இணைய உலகம்

யூடியூப்: இர்ஃபானை உறும வைத்த ’ஓசிச்சோறு’!
இணைய உலகம்

பிரபல யூடியூபர்களை வளரும் யூடியூபர்கள் ’ரோஸ்டிங்’ என்ற பெயரில் வறுத்தெடுத்து வீடியோ வெளியிடுவார்கள். தமிழின் நட்சத்திர யூடியூபர்களில் ஒருவரான முகமது இர்ஃபானும் இந்த வறுபடல்களுக்கு அதிகம் ஆளாகி இருக்கிறார். ஆனபோதும் அவற்றை பெரிதுபடுத்தியதில்லை. ஆனால், கடந்த வாரம் சில டிவி சேனல்களுக்கு எதிராக இர்பான் சீறிய விவகாரம் தமிழ் யூடியூப் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உணவு ரசனைக்கான யூடியூபர்கள், ஆதாய அடிப்படையில் உணவகங்களை விதந்தோதி வீடியோ போடுகிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். இர்ஃபானும் அதில் விதிவிலக்கல்ல. இந்த ஸ்பான்சர் விவரங்களை தனது வீடியோக்களிலும் பதிவு செய்ய அவர் மறுப்பதில்லை. இந்நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் ஆய்வுக்கு இந்த உணவகங்கள் ஆளானபோது, அங்கு பிடிபட்ட கெட்டுப்போன அசைவ இருப்புகள் வெகுஜனத்தை கொதிக்க வைத்தன.

மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட்ட செய்தியில் இர்ஃபான் உள்ளிட்ட யூடியூப் உணவு பிரியர்களையும் சாடி இருந்தார்கள். தங்களது சுய லாபத்துக்காக பொதுமக்களை தவறாக வழிகாட்டுவதாக யூடியூபர்களை அந்த செய்திகள் வறுத்தெடுத்தன. இதில் சீற்றமடைந்த இர்ஃபான், பதிலடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னெப்போதும் கண்டிராத இர்ஃபான் வெளிப்பட்டார்.

அந்த வீடியோவில் செய்தி சேனல்களை சகட்டு மேனிக்கு சீண்டியவர், தன்னை ’ஓசிச்சோறு’ என்று விளித்ததற்கு எதிராக நிதானமாக ருத்ர தாண்டவமாடினார். ஒரு கட்டத்தில் மஞ்சள் கோடு தாண்டியவராக, செய்தியாளரின் புகைப்படம் மற்றும் சுயவிவரக்குறிப்பை எல்லாம் வெளியிட்டு திருப்தியடைந்தார். தனது அத்துமீறலை உணர்ந்த இர்ஃபான் 2 நாட்கள் கழித்து, திமுக எம்பி கனிமொழியை முன்னிறுத்திய புதிய வீடியோவில் இயல்புக்கு திரும்பினார். நெளிய வைக்கும் உணவு ரகங்களும் கனிமொழியின் மலர்ந்த பேட்டியுமாக அந்த வீடியோ பழைய இர்ஃபானை மீட்டுத் தந்தது.

ஃபேஸ்புக்: ஜேம்ஸ் வெப் படங்களுக்கு ஜே!

சினிமா, அரசியல், கிரிக்கெட் என சதா தறிகெட்டிருக்கும் முகநூல் அரட்டைகள் இந்த வாரம் அடையாளம் மாறியிருந்தன. அண்ட சராசரங்களை ஆராயும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களால் அனைவரின் காலக்கோடும் நிரம்பி வழிந்தன.

புரிகிறதோ இல்லையோ, ஜேம்ஸ் வெப் எடுத்து நாசா வெளியிட்ட புகைப்படங்களை பகிர்ந்து புளகாங்கிதம் அடைந்தனர். வானியல் குறித்த அடிப்படை அறியாதவர்கள்கூட ஆதிகாலத்தின் நட்சத்திர திரட்சியை வியந்தனர். பிரபஞ்சத்தின் மிக ஆழமான முதல் புகைப்படம், கரீனா நெபுலா, ஐந்து விண்மீன் திரள்கள், தொலைதூர கோள் ஒன்றில் நீர் இருப்பதற்கான ஆதாரம் என்று அறிவியலை தமிழில் விளக்கத் தெரிந்தவர்களின் பதிவுகள் திடீரென கூடுதல் கவனம் பெற்றன. அதிலும் முற்போக்கு கருத்துகளை அறிவியல் தோய்த்து பகிரும் பதிவர்கள் உற்சாகமாக வலம் வந்தனர். ’முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல’ என்ற பழம்பெருமையின் போர்வையில் பிற்போக்கில் பிடித்திழுப்போர் கள்ளமவுனம் சாதித்தனர்.

கரீனா நெபுலா- ஜேம்ஸ் வெப் அனுப்பிய முதல் படம்
கரீனா நெபுலா- ஜேம்ஸ் வெப் அனுப்பிய முதல் படம்

ஒட்டுமொத்தமாய் பக்குவப்பட்ட அதிர்வலை முகநூலில் எதிரொலித்தது. வசீகரமான பிரபஞ்ச விந்தைகளும், பேரண்ட கூறுகளின் பிரம்மாண்டமும் ஃபேஸ்புக் பயனர்கள் மத்தியிலும் முதிர்ச்சியான தாக்கங்களை விதைத்தது. இந்த இயற்கையின் முன்பாக மனிதனின் சிறுமையைப் பொட்டில் அறைந்து உணர்த்தியதும் ஒரு காரணமாக இருக்கலாம். தூரத்தை ஒளியாண்டுகளில் கடந்த, காலத்தில் பில்லியன் ஆண்டுகளில் முந்திய ஜேம்ஸ் வெப் படங்கள், சதா சச்சரவுகளை பரப்பும் சிறுமதியாளர்களையும் சற்றே மனம் விரியச் செய்தது.

நாசா வெளியிடும் அடுத்த தவணை ஜேம்ஸ் வெப் படங்களுக்காக காத்திருக்கிறது தமிழ் கூறும் முகநூல் உலகு.

ட்விட்டரை தெறிக்கவிடும் எலான்

ட்விட்டர் பதிவுகளின் ஊடாக ட்விட்டர் நிறுவனத்தையே கலாய்ப்பதில் எலான் மஸ்க் தனி ரகம். சில மாதங்கள் முன்பாக ’ட்விட்டரை வாங்கப்போகிறேன்’ என ட்விட்டரில் அதிரடித்தார். வழக்கமான அவரது சேட்டை பதிவு என்று அசட்டை காட்டியவர்கள் வாய் பிளக்கும் வகையில் நிஜமாகவே ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் நடைமுறைகளைத் தொடங்கினார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

ஒப்பந்தம் நிறைவேறிய பின்னர் ட்விட்டரின் போலி பயனர்கள் குறித்து சரமாரி கேள்வி எழுப்பினார். ட்விட்டர் அளித்த தரவுகளை நிராகரித்தார். போலிகள் குறித்த உண்மையான கணக்கை வெளியிடாவிட்டால் ட்விட்டரை வாங்குவதான ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என்று மிரட்டினார். இதனால் ட்விட்டர் பங்குகள் மட்டுமன்றி எலானின் டெஸ்லா பங்குகளும் சேர்ந்து சரிந்தன. ஆனபோதும் மனிதர் அலட்டிக்கொள்ளவில்லை.

வேறுவழியின்றி எலானுக்கு எதிராக நீதிமன்ற படிக்கட்டுகளில் சரணடைந்திருக்கிறது ட்விட்டர் நிறுவனம். எலான் மஸ்க் பின்வாங்கினால், ஒப்பந்த முறிவு தண்டத்தொகையான ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை அவர் அழுதே தீர்க்க வேண்டும் என்று ட்விட்டர் தீவிரமாகிறது. ஆனால், விடாக்கண்டனான எலான், போலி பயனர் விவரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்கும் ட்விட்டர் நிர்வாகத்தை மீம்ஸ் போட்டு கிண்டலடித்தார்.

எலான் மஸ்க் ரகளையாய் சிரிக்கும் இந்த மீம்ஸ் கடந்த வாரத்தின் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது. சந்தையில் சரியும் சொந்த பங்குகள், தொடரும் டெஸ்லா நிர்வாகிகள் ராஜினாமா, சொதப்பும் ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட், பாலின மாற்றம் கோரி நீதிமன்றத்தை நாடும் மகன், வளர்ப்பு மகள் வாயிலாக ரகசியமாய் வாரிசு சேர்த்த தந்தையின் சர்ச்சை... என தன்னை சுற்றும் ரணகளத்தின் மத்தியிலும் ட்விட்டரில் வைத்தே ட்விட்டரை கலாய்ப்பதை தொடர்ந்து வருகிறார் எலான்.

தத்துவ முத்துக்கள்

1. எதையும் கடந்து விடலாம் என்னும் பக்குவம் எல்லாம் இழந்த பிறகே தோன்றுகிறது! @mounam_twitz

2. நாடாளுமன்றத்தில் ஊழல் என்ற சொல்லைப் பயன்படுத்த தடையாம். எதோ ஒரு வகையில் ஊழலை ஒழித்தால் சரிதான்! @easytalkoos

3. யாரோ எப்படியோ போயிட்டு போறாங்கனு ஒதுங்கிப் போகும்போதுதான் நம்மை நோக்கி ஒவ்வொரு பிரச்சினையா வரிசை கட்டும். @Sabarish_twittz

4. நிம்மதியுடன் வாழ்பவர்கள் எதுவுமே இல்லாதவர்கள்தான்! @sankariofficial

5. நிதர்சனங்களை மனது ஏற்க மறுத்தால் இன்னும் முழுதாய் நிஜத்தை உணரவில்லை என்றறிக. @pandi_prakash_

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in