இணைய உலகம்

நயன் - சிவன் கல்யாண வைபோகமே !
இணைய உலகம்

சமூக ஊடகங்கள் மத்தியில் இந்த வாரத்தின் கவன ஈர்ப்புகளில் ஒன்றானது நயன்தாரா திருமணம்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் இடையிலான காதல், அவர்களை இணைத்த சினிமா, இருவரும் சேர்ந்து தயாரித்த திரைப்படங்கள் என்று ஆறு வருட காதலின் வெவ்வேறு பக்கங்களை ட்விட் உலகம் ஆராதித்து மகிழ்ந்தது.

அதிலும் மகாபலிபுரத்தில் நடைபெற்ற மணவிழாவுக்கான ஏற்பாடுகள், விருந்தினர் மற்றும் ஊடகங்களுக்கான கெடுபிடிகள், மணவிழா நிகழ்வை ஓடிடிக்கு விற்று அந்த தொகையில் ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகள் பசியாற ஒதுக்கியதாக சொல்லப்படுவது உள்ளிட்ட சகலமும் பேசு பொருளாயின.

இவற்றின் மத்தியில் நயன்தாரா கடந்து வந்த பாதையும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரைப்பயணத்திலும் விழுந்து எழுந்த தடுமாற்றங்களும், உச்சத்தை தொடுவதற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவையும் சிலாகிக்கப்பட்டன. இதில் வழக்கமான வன்ம பதிவுகளுடன், எங்கிருந்தாலும் வாழ்க என்றபடி தங்கள் கனவுக்கன்னியை விக்னேஷ் சிவனுக்கு தாரைவார்த்தோரின் தயாளமும் எட்டிப்பார்த்தன.

யூடியூப்: திடீர் பிரபலமான ஜானி டெப் வழக்கறிஞர்

முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்டுக்கு எதிராக ஜானி டெப் தொடுத்திருந்த அவதூறு வழக்கு, தீர்ப்பு கண்ட பிறகும் சமூக ஊடக விவாதங்களில் தொடர்ந்து வருகிறது. வெர்ஜினியா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற ஆறு வார காலமும், விசாரணைக் களம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் ஹாலிவுட் மெகாசீரியலுக்கு இணையான முக்கியத்துவம் இந்த வழக்குக்கு வாய்த்தது.

வழக்கின் நேரடி காட்சிகள் மட்டுமன்றி அவற்றை காண வாய்ப்பில்லாதவர்களுக்கான குறுந்தொகுப்புகளை வழங்குவதற்காக ’ஜானி அன்ட் ஆம்பர் லைவ்’ (Johnny and Amber Live) போன்ற யூடியூப் சானல்கள் பிரத்யேகமாய் தொடங்கப்பட்டன. வழக்கு முடிவு கண்ட பிறகும் இந்த யூடியூப் சானல்கள் தங்கள் வருமானத்தை இழக்க விரும்பவில்லை. தங்கள் அபிமான நட்சத்திரங்களின் வழக்கு மோதல் தருணங்களை ரசிக கண்மணிகளும் மறக்க விரும்பவில்லை. இதன் விளைவாக வழக்கின் சுவாரசியத் திருப்பங்கள், ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹெர்ட் ஆகியோரின் ரசனையான முகக்குறிப்புகள் ஆகியவற்றை துழாவி வீடியோவாக்கி வெளியிடுகிறார்கள்.

தனது வழக்கறிஞர் கேமில் உடன் ஜானி டெப்...
தனது வழக்கறிஞர் கேமில் உடன் ஜானி டெப்...

வழக்கின் தொடக்க காலத்தில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர் என்ற அனுதாபம் காரணமாக நடிகை ஆம்பர் ஹெர்ட்டை இந்த யூடியூப் சானல்கள் தூக்கிக் கொண்டாடின. இதனால் ஜானி டெப் தரப்பினர் கவலையுறும் அளவுக்கு வெகுஜன ஆதரவும் ஆம்பர் பக்கமே வீசியது. ஆனால், வழக்கின் போக்கில் அது ஜானி டெப் பக்கம் திரும்பியது. அந்த வகையில் முடிவும் ஜானிக்கு சாதகமாகவே தீர்ப்பானது. இதற்கு ஜானியின் பெண் வழக்கறிஞர் கேமில் முக்கியக் காரணமானார். ஆம்பருக்கு எதிரான குறுக்கு விசாரணைகளில் அவரது புகழைச் சரிக்கும் வகையிலும், ஜானியின் பெருந்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையிலும் பல்வேறு உண்மைகளை வெளிக்கொணர்ந்தார் கேமில்.

இதன் விளைவாக முன்னாள் நட்சத்திர தம்பதியரைவிட இந்த வழக்கின் புதிய நட்சத்திரமாக கேமில் கொண்டாடப்படுகிறார். அவற்கேற்ப கேமில் பணியாற்றும் சட்ட நிறுவனம் அவருக்கு பதவி உயர்வு தந்து கௌரவித்திருக்கிறது. ஜானி - ஆம்பர் வழக்கு விசாரணைக்காக ஆரம்பிக்கப்பட்ட யூடியூப் சானல்கள் இந்த இருவரையும் புறந்தள்ளி தற்போது கேமில் புகழ்பாடி வருகிறது. கூடவே ஜானி - கேமில் இடையிலான புரிதலை விளக்கும் வகையிலும், அது எவ்வாறு வழக்கின் போக்குக்கு உதவியது என்றெல்லாம் ஒரு திரைப்படத்துக்கு இணையான சுவாரசியங்களுடன் வீடியோக்களை வெளியிட்டு ரசிக வரவேற்புகளை அள்ளி வருகிறார்கள்.

ஃபேஸ்புக்: விக்ரம் வெற்றியில் வறுபட்ட பீஸ்ட்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது திரைப்படம் வெற்றிமுகம் பெற்றதில் கமல்ஹாசன் பெருமகிழ்ச்சி கொண்டிருக்கிறார். ‘விக்ரம்’ திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் நெகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். இயக்குநர் லோகேஷ் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு சொகுசு கார், நவீன் பைக் என பரிசளித்து அசத்தினார். இது தொடர்பாக பற்றிக்கொண்ட முகநூல் அக்கப்போர்களில், கமலுடன் ஒப்பிட்டு இதர முன்னணி நடிகர்கள் இடித்துரைக்கப்பட்டனர்.

அப்படி பணியாற்றிய திரைப்படங்களின் கலைஞர்களுக்கு நட்சத்திரங்கள் வழங்கிய வெகுமதியின் வரலாறு, ரஜினியின் தங்கக் காசுகளில் தொடங்கி அஜித்தின் பிரியாணி வரை நீண்டன. ஆனபோதும் ‘விக்ரம்’ கமலை விதந்தோதும் முகமாய் இதர நட்சத்திரங்களை இகழ்ந்தவர்கள், கூடவே அவர்களின் பாராட்டை தவறவிட்ட இயக்குநர்களையும் வறுத்தெடுத்தார்கள். இதில் விஜய் நடித்து அண்மையில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் அதிகம் பேருக்கு அவலானார்.

திரையரங்குகளில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் ஓடிடியில் ஒதுங்கி வாரங்கள் கடந்துவிட்டது. ஆனபோதும், ஒரு மாஸ் ஹீரோவுக்கான படைப்பை ஏக போதாமைகளுடன் தந்துவிட்டதாக, நெல்சன் மீது மீண்டும் விழுந்து பிராண்டினார்கள். திரைவிழா மேடைகளில் நெல்சனே புலம்பும் அளவுக்கு அவருக்கு எதிரான சமூக ஊடகங்களின் கிண்டல்கள் தொடர்கின்றன. ‘பீஸ்டை’ தொடர்ந்து ரஜினிகாந்தின் ’தலைவர்169’ திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருப்பதாலும் நெல்சனுக்கு எதிரான புகைச்சல் கூடியது.

இந்த இடித்துரைப்புகள் எல்லை மீறியதும், ஃபேஸ்புக் பயனர்கள் மத்தியிலிருந்தே நெல்சனுக்கான ஆதரவும் நீண்டது. அது ஒருவகையில் ஆரோக்கியமான போக்கிலும் அடியெடுத்தது. வாழ்க்கையிலும், தொழிலிலும் தொடர் வெற்றிகள் சாத்தியமே இல்லை என்பது குறித்தும், அதில் குறுக்கிடும் தவிர்க்கமுடியாத தோல்விகள் குறித்தும் இந்த விவாதங்கள் அர்த்தபூர்வமாய் மாறின. தோல்வி என்பது தரும் அழுத்தங்கள், அதிலிருந்து விடுபடுவதன் சாத்தியங்கள், வெற்றிக்கு அடித்தளமிடும் தோல்வியின் படிப்பினைகள், சறுக்கியவர் மீதான சமூகத்தின் எக்காளங்கள் குறித்தெல்லாம் பரிவுடன் பதிவுகள் நீண்டன.

தத்துவ முத்துக்கள்

1. கேட்டுப் பெறப்படும் அக்கறையில் துளியும் அன்பிருக்காது @pithamakal

2. பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும் @Sivachitradev

3. சாலையில் அழகான பெண் கடக்கும்போதெல்லாம், அவரை நாம் கவனிக்கும் முன்னர் நம்மை கவனிக்கத் தொடங்குகின்றன துணைவியாரின் கண்கள்! @Kozhiyaar

4. சரியா வருது வரல, ஜெயிக்குறோம் தோக்குறோம்; இதெல்லாம் இரண்டாவது தான்.பிடிச்ச விஷயத்தை செஞ்சிட்டுப் ‌போய்ட்டே இருப்போம் @KARTHITWITZS

5. நாம ஆபிஸுக்கு போற அவசரம் இந்த பஸ் டிரைவருக்கு புரியவே வாய்ப்பில்ல. ஏன்னா அவர் வேலைக்கு வந்துட்டார்; நாம இப்பதான் போறோம் @thamizhisai

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in