ உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்ந்தபோதும் தாய் போலவே நிதானமாக அடியெடுத்து முன்னேறுகிறார். அஜித்குமார் நடிப்பில் ஹாட்ரிக் திரைப்படங்களை கபூர் குடும்பம் தயாரித்ததில், அவற்றில் ஒன்றிலேனும் ஜான்விக்கு ’தலைவி’யாக பரிவட்டம் கட்ட காத்திருந்த ’தல’ ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனை எதிர்பார்ப்பாகவும், எரிச்சலாகவும் அவ்வப்போது சமூக ஊடகங்களில் அவர்கள் வெளிப்படுத்துவதுண்டு.

அஜித் ரசிகர்களின் புலம்பலுக்கு செவி சாய்த்தார்போல, தனது தமிழ் பிரவேசம் குறித்தும் அண்மையில் திருவாய் மலர்ந்தார் ஜான்வி கபூர். பெண்மையக் கதைகளுக்கே முன்னுரிமை தெரிவித்த ஜான்வி, தமிழிலும் அம்மாதிரியான வாய்ப்புகள் வரட்டும் என்றதோடு, வெற்றிமாறன் போன்றோர் இயக்கத்தில் நடிக்கவே முதல் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு தல ரசிகர்கள் தலையிலடித்துக் கொண்டாலும், தமிழ் ‘கோலமாவு கோகிலா’வின் இந்தி பதிப்பாக அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் ’குட்லக் ஜெர்ரி’ ஜான்வி கபூருக்காக மறக்காது இன்ஸ்டாவில் இதயங்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

தத்துவ முத்துக்கள்

1. கோயிலை விட்டு விரைவில் வெளியேறுவோம் என்பதை இந்த சிறப்பு தரிசன ’டிக்கெட்டுகள்’ உணர்வதில்லை @ _SUMI_Twitz

2. காயப்பட்டு கண்கலங்கி நிற்கும்போது எவரொருவரின் ஒற்றை வார்த்தையில் மொத்த மனதும் ஆறுதலடைகிறதோ... அவரே வாழ்நாள் பொக்கிஷம் என்றறிக @anantheselvan

3. தொலைத்த பிறகான தேடலின் ரணம் என்பது குற்ற உணர்வில் சேரும் @im_Navyaa

4. தவிப்பதைவிட தவிர்ப்பது நல்லது; எதுவாயினும்... @poomagal_ofcl

5. அப்புறம் பார்த்துக்கலாம் என்று தற்காலத்தில் தள்ளிப்போட முடியாத ஒரே விஷயம் ‘மொபைல் சார்ஜிங்’ மட்டுமே @kanavukadhalan

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in