இணைய உலகம்

ட்விட்டர்: மய்யத்தாரை உசுப்பேற்றிய வானதி!
இணைய உலகம்

விக்ரம் திரைப்பட வெற்றியால் அரசியல் அக்கப்போர்களுக்கு இடைவேளை தந்திருந்த கமல் ரசிகர்களை மீண்டும் உசுப்பேற்றி விட்டிருக்கிறார் வானதி சீனிவாசன்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முழுமையான வர்த்தக வெற்றியை ருசித்ததன் மகிழ்வை வெளிப்படுத்தும் வகையில் சக நடிகர்களுக்கு சைவ முத்தம், அனைவருக்கும் அசைவ விருந்து, படக் குழுவினருக்கு பரிசு வாகனங்கள் என அசத்தி வருகிறார் கமல்ஹாசன். ’ஆழ்வார்பேட்டை ஆண்டவா உங்களுக்கு அரசியல் வேண்டாம்; சினிமாவின் பிரம்மாண்ட வெற்றிகள் தொடரட்டும்’ என்ற ரசிகர்களின் வேண்டுகோளையும் புன்னகையுடன் கடந்து வருகிறார். ஆனால், இதையே சற்று எள்ளல் கூட்டி வானதி சீனிவாசன் சொன்னதும் மய்யத்தார் மத்தியில் புயல் மையம் கொண்டது.

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ-வான வானதி சீனிவாசன், அண்மையில் குடும்பத்தினருடன் விக்ரம் திரைப்படத்தை திரையரங்கில் சென்று ரசித்தார். அது தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த வானதி, ’விக்ரம் திரைப்படம் பார்த்தேன். தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன். உங்கள் கலைப் பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டிருந்தார். பதிவின் உள்ளுறை பகடிக்கு கமல் ரசிகர்கள் சீற்றம் கொண்டனர்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்தது. கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான கமல்ஹாசன், எதிர்த்து நின்ற வானதி சீனிவாசனிடம் ஆயிரத்திச் சொச்ச ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பறிகொடுத்தார். கட்சியின் சறுக்கலைவிட தலைவரின் தோல்வி மய்யத்தாரை அதிகம் பாதித்தது. அப்படி சோர்ந்திருந்த ரசிகர்களை விக்ரம் வெற்றி மூலம் மீட்டார் கமல். ஆனால், வெந்த புண்ணை வானதி கிளறவே, சீற்றமுற்ற கமல் ரசிகர்களால் ட்விட்டுலகம் அமளிதுமளியானது.

’வாக்காளர்களுக்கு பரிசு வழங்கி ஜெயித்தார்; வாக்கு எந்திரத்தில் மோசடி செய்தார்’ என்று ஆரம்பித்து வசவுகளால் கமல் ரசிகர்கள் கச்சைக்கட்ட, பதிலுக்கு பாஜகவினர் பாய்ச்சல் காட்டினார்கள். விக்ரம் வெற்றி உற்சாகத்திலிருந்த கமல் ரசிகர்கள் இறங்கி அடித்ததில், வானதி ஆதரவாளரகள் திணற ஆரம்பித்தனர். ‘அரசியல் வேண்டாம்; சினிமாவே போதும்’ என்று இறுமாந்திருந்த ஆண்டவரின் அடிப்பொடிகளை ஒருவழியாக அரசியல் முழக்கத்துக்கு இழுத்து விட்டிருக்கிறார் வானதி.

ஃபேஸ்புக்: எம்.பி., இளையராஜாவை சுற்றும் அபஸ்வரம்

புத்தகம் ஒன்றுக்காக பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா அணிந்துரை வழங்கியபோதே, ’ராஜ்ய சபா எம்பியாகிறார் ராஜா’ என்று முகநூல் கும்மிகள் முளைத்தன. தற்போது ராஜ்ய சபா நியமன எம்பி-யாக இளையராஜா அறிவிக்கப்பட்டதும் கரிசனமும், கரிப்புமாக அவை அடுத்த சுற்று கண்டன.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்காவில் இருந்தபடி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். கலை மற்றும் அரசியல் உலகத்தினரின் பாராட்டு மழையின் ஊடாக இளையராஜாவுக்கான நியமன எம்பி அறிவிப்பு சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது. பல்துறை வித்தகர்களை மாநிலங்களவையில் நியமிக்கும் வழக்கமான நடைமுறை என்றபோதும் இளையராஜாவின் ஒளிவட்டத்துக்கு இழுக்கு சேர்ந்திருப்பதாக பலர் குமுற ஆரம்பித்தனர். ஏற்கெனவே பத்ம விருதுகளை பெற்றிருக்கும் இளையராஜாவுக்கு இம்முறை பாரத ரத்னா வழங்கி இருக்கலாம் என்றும் அவர்கள் ஏக்கம் தெரிவித்தனர்.

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், இசைஞானியை ’தலித்’ என்ற அடையாளத்துக்குள் முடக்கியதற்கும் தனியாக எதிர்ப்புகள் வலுத்தன. அவ்வாறு குறிப்பிட்டதற்காக எழுத்தாளர் ஒருவருக்கு எதிராக இளையராஜா சட்ட நடவடிக்கை எடுத்ததாகவும் பழைய பரண்களை முகநூலர்கள் துழாவினர்.

இசைக்காக மட்டும் ராகதேவனை தொழும் ரசிகர்கள் இவை எதையும் கண்டுகொள்ளாது ராஜாவின் வழக்கமான இசைத்துணுக்கு பகிரலும், புன்னகையுமாக கடந்து செல்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் - மீண்டும் மீரா

புத்தாயிரத்தின் இளசுகளை ஆட்டிப்படைத்த நாயகியருள் முக்கியமானவர் மீரா ஜாஸ்மின். ’காதல் பிசாசே’ என இளைஞர்களை புலம்ப விட்டவர். விஜய் உள்ளிட்ட அடுத்த தலைமுறை நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தவர். ’ரன்’ அறிமுகத்தில் ஆரம்பித்து சண்டக்கோழி, புதிய கீதை, ஆயுத எழுத்து என கோலிவுட்டில் ஒரு சுற்று வலம் வந்தார். பின்னர் திடீரென காணாமல் போனார்.

சொந்த வாழ்க்கையின் காதல், கல்யாணம் என எட்டாண்டுகளுக்கு முந்தைய கெட்ட கனவுகளிலிருந்து மீரா ஜாஸ்மின் விடுபட அவகாசம் அவசியமானது. அதற்குள் திரையுலம் மறந்த தேவதைகளின் வரிசையில் மீராவும் சேர்ந்தார். குழந்தை பாவமும், பருவத்தின் சேட்டைகளும் கலந்த மீராவின் துடிப்பான நடிப்பை இப்போதும் யூடியூப் உபயத்தில் பெருமூச்சுடன் ரசிப்போர் உண்டு. அவர்களுக்காக அடுத்த இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் மீரா ஜாஸ்மின்.

மலையாள வரவான மீரா, தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் கேரளாவின் அதிக ஊதியம் பெரும் நடிகையாக திகழ்ந்தவர். அங்கிருந்தே இரண்டாம் சுற்றை தொடங்கினார். ஜெயராம், மம்மூட்டி ஆகியோருடன் அடுத்தடுத்த படங்களை உறுதி செய்தார். ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அவர் தீவிரமாக இருந்த இதர சினிமா பேட்டைகளில் கண்டுகொள்வோர் இல்லை. ரசிகர்களை சென்றடைய தோதாக தற்போது சமூக ஊடகங்களில் ஐக்கியமாகி இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் உலவும் இளம் நடிகையருக்கு போட்டியாக 40 வயதாகும் மீரா ஜாஸ்மினும் தாராளவாதத்தில் குதித்திருக்கிறார். ஆனால், பெருந்துயரமாக ரசிகர்கள் மத்தியில் இதற்கு போதிய வரவேற்பு கிட்டவில்லை. இடையில் தன்னுடைய சேட்டைத்தனம் கொப்பளிக்கும் பள்ளிப் பருவத்துப் புகைப்படங்களை எதேச்சையாய் மீரா பதிவிட ரசிக பூமர்கள் விழிப்புக் கண்டனர்.

தத்துவ முத்துக்கள்

1. நான் பற்றியதைவிட, எனைப் பற்றிய கைகளில் கூடுதல் நம்பிக்கை கொள்கிறேன் @Rama_Chandran_K

2. முதியவர்களின் பேச்சைக் கேட்பதற்கு காதுகளைவிட அகல மனதே அதிகம் தேவைப்படுகிறது @amuduarattai

3. நம்மால் முடியும் என்ற நம்பிக்கை மட்டும் துளிர்த்துவிட்டால்... மகாராஷ்டிரா என்ன அமெரிக்காவில் கூட ஆட்சியைக் கவிழ்க்க முடியும் @saravankavi

4. இழப்பென்பது எல்லா நேரமும் இழப்பல்ல. சில தருணங்களில் அதுவே பேரனுபவம் @THARZIKA

5. அந்த ஜிபிஎஸ் சிப்-ஐ வைத்து, புழக்கத்தில் இருந்து காணாம போன ரூ.2000 நோட்டெல்லாம் எங்கன்னு கண்டுபிடிக்கச் சொல்லுங்கப்பா! @Kozhiyaar

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in