இணைய உலகம்

யூடியூப்: ஷிவாங்கி வீட்டுக் கல்யாணம்
இணைய உலகம்

சின்னத்திரை பிரபலங்களில் பெரும்பாலானோர் பிரத்யேக யூடியூப் சானல்கள் வைத்திருக்கிறார்கள். திரை வாய்ப்பில்லாத போதும் ரசிக மகாஜனங்கள் தங்களை மறந்துவிடாதிருக்க இந்த சானல்களே அவர்களுக்கு பெருந்துணை. இவர்களில் வணிக நோக்கிலான விளம்பர திணிப்புகளுடன் வீடியோக்களை வலையேற்றுவோர் மத்தியில் உயிரோட்டமாக உறவாடுவோரும் உண்டு. அவர்களில் முக்கியமானவர் ஷிவாங்கி.

விஜய் டிவியில் தனது கீச்சான பேச்சுக் குரலுக்கு கிண்டல்களையும், வசீகரமான பாடுகுரலுக்கு பரிசுகளையும் அள்ளியவர் ஷிவாங்கி. சுட்டித்தனமான சேட்டைகளால் தம் வீட்டு பெண் போலவே ஒட்டிக்கொள்ளும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த வாரம் தன் வீட்டு விசேஷம் ஒன்றை ரசிகர்களுக்கான சிறப்பு வீடியோவாக பகிர்ந்திருந்தார். ஒரே நாளில் மில்லியன் பார்வைகளைக் கடந்த இந்த வீடியோவை, வாரத்தின் டிரெண்டிங் வீடியோ வரிசையில் சேர்த்திருக்கிறது யூடியூப்.

சிவாங்கி
சிவாங்கி

சேரநாட்டு ஷிவாங்கி தனது அண்ணனின் திருமணத்தையும் அதையொட்டிய நடைமுறைகளையும் இந்த சிறு வீடியோவில் அடக்க முயன்றிருக்கிறார். கேரள பாரம்பரியத்தின் சிறப்புகள் கூடிய எளிமையான திருமண விழாவில், நட்பும் உறவுமாய் அதில் பங்கேற்றவர்களும் தனி அழகு சேர்த்திருந்தனர். ஷிவாங்கியின் விசித்திர குணாதிசயங்களின் பின்னணியாக அவரது குடும்பம் இருப்பதும் இந்த வீடியோவின் வாயிலாக வெளிப்பட்டது.

சுய எள்ளல் கலந்த ஷிவாங்கியின் அணுகுமுறைக்கு இந்த வீடியோவும் தப்பவில்லை. தான் மட்டுமன்றி மணமக்கள் உட்பட கேமரா கண்களில் சிக்கிய சகலமானோரையும் வழக்கம்போல கலாய்த்திருந்தார். திருமண விருந்தில் பரிமாறப்பட்ட மண்மணக்கும் விருந்துகளையும் வகையாக அறிமுகப்படுத்தினார். ’டான்’ திரைப்படம் வாயிலாக ’க்ரஷ்’ என்பதன் வரையறையை பட்டிதொட்டியெல்லாம் பரப்பிய ஷிவாங்கியின் ’க்ரஷ்’, குடும்ப உறவுகளில் தென்படக் காணோம். அஸ்வின் தூங்காதிருப்பின் அவருக்கு இந்த சேதியை எவரேனும் சேர்த்துவிடலாம்.

ட்விட்டர்: தமிழகத்துக்கு வெளியே திரண்ட மோடி எதிர்ப்பு

மோடி தமிழகம் வருகிறார் என்றாலே ‘கோ பேக் மோடி’ முத்திரை வாசகங்கள் ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்துவிடும். சமூக வலைதள வெளியில் தேசத்தின் வேறெந்த மூலையிலும் மோடி இத்தனை எதிர்ப்புகளைக் கண்டதில்லை. முதல்முறையாக தமிழகத்துக்கு அப்பால் மோடி எதிர்ப்பு பேரலையாய் எழுந்திருக்கிறது.

இந்த வாரம் முழுக்க ’பைபை மோடி’(#ByeByeModi) என்ற மோடி எதிர்ப்பு ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முன்நின்றது. எட்டாண்டு ஆட்சியின் வெற்றிமுகத்தை கொண்டாடும் பாஜகவினருக்கு எதிர்ப்பாட்டாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்டு அதிகம் கண்டுகொள்ளப்படாதிருந்தது ’பைபை மோடி’. இதனை அக்னிபத் போராட்டக்காரர்கள் கைப்பற்றியதும் ட்விட்டரில் தீயென பரவ ஆரம்பித்தது. பிஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மத்திய அரசின் அக்னிபத் அறிவிப்புக்கு எதிராக மூண்ட பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் ட்விட்டர் பதிவுகளில் ’பைபை மோடி’ பிரபலமானது.

அக்னிபத் அறிவிப்புகளில் சேர்க்கப்பட்ட சலுகைகள் மற்றும் ’போராட்ட வழக்குகளில் சிக்குவோருக்கு இடமில்லை’ என்ற ராணுவத்தின் அதிரடி ஆகியவற்றால் அக்னிபத் அலை குறைந்தது. ஆனால், தொடரோட்டம் போல ‘பைபை மோடி’ டிரெண்டிங்கை மகாராஷ்டிர அரசியல் களேபரம் கைக்கொண்டது. ’நாட்டின் பற்றி எரியும் பிரச்சினைகளை திரும்பிப் பாராது, ஆட்சிக் கவிழ்ப்புகளில் மும்முரம் காட்டும் பாஜகவின் அநாகரிக அரசியல்’ என்று சிவசேனா அபிமானிகளால் மோடி கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். சிவசேனாவின் பாஜக எதிர்ப்பு முழக்கம் வழக்கம்போல தயவு பார்க்காது இறங்கி அடித்தது.

மோடி எதிர்ப்பாளர்களின் சித்தரிப்புகளில் ஒன்று
மோடி எதிர்ப்பாளர்களின் சித்தரிப்புகளில் ஒன்று

இந்தத் தொடர் ஓட்டத்தில் தெலங்கானாவின் டிஆர்எஸ் கட்சியினரும் சேர்ந்துகொண்டதில் ’பைபை மோடி’ டிரெண்டிங் பேரலையானது. 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு மோடிக்கு எதிராக தேசிய அரசியலில் குதித்திருக்கிறார் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும், மாநில முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ். பதிலடியாக தெலங்கானாவில் பாஜக தலைமையிலான ஆட்சி மாற்றம் விரைவில் நிகழுமென பாஜக சபதமெடுத்துள்ளது. உக்கிரமான ராவின் மகன் கே.டி.ராமராவ் இந்த மோடி எதிர்ப்பு டிரெண்டிங் தேருக்குச் சாரதியானார். வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாது பற்றிக்கொண்ட ’பைபை மோடி’ பதிவுகளை சமாளிக்க பாஜகவினர் திண்டாடி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம்: தாரா - தாரம் - தாய்லாந்து

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண ஜோடி தேனிலவைக் கழிக்க தாய்லாந்தில் முகாமிட்டுள்ளனர். திருமண வைபவத்தை ஓடிடிக்கு விற்றதால், வெளியார் பார்வைக்கு வழியின்றி நயன் கழுத்தில் தாலி கட்டினார் சிவன். ’தேனிலவையும் ஓடிடிக்கு விற்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை’ என்று தங்கள் கனவுக் கன்னியை அபகரித்த விக்னேஷ் சிவனை ரசிகர்கள் சிலர் கரித்துக்கொட்டினர். ஆனால், அம்மாதிரியான விபத்து ஏதும் அரங்கேறவில்லை.

நயன்தாராவுக்கு திருமணம் நடந்ததை செரிக்க முடியாதவர்கள், கவிஞர் மகுடேசுவரன் கண்டறிந்து சொன்ன ’உடுக்கண்ணி’ என்ற தமிழ்ப் பெயரால் நயன்தாராவை விளித்து ஆறுதல் அடைந்தனர். மற்றவர்கள் நயன்தாரா தரிசனம் எப்போது என்று விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலை சாய்த்து காத்திருந்தனர். அவர்களை நயன்தாரா கணவர் ஏமாற்றவில்லை.

தேனிலவை குதூகலமாய் கழிக்க மனைவியுடன் தாய்லாந்து பறந்திருக்கும் விக்னேஷ் சிவன், அங்கிருந்தபடி இளஞ்சோடியின் இளமை கொஞ்சும் படங்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். கழுத்தில் தழையும் தாலியோடு காட்சியளிக்கும் நயன்தாரா முகத்தில் சாந்தம் அதிகம் தவழ, பெருமிதத்தை விழுங்கும் தடுமாற்றத்தோடு தென்படுகிறார் புது மாப்பிள்ளை. தேனிலவு புகைப்படங்களுக்கு விக்னேஷ் இட்டிருக்கும் தலைப்பு- ’தாரத்துடன் தாய்லாந்திலிருந்து..!’

காதில் புகையும் கனத்த மனதுமாக, இந்த புகைப்படங்களை ரசித்த கையோடு மறக்காது இதயங்களை பறக்கவிட்டு வருகின்றனர் நயனின் ரசிகர்கள்.

தத்துவ முத்துக்கள்

1. அடுத்தவங்க வாங்கித் தரேன் அப்படினு சொன்னா 'foody' ஆகவும், சொந்தக் காசு கொடுத்து சாப்பிட்டால் 'diet' என்றும் சொல்றவங்கதான் நம்மில் அதிகம் @sasitwittz

2. அக்கறையான சொல் நின்று பொருள் தரும்; போக்கற்ற வாய் என்றும் புறம் பேசும் @Jaanu42o

3. சிலரிடம் ஏன் பேசினோம் என்றும், சிலரிடம் ஏன் பேசாமல் விட்டோம் என்றும் அவ்வப்போது வருந்த வேண்டியதாகிறது @Kozhiyaar

4. பசித்த வயிறுக்கு உணவும் போதைதான்; இறைஞ்சும் நெஞ்சங்களுக்கு இறைகூட போதைதான்! @ aryanDec10

5. வேலைநேரத்தில் வேலை செய்றவங்க தொழிலைக் கத்துக்கிறாங்க; வேலைநேரத்தை தாண்டியும் வேலை செய்றவங்க ’தொழில் ரகசியத்தை’ கத்துக்கிறாங்க! @Anvar_officia

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in