இணைய உலகம்

யூடியூப்: பட்டாம்பூச்சி பெண்ணின் அன்றாடங்கள்
இணைய உலகம்

யூடியூபர்கள் மத்தியில் ஒவ்வொரு வீடியோவுக்கும் கன்டென்ட் தேடி மண்டையை உடைத்துக்கொள்வோர் அதிகம். மாறாக, தங்களது அன்றாடங்களையே சுவாரசியமான வீடியோக்களாக்கி வெற்றி பெறுவோரும் இருக்கிறார்கள். இவர்களில் ’ஸ்நேகாலிக்’ சேனலின் ஸ்நேகா பிந்தைய ரகம்.

அம்மணி படிப்பது ப்ளஸ் 1. தோற்றத்திலும், துறுதுறுப்பிலும் பக்கத்து வீட்டிலிருந்து சிநேகமாய் எட்டிப்பார்க்கும் பதின்வயது சிறுமியை ஒத்திருக்கிறார். ஆனால், சரியான சேட்டைக்காரி. வாயைத் திறந்தால் மூடத்தெரியாது. ஸ்நேகாவின் இந்த இயல்புகளே அவரின் தனித்துவ வீடியோக்களுக்கும் அடையாளமாகிறது.

சிநேகாவின் அம்மா மற்றும் அண்ணனும் தனி யூடியூப் சேனல் வைத்திருக்கிறார்கள். ஆனால் சப்ஸ்க்ரைபர்ஸ், வியூஸ், கமென்ட்ஸ் என சகலத்திலும் ஸ்நேகாவின் சேனலே வரவேற்பை அள்ளுகிறது. 16 வயது பட்டாம்பூச்சி பெண்ணின் அன்றாடப் பொழுதுகளில் ஒளிந்திருக்கும் சுவாரசியங்கள், சமாளிப்புகள், குறும்புகள், அழும்புகள் அத்தனையும் ஸ்நேகாவின் வீடியோக்களில் உண்டு. கூடுதலாக அவற்றை வெளிப்படுத்துவதில் ஸ்நேகா பாவிக்கும் அபிநயங்களுக்காகவும் தனி ரசிகர்கள் வாய்த்திருக்கிறார்கள்.

அம்மாவின் செல்லங்கள், அண்ணனுடனான சண்டைகள், பிடிஎஸ் இசைக்கான ஆட்டம் என ஸ்நேகாவின் அன்றாடங்களில் கலகலப்புக்கு குறைச்சலில்லை. இப்படி ஸ்நேகா கடக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தும் வீடியோவுக்கான அட்டகாச கன்டென்டாக மாறிவிடுகின்றன. குறுகிய இடைவெளியில் சுமார் அரை மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் தேற்றியிருக்கும் ஸ்நேகா, யூடியூப் சம்பாத்தியம் மூலம் 16 வயதிலேயே தொழில் முனைவோர் ஆனது குறித்தும் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

ஃபேஸ்புக்: அடையாள துறப்பும் அறியாமையும்

கோவையைச் சேர்ந்த நரேஷ் - காயத்ரி தம்பதியர் தங்களது மகள் வில்மாவின் பள்ளி சேர்க்கையை முன்னிட்டு, ’சாதி மதம் அற்றவர்’ என்று அரசிடம் சான்றிதழ் வாங்கியுள்ளனர். மக்கள் மத்தியிலான பிரிவினைக்கும் பல்வேறு சமூக கேடுகளுக்கும் காரணமான சாதி, மத அடையாளத்தை தூக்கியெறிந்ததற்காக வில்மாவின் பெற்றோருக்கு பாராட்டுகள் குவிந்தன.

இவ்வாறு அடையாளம் துறக்கும் அரசு சான்றினை விண்ணப்பித்து பெறுவதில் இவர்கள் முதல் அல்ல. இதற்கு முன்னதாகவும் பலர் சாதி மத அடையாளங்களை ஆவணபூர்வமாக துறந்ததற்காக பாராட்டு பெற்றதோடு, பொதுவெளியில் விழிப்புணர்வையும் விதைத்திருக்கிறார்கள்.

இதன் எதிரொலியாக சாதி, மதத்தைத் துறப்போம் என்ற முழக்கத்தோடு முகநூலில் நீளமான கட்டுரைகள் உலா வரத் தொடங்கின. அடுத்த தலைமுறையினர் மத்தியில் சாதி, மத அடையாளத்தை அகற்ற, இப்படி சான்று பெறுவதே சிறந்த உபாயமென்று பரவலாக பிதற்ற ஆரம்பித்தார்கள். விபரமறிந்தோர் இந்த அடையாள துறப்பின் மறுபக்கத்தை சுட்டிக்காட்ட ஆரம்பித்த பிறகே அபத்தங்கள் பிடிபட ஆரம்பித்தன.

சாதியின் பரிணாம வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் சான்றிதழ் என்பதும் அது அச்சிடப்படுவதும் அண்மையில் உருவானவை. ஆனால், ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்தில் ஊறிக்கிடக்கும் சாதி பிற்போக்கினை இந்த துறப்பு சான்றும், அதற்கான ஆவணத்தாளும் மாற்றிவிடாது என்பதை அவர்கள் புரியவைக்க முயன்றனர். மேலும், கல்வி, வேலைவாய்ப்பு என்று ஒடுக்கப்பட்டோர் மீண்டு வருவதில் சாதிச் சான்றிதழின் பங்கு குறித்தும் முற்போக்காளர்களின் விளக்கங்கள் முகநூலில் இடம்பெற ஆரம்பித்தன. அதன் பிறகே அடையாளம் துறக்கும் மேலோட்டமான மேட்டிமை வாதங்களில் மூழ்கிக்கிடந்தவர்கள் தெளிய ஆரம்பித்தனர்.

ட்விட்டர்: வெங்கடேஷ் பட் பற்றவைத்த விவாதம்

’குக் வித் கோமாளி’ பார்த்தவர்கள் எளிதில் கருத்தரிக்கிறார்கள்; செயற்கை கருத்தரித்தலின் சிரமங்களைக் குறைக்க இந்த நிகழ்ச்சி உதவியதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்’ இப்படி செஃப் வெங்கடேஷ் சொன்னதுமே கீச்சுலகம் பற்றிக் கொண்டது. வெங்கடேஷ் கூற்றின் முதல் வரியை பிடித்துக்கொண்டு அவரை கலாய்த்துத் தள்ளினார்கள்.

செயற்கை கருத்தரிப்பை மையமாக்கி அண்மையில் இரண்டாவது முறையாக சமூக ஊடகங்கள் திமிலோகப்பட்டிருக்கின்றன. முதலாவது, நள்ளிரவு பிரியாணி கடைகளால் பெருநகரங்களில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்திருப்பதாக சிலர் கிளப்பிய புரளியால் உருவானது. அடுத்தபடியாக விஜய் டிவியின் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான செஃப் வெங்கடேஷால் கிளம்பியது. இந்த நிகழ்ச்சியின் புரோமோவில் உணர்ச்சிகரமான அனுபவம் ஒன்றினை வெங்கடேஷ் பகிர்ந்திருந்தார்.

‘பல வருடங்களாக குழந்தையில்லாது செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்மணியின் மன அழுத்தத்தை மறக்க ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி உதவியதாகவும், அவரது சிரமங்கள் குறைந்ததில் வெற்றிகரமான கருவுறல் மற்றும் குழந்தை பேறு வாய்த்ததாகவும்’ தானறிந்த தகவலை விளக்கமாகவே வெங்கடேஷ் பதிவு செய்தார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் குழந்தைக்காக காத்திருந்த அனுபவத்தையும் தனியாக பதிவு செய்திருந்தார்.

குக் வித் கோமாளியில் வெங்கடேஷ் பட்
குக் வித் கோமாளியில் வெங்கடேஷ் பட்

ஆனால், மீம்ஸ் என்ற பெயரில் ஒரு சிலர் எல்லை கடந்து அசூயை மற்றும் விரசங்களைப் பகிர ஆரம்பித்தனர். அவற்றை பதிவு செய்தவர்களில் பெரும்பாலானோர் முதிர்ச்சியற்ற இளைஞர்கள். குழந்தையின்மை, கருத்தரிப்பு, குழந்தைப் பேறு உள்ளிட்ட பெண்களைப் படுத்தும் சிரமங்களை அறியாதவர்கள் அல்லது அறிய விரும்பாதவர்கள். மருத்துவர்கள் மற்றும் செயற்கை கருவுறலில் குழந்தை பெற்ற பெண்கள் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றதும், அதன் போக்கு முற்றிலுமாக மாறியது.

சமூகத்தின் பார்வையில் குழந்தை இல்லாதோர் எதிர்கொள்ளும் சங்கடங்கள், கருத்தரிப்பை தவிர்க்கும் அல்லது ஒத்திப்போடும் தம்பதியருக்கு பொதுவெளியில் கேட்காது கிடைக்கும் அறிவுரைகள் மற்றும் அவமதிப்புகள், அவை தொடர்பான பெண்களின் கண்ணீர் கதைகள் ஆகியவற்றை பலரும் உருக்கமாக தெரிவித்தனர். செயற்கை கருத்தரிப்புக்கான ஐவிஎஃப் சிகிச்சை என்பது மிகவும் நெடிய, நிதானம் கோரும் சிகிச்சை என்றும், அவற்றை பெறுவோரின் மன அழுத்தத்தை தீர்க்க இசையும், நகைச்சுவையுமே மாமருந்து என்றும் விளக்கினார்கள். அதன் பிறகே கிண்டல் பதிவுகளைப் பகிர்ந்தவர்களில் பலரும் அவற்றை நீக்க ஆரம்பித்தனர்.

தத்துவ முத்துக்கள்

1. சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்பதெல்லாம், இன்னொருவரிடம் இன்னொரு சத்தியத்தில் சுலபமாக உடைபடுகிறது 😂@Cat__offi

2. போராடும் வரை வீண் முயற்சி என்பார்கள்; வென்ற பிறகு விடாமுயற்சி என்பார்கள்! @ParasuR25521317

3. எதிர்பாரா முத்தத்தின் ஆயுட்காலம் அதிகமே @2prabhu65290

4. பிடித்தால் இனிப்பென்றும் பிடிக்காதபோது கசப்பென்றும் பெயரிடுவதில் பெரும்பாலான தப்பித்தல்கள் அரங்கேறுகின்றன @imkamalguru

5. ஒன்றை இழப்பதைவிட விட்டுக்கொடுப்பது இன்னும் கடினமானது @Birai_twtz

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in