இணைய உலகம்

யூடியூப்: பிடிஎஸ் பிரிவால் கே-பாப் ரசிகர்கள் சோகம்
பிடிஎஸ் பிரிவுபசாரம்
பிடிஎஸ் பிரிவுபசாரம்

தென்கொரியாவின் பிரபலமான ’கே டிராமா’ வரிசையில் உலகமெங்கும் ரசிகர்களை வளைத்துப் போட்டிருப்பது ’கே பாப்’. இந்த தென்கொரிய இசைக்குழுக்களில் உலகப் புகழ்பெற்ற பிடிஎஸ் குழு உடைகிறது என்ற சேதி அதன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனித்தனியாக இசைத்து வந்த 7 இளைஞர்கள் ’பிடிஎஸ்’ என்ற பேனரில் ஜூன் 2013-ல் ஒன்றிணைந்தனர். அடுத்த சில ஆண்டுகளில் அவர்களின் இசை கீர்த்தி தென்கொரியாவுக்கு வெளியேயும் பரவியது. பிடிஎஸ் குழுவின் மயக்கும் இசைக்கும், துடிப்பான பாடல் வரிகளுக்கும், 7 வசீகரன்களின் சுவாரசியமூட்டும் சேட்டைகளுக்கும் பித்தேறிய விடலைகள் தமிழகத்திலும் அதிகம்.

சமூக சேவைகளில் பங்களிப்பு, ஐநாவில் சிறப்பு உரையாற்ற அழைப்பு, ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனுடன் சந்திப்பு என இசைக்கு வெளியேயும் பிடிஎஸ் குழுவினருக்கு மதிப்பான அடையாளம் உண்டு. இந்த ஜூனில், ஓர் இசைக்குழுவாக இணைந்ததன் 10-வது ஆண்டில் பிரவேசிக்கிறது பிடிஎஸ். இதனை ஆண்டு நெடுக கொண்டாட திட்டமிட்டிருந்த ரசிகர்களுக்கு பிடிஎஸ் குழுவினர் கசப்பான சேதி தந்திருக்கிறார்கள்.

பிரிவுபசார விருந்தில் கண்ணீர் மல்க பிடிஎஸ் குழுவினர் கலந்துரையாடிய ஒரு மணி நேர வீடியோ, அவர்களின் அதிகாரபூர்வ யூடியூப் சானலில் இந்த வாரம் வெளியாகி இளம் இசை ரசிகர்களை நெகிழச் செய்திருக்கிறது. பீட்டில்ஸ் காலம் தொட்டு இசைக்குழுக்களை உடைத்துவரும் ஈகோ உரசலே பிடிஎஸ் பிரிவுக்கும் காரணமாகி இருக்கிறது. இசைக்குழுவின் வெற்றிக்கு தாங்களே காரணம் என்று ஒவ்வொருவரும் உரிமை கொண்டாட முனைந்ததில் பிடிஎஸ் உடைப்பு தவிர்க்க முடியாது நேர்ந்திருக்கிறது.

ஃபேஸ்புக்: ’200 ஆண்டுகள் நித்தியமாய் வாழ்வேன்’

மெல்லக் கொல்லும் விஷத்தால் முடங்கிப்போனார், மருத்துவ கோமா அல்லது ஆன்மிக சமாதியில் ஆழ்ந்திருக்கிறார் போன்ற புரளிகளின் உச்சமாக, நித்தி செத்துப்போனார் என்பதான பரபரப்புக்கும் நித்யானந்தாவே முற்றுப்புள்ளி வைத்தார். ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...’ என்று பஞ்ச் வசனத்துடன் அவரது இருப்பை உறுதி செய்தார்கள். ஆனால், நித்தியின் பொலிவிழந்த தோற்றமும், குன்றிய உடல்நலமும் புதிய புரளிகளைக் கிளப்பத் தொடங்கின.

’நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறார், பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார், நித்தியின் இந்திய சொத்துகளை கைப்பற்ற முயற்சி, அவரது உயிருக்கு நீடிக்கும் ஆபத்து’ என்றெல்லாம் கைலாசாவின் அபாய மணியை அதிகம் அலற விட்டார்கள். கைலாசாவோ பிடதியோ, நித்தி எங்கிருப்பினும் அவரது முகநூல் பதிவுகள் மற்றும் அதன் வாயிலாக விரியும் வீடியோக்கள் சதா அப்டேட்டில் இருக்கும். சத்சங்க கூட்டங்கள் முதல் பக்தர்களுடனான தகவல்தொடர்புகள் வரை இந்த சமூக ஊடகங்களே நித்தியின் இருப்பை உறுதி செய்வன. ஆனால், பல மாதங்களாக முகநூல் உள்ளிட்ட நித்தியின் அதிகாரபூர்வ பக்கங்களில் அவரது பழைய பதிவுகளே சுற்றலில் விடப்பட்டன.

இந்நிலையில், கடந்த வாரம் முதல் புதிய வீடியோக்களை வெளியிட ஆரம்பித்திருக்கும் நித்தி, தனது பாணியிலான உற்சாக தத்துவ முத்துகளையும் அள்ளித் தெளித்து வருகிறார். அதிலும் ‘எனக்கு இறப்பே இல்லை, 200 ஆண்டுகளுக்கு மேலும் வாழ்வேன்’ என்ற நித்தியின் பிரகடனம் பொதுவெளியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. நம்பிக்கைக்கு உரியவர்களே அவரைக் கொல்ல முயன்றதும், அசையும் சொத்துகளை அபகரித்ததும் நித்தியின் வாக்குமூலத்திலிருந்தே தெரிய வருகிறது. இந்த வேதனைகளை மென்று விழுங்கியபடியும், தேகத்தை கவ்வியிருக்கும் சோர்வினை மறைத்தபடியும் வழக்கம்போல தனது பேச்சுக்கு தானே கெக்கேபிக்கேவென செயற்கையாய் சிரிப்பதை அதிகரித்திருக்கும் நித்தியைப் பார்க்கும்போது பரிதாபமும் மேலிடுகிறது.

கடுமையான பொருளாதார சிக்கலில் தவிக்கும் நித்தி ஆன்லைன் மூலமாகவே தனது ஆன்மிகப் பயிற்சிகள் மற்றும் அதற்கான வசூலுக்கு தயாராவதும் வெளிப்படையாக தெரிகிறது. ஆன்மிகத்தின் பெயரில் சர்ச்சைக்குரிய கருத்துகள் முதல் ஆங்கில சுயமுன்னேற்ற நூல்களில் உருவிய துணுக்குகள் வரை கலந்துகட்டிய நித்தியின் புதிய பதிவுகள் சமூக ஊடகங்களில் சுற்ற ஆரம்பித்திருக்கின்றன. அவை அண்மையில் உருப்பெற்றவையா அல்லது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டவையா என்பது மட்டும் கைலாசாவுக்கே வெளிச்சம்!

ட்விட்டர்: எதிர்ப்பு அனல் பரத்தும் ’அக்னிபாத்’

நுபுர் சர்மா விவகாரம் ஆறுவதற்குள் அடுத்த இடியாப்ப சிக்கலுக்கு மோடி சர்க்கார் ஆளாகியிருக்கிறது. அதிலும் பாஜகவின் வாக்குவங்கி அதிகமிருக்கும் வடமாநிலங்களின் மத்தியிலிருந்து, மத்திய அரசுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து உள்ளனர்.

முப்படைகளின் குறுகிய கால ராணுவப் பணிக்கான ’அக்னிபாத்’ திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்ததில், வடமாநிலங்களில் தொடங்கிய கலவரம் தெற்கே தெலங்கானா வரை பரவியது. ராணுவத்தில் சேரும் கனவோடு பல ஆண்டுகளாக தங்களை தயார்படுத்தி வந்த இளைஞர்களே இந்த போராட்ட களத்தில் முன்நிற்கிறார்கள்.

மேற்கத்திய பாணியில் ராணுவத்தின் செலவினத்தை குறைத்து நவீனமாக்கும் நோக்கிலும், வருடந்தோரும் ஓய்வுபெறும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஈடு செய்யும் வகையிலும் அக்னிபாத் திட்டம் உருவாக்கப்பட்டதாக அரசு தெரிவிக்கிறது. 17.5 - 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை 4 வருட ராணுவ சேவையில் சேர்க்கும் இந்த திட்டத்தின் முடிவில் 75 சதவீத வீரர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு ஓய்வூதியமும் கிடையாது. இதனால் ’இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை அரசே அதிகரிக்கிறது; அப்படி ராணுவ பயிற்சி பெற்ற வேலையற்றோரால் புதிய போராளிகள் உருவாவார்கள்’ என்றெல்லாம் ஆட்சேபங்கள் அதிகரித்து வருகின்றன. போராட்டக் களத்தின் வெப்பம் ட்விட்டர் மீம்ஸ்களிலும் பிரதிபலித்தது.

போராட்ட அனலைத் தணிக்க அக்னிபாத் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பில் அரசு தளர்வினை அறிவித்துப் பார்த்தது. ஆனால், ’எல்லையைக் காக்க தயாரான இளைஞர்களை கசப்போடு உள்நாட்டு கலவர செயல்பாடுகளில் தள்ளிவிட்டிருக்கிறது அக்னிபாத் அறிவிப்பு’ என்ற குற்றச்சாட்டு மட்டும் குறைந்தபாடில்லை.

தத்துவ முத்துக்கள்

1.வாங்கிய ஆடை கிழியும் வரை அணிந்திருந்தால் ஏழை. கிழிந்த ஆடையை வாங்கி அணிந்திருந்தால் பணக்காரன்! @talksstweet

2.ஏமாற்றங்களின் சுமையைத் தவிர்க்க எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வதே ஆகச்சிறந்தது @VelusamyB10

3.மனம் சொல்ல விரும்பியவை எல்லாம் சொல்லுக்குள் அடங்கிவிடுவதில்லை. @Vanaja_twitz

4.பலரின் முகத்திரையைக் கிழிக்க உண்மைகளைவிட ஆதாரங்களே அத்தியாவசியமாகிறது @sasitwittz

5.மகள் சொல்லும் ’அ’னா‘ ஆ’வனாவில் மொழி கற்கிறாள் தமிழ்த்தாய் @5Murugesan

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in