இணைய உலகம்

யூடியூப்: ஹேமாவின் ஆஹா விழிப்புணர்வு!
இணைய உலகம்

வருமானம் மற்றும் பிரபல்யத்துக்காக சின்னத்திரை நட்சத்திரங்கள் நடத்தும் யூடியூப் சேனல்களில் உருப்படியான உள்ளடக்கத்தை எதிர்பார்க்க முடியாது. ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனாவாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹேமாவின் யூடியூப் சேனலும் இந்த ரகம்தான் என்றாலும், இவர் அண்மையில் வெளியிட்ட ஒரு வீடியோ அத்தகைய கணிப்பை உடைத்துள்ளது.

பெண்களை அதிகம் அச்சுறுத்தும் உடல்நல பாதிப்புகளில் முக்கியமானது மார்பகப் புற்று. ஆனால் இந்த விஷயத்தில், அசூயை மற்றும் அறியாமை காரணமாக அலட்சியம் பேணும் பெண்களே அதிகம். புற்று அளவுக்கு வீரியம் பெறாத மார்பகக் கட்டி பாதிப்புக்கு ஹேமா ஆளானபோதும், ஆரம்ப நிலையிலே அதனை அகற்றும்படி மருத்துவ ஆலோசனைக்கு உள்ளானார். இதில் தொடங்கி சக மகளிருக்கு விழிப்புணர்வை ஊட்டும் சொந்த அனுபவத்தை வீடியோவாக்கி வெளியிட்டுள்ளார்.

மார்பகக் கட்டியை தான் அடையாளம் கண்டது, அதையொட்டி எழுந்த மன உளைச்சல், அறுவை சிகிச்சையின் முன்பின் தருணங்கள் ஆகியவற்றை மருத்துவமனையில் இருந்தபடி பதிவு செய்துள்ளார் ஹேமா. கூடவே, மார்பக புற்றுக்கு அடுத்தபடியாக பெண்களை அச்சுறுத்தும் கர்ப்பவாய் புற்று குறித்தும், கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குறித்தும் சுருக்கமான கருத்தினை பதிவு செய்துள்ளார்.

ஹேமாவின் இந்த முயற்சி ஆரோக்கியமான முன்னெடுப்பாகவும், சக பெண்களின் மனத்தடைகளை உதற வாய்ப்பாகவும் கவனம் ஈர்த்துள்ளது. ஆபரேஷனுக்குக் காத்திருந்த நேரத்திலும் தனது வழக்கமான அழகு சாதன விளம்பர அட்ராசிடியை இந்த வீடியோவிலும் ஹேமா கைவிடவில்லை. ஆனபோதிலும் உள்ளடக்கம் காரணமாகவும், சேனலின் குறுகிய காலத்தில் மில்லியனைத் தொட்டதற்காகவும் வாரத்தின் டாப் டிரெண்டிங் வரிசையில் ஹேமாவின் இந்த வீடியோவை பட்டியலிட்டிருக்கிறது யூடியூப்.

ட்விட்டர்: கன்னட கங்கனாவாகும் ப்ரணிதா!

கோலிவுட்டில் சூர்யா மற்றும் கார்த்தி ஜோடியாக அறிமுகமானவர் கன்னட நடிகையான ப்ரணிதா. திரைவாய்ப்புகள் குறைந்து திருமணமான பின்னர் பொதுசேவை மீதான ஈடுபாட்டில் மருத்துவ முகாம்கள் நடத்தி, அவை தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

ப்ரணிதா
ப்ரணிதா

அவ்வப்போது பெண்ணிய மற்றும் சமுதாய நலன் நாடும் கருத்துக்களையும் அதில் பதிவிடுவார். அந்த வகையில், தான் கருவுற்றது முதல் பிரசவம் வரையிலான தருணங்களையும், தாய்மையின் தவிப்புகளையும் சுவாரசியமாக பதிந்ததில் ட்விட்டரில் அதிக கவனம் பெற்றார் ப்ரணிதா. கூடவே கங்கனா ரனாவத் பாணியில் தேசியம், தெய்வீகம் குறித்தெல்லாம் பேச ஆரம்பித்தார்.

பாலிவுட்டின் பாஜக ஆதரவு குரல்களில் முதன்மையானவரான கங்கனா, தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக ட்விட்டரின் தடைக்கும் ஆளானார். கங்கனாவால் ட்விட்டரில் காலியான இடத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளார் ப்ரணிதா.

பாஜக தலைவர்களின் புகழ்பாடி வந்த ப்ரணிதா, பாலிவுட்டின் தேசபக்தி திரைப்படங்களையும் விதந்தோதி வருகிறார். அவற்றில் காஷ்மீர் ஃபைல்ஸ், சாம்ராட் பிருத்விராஜ் போன்ற படங்களை சிலாகித்தவர், கவனமாக கங்கனா ரனாவத்தின் படங்களை தவிர்த்து வருகிறார். ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக ஆங்கில இணையதளங்களில் ப்ரணிதா எழுதிய கட்டுரைகளும், தேசிய செய்திச் சேனல்களில் நேரலை பேட்டிகளும் காவி அன்பர்களை கவர்ந்து வருகின்றன.

உதய்ப்பூர் அப்பாவி தையல்காரர் மதவெறியாளர்களால் படுகொலைக்கு ஆளானதில் ட்விட்டர் உலகமும் கொந்தளித்தது. சமூக வலைதளங்களில் கண்டனக் குரல் எழுப்பிய பலரும், ட்விட்டரில் வெளியாகி இருந்த ப்ரணிதாவின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர். அமெரிக்காவில் நிறவெறிக்கு பலியான ஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையை கண்டித்த ’பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்ற முழக்கத்தின் பாணியில், ‘ஹிண்டு லிவ்ஸ் மேட்டர்’ என்ற முழக்கத்தை ஏந்திய ப்ரணிதாவின் இந்த புகைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

இன்ஸ்டாகிராம்: அழகிய தமிழ் மகளும் அரசியலும்

தந்தை சத்யராஜ், தனயன் சிபிராஜ் போலன்றி சினிமாவுக்கு வெளியே தனது துறையை தேர்ந்தெடுத்த திவ்யா, வெற்றிகரமான ஊட்டச்சத்து நிபுணராக வலம் வருகிறார். தோற்றத்தில் மட்டுமல்ல கெத்து காட்டுவதிலும் அப்படியே அப்பாவை கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது பொதுவெளியில் அதிர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்.

ஓவர்டோஸ் வைட்டமின் மருந்துகளை பரிந்துரைக்க மிரட்டுவதாக, அமெரிக்க மருத்துவ கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதினார் திவ்யா. நீட் தேர்வுக்கு எதிராகவும் தனது ஆட்சேபத்தை பதிவு செய்தார். வசதியானவர்களுக்கு மட்டுமே என்றிருந்த ஊட்டச்சத்து ஆலோசனையை, வறுமையில் வாடும் குழந்தைகள் நலனுக்காக திருப்பினார். அந்த வகையில் தனியார் அமைப்பின் மதிய உணவுத் திட்டத்தின் தூதுவரானார்.

மக்கள் சேவை ஆர்வத்தின் அடுத்த கட்டமாக ’மகிழ்மதி இயக்கம்’ என்ற பெயரிலான புதிய அமைப்பையும் அறிவித்தார் திவ்யா. ’தமிழர் நலன் காக்க, பொறுப்புள்ள தமிழ் மகளாய் விரைவில் நேரடி அரசியலில் குதிப்பேன்’ என்றும் உறுதியளித்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் திவ்யா பதிவிடும் படங்களால் அவரை சினிமாவுக்கு அழைக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ்

ஊட்டச்சத்து என்பதின் அங்கமாக உறக்கத்தையும் வலியுறுத்தி வருகிறார் திவ்யா. இவரது இன்ஸ்டா பதிவுகளின் ஊட்டச்சத்து பரிந்துரைகளில் திடமான உறக்கத்துக்கான வழிமுறைகளும் நிரம்பியிருக்கும். ஆனால், உடற்பயிற்சியில் ஆர்வம்கொண்ட திவ்யா, அதனை பிரதிபலிக்கும் வகையில் இன்ஸ்டாவில் வெளியிடும் படங்களால் தூக்கம் தொலைக்கிறோம் என்று ரசிகர்கள் செல்லமாய் ஆதங்கப்படுகிறார்கள். கூடவே, வெள்ளித்திரை பிரவேசம் எப்போது என்றும் திவ்யாவிடம் கேட்டு வருகிறார்கள். ஊட்டச்சத்து தொடர்பான ஐயங்களை எவர் எழுப்பினாலும் பொறுமையாக பதிலளிக்கும் திவ்யா, சினிமா தொடர்பான கேள்விகளை கவனமாக தவிர்த்து வருகிறார்.

அடுத்தது அரசியலா சினிமாவா என்ற ஊசலாட்டம் தென்பட்டபோதிலும், உடலோம்பலை போற்றும் ஊட்டமான படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் திவ்யா சத்யராஜ்.

தத்துவ முத்துக்கள்

1. ஒரு புகைப்படம் உயிர்கொள்வது என்பது நம் நினைவுகளால் மட்டுமே! @manipmp

2. வாழ்க்கைக்கான விடை தேடும் பயணத்தில், சிலருக்கு விடை தெரியவில்லை; பலருக்கு வினாவே புரிவதில்லை. @rajatwetz91

3. நூறு மனிதர்களை சந்தித்திருக்கிறேன் என்பதைவிட எத்தனை பேரை ஆழ்ந்து உணர்ந்திருக்கிறேன் என்பதே முக்கியம். புத்தகங்களும் அப்படியே. ss_twtz

4. தன்மானத்தை இழந்து பெறும் சந்தோஷம் என்பது பெரும் சாபக்கேடு! Ashok___04

5. வலிகள் எதாயினும் பொறுத்துக்கொள்வதில் பெரிதாய் சிரமம் நேர்வதில்லை. அதனை வெளிக்காட்டாமல் இருப்பதில்தான்... @Aashikha00

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in