இணைய உலகம்

யூடியூப்: வெறுப்பாளர்களை அசரடித்த அண்ணாச்சி!
இணைய உலகம்

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணனின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ’தி லெஜெண்ட்’. சரவணா ஸ்டோர்ஸ் கடைகளுக்கான விளம்பரங்களை இயக்கி வந்த ஜோடி இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி, அந்த விளம்பரத்தில் சரவணனையும் நடிக்க வைத்ததில் அண்ணாச்சியை கலைத்தாகம் பற்றிக்கொண்டது.

கடை விளம்பரங்கள் சின்னத்திரையில் வெளியானபோதே, சமூக ஊடகங்களில் கடும் கிண்டலுக்கு ஆளானார் சரவணன். மீம்ஸ் தோறும் சரவணனின் தோற்றத்தை இகழ்ந்தார்கள். சாமானியர்களின் தாழ்வுணர்ச்சியை பிரதிபலிக்கும் இந்த பகடிகளுக்கான பதிலை, பெரிய திரைக்கான தனது பிரவேசம் மூலம் அதிரடித்தார் சரவணன்.

ஜோடியாக பாலிவுட் இறக்குமதி ஊர்வசி ரௌட்டலா, ஹாரிஸ் ஜெயராஜ் இசை, பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை, வேல்ராஜ் ஒளிப்பதிவு என திடமான பின்புலத்துடன் ’தி லெஜண்ட்’ தயாராகி உள்ளது. கடந்த மாதம் ’மொசலோ மொசலு’ லிரிக் வீடியோ யூடியூபில் வெளியானபோது, அண்ணாச்சியை கலாய்த்து மீம் கிரியேட்டர்கள் உக்கிரமாக களமாடினார்கள். சரவணா ஸ்டோர்ஸின் சற்றே நீண்ட விளம்பரமாக ஜொலித்த அந்த பாடலில், அறிமுக நாயகனுக்கே உரிய தடுமாற்றங்களுடன் ரகளை ராமராஜனாக சரவணன் சமாளித்திருந்தார். கடந்த வாரம் வாடி வாசல் பாடல் வீடியோ வெளியானதும், சரவணனுக்கு எதிரான வெறுப்பாளர்களின் வேகம் சற்றே தணிந்திருந்தது.

மெலடியின் போக்கில் ஒரு குத்துப் பாடலை உருவாக்கிய ஹாரிஸ் ஜெயராஜ் அதிகம் சிலாகிக்கப்பட்டதற்கு அப்பால், சரவணனின் தன்னம்பிக்கையும் அதிகம் பேசப்பட்டது. இதன் விளைவாக யூடியூபில் வெளியான சில தினங்களில் ஒரு கோடி பார்வைகளை கடந்துள்ளது ’வாடி வாசல்’ பாடல்.

ட்விட்டர்: ட்ரெண்டிங்கில் முன்நின்ற ’கோபேக் மோடி!

மோடியின் முந்தைய தமிழக வருகையின் போதெல்லாம் ’கோபேக் மோடி’ முழக்கங்கள், சமூக ஊடக ட்ரெண்டிங்கில் முன்னணி வகிக்கும். இந்த முழக்கத்தை முன்னெடுக்கும் திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு, அதிகாரபூர்வ வருகை தரும் மோடிக்கான வரவேற்பு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாயின.

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் மேடையை அலங்கரிக்கும் விழா என்பதால் திராவிட ஆர்வலர்கள் அடக்கியே வாசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது வேறு! ஆட்சியில் இருந்தாலும் மோடி எதிர்ப்பில் பின்வாங்க மாட்டோம் என ’திராவிடியன் ஸ்டாக்ஸ்’ நிரூபித்தது. இதன் விளைவாக இந்த முறையும் ’கோபேக்_மோடி’ முழக்கம், ட்விட்டர் இந்தியாவின் அரசியல் பிரிவில் முதலிடம் வகித்தது. பதிலடியாய் ‘வணக்கம்_மோடி’ என்ற முழக்கத்தை தாமரை தம்பிகள் முன்னெடுத்தபோதும், கோபேக் மோடியே முந்தியது.

இதில் ’வணக்கம்_மோடி’ என்று மோடி புகழ் பாடிய பாஜக தமிழக பிரமுகர்களின் பதிவுகளில் எல்லாம் திராவிட அபிமானிகள் வான்டடாக வந்து வம்பிழுத்தனர். எச்.ராஜா போன்றோரின் ட்விட்டர் பக்கங்கள் மோடி எதிர்ப்பே அதிகம் ஒலித்தது. அதிலும் அண்ணாமலையின் ட்விட்டர் பக்கத்தில் ரசனையோடு வம்புகளை விதைத்தனர். மோடியை வரவேற்றதில் தொடங்கி விழா நிகழ்விடம் வரை, அடக்கி வாசித்த அண்ணாமலைக்கு எதிராக உட்கட்சி புரளிகளையும் கிளப்பிவிட்டனர்.

அண்ணாமலையின் செயல்பாடுகளில் டெல்லி மேலிடம் அதிருப்தியானதால் மோடி அவரை தவிர்த்திருப்பதாகவும், விரைவில் பாஜக மாநில தலைமை மாறும் என்றும் கொளுத்திப் போட்டார்கள். மோடிக்கு ஆதரவாக கச்சைகட்டி வந்தவர்கள், அண்ணாமலைக்கு எதிரான இந்த புரளிகளால் ’அப்படியும் இருக்குமோ’ என்று சுதி இறங்கிப் போனார்கள்.

அடிமட்டத் தொண்டர்களின் ட்ரெண்டிங் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அவர்களின் தலைவர் ஸ்டாலினும் மேடையில் தடம் பதித்தார். மோடி வீற்றிருந்த மேடையில் வைத்தே ’ஒன்றியம்’ என்பதை மந்திரம் போல உச்சரித்தார். கூட்டாட்சியில் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதை புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்ததுடன், ஜிஎஸ்டி, நீட் விவகாரங்களையும் விடவில்லை. ’கோபேக் மோடி’ என்பதை தவிர்த்து சகலத்தையும் ஸ்டாலின் பேசிவிட்டார் என்று உடன்பிறப்புகள் குதூகலித்தனர். அதை பிரதிபலிக்கும் வகையில் அடுத்த நாளே உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த படமும் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டது.

ஃபேஸ்புக்: கடின வினாத்தாளும் மாறிய ’கணக்கும்’!

இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் பள்ளி திரும்பிய மாணவர்கள் மத்தியில், பொதுத்தேர்வுகள் ரத்தாகுமா என்ற நப்பாசை நீடித்தது. ஆனால், பாடப்பகுதிகளை குறைத்ததோடு பொதுத்தேர்வு ஏற்பாடுகளில் தீவிரமானது பள்ளிக்கல்வித்துறை. ஆன்லைன் கல்விக்கு வாய்ப்பில்லாத அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியிலான ஏமாற்றம், பொதுத்தேர்வு வருகைப் பதிவில் வெடிப்பாக வெளிப்பட்டது.

10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகளில் பல்லாயிரக்கணக்கிலான மாணவர்கள் ’ஆப்சென்ட்’ ஆனார்கள். கரோனா விடுமுறையில் ஜீவனத்துக்கான உழைப்பு, திசை திருப்பிய சகவாசம் என கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களே இதில் அதிகம். அப்படியும் முன்னதாக பள்ளி வந்த மாணவர்கள் மத்தியில், அவர்கள் தடம்புரண்டதன் அடையாளங்களான கீழ்படியாமை, ஒழுக்கமின்மைக்கான உதாரணங்கள் வீடியோக்களாக வெளியாகி பதற வைத்தன.

அரவணைப்பும் வழிகாட்டலும் போதாத குடும்பங்களிலிருந்து அரசுப் பள்ளிகளில் அடைக்கலமான மாணவர்களுக்கு எதிராக அப்போது சமூக வெளியில் அதிகமானோர் விஷம் கக்கினார்கள். ஆசிரியர்களுக்கு பிரம்பு அவசியம், தவறிழைக்கும் சிறார்கள் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் முகநூலில் நீளமான கட்டுரைகள் தீட்டப்பட்டன.

இவற்றுக்கு மத்தியில், ஆன்லைன் வகுப்புகளின் அனுகூலமின்றி ஒப்பேற்றிய பாடத்தயாரிப்புடன் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சில வினாத்தாள்களின் கடினத்தன்மை அவர்களை பதற வைத்தது. குறிப்பாக, பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், நீக்கப்பட்ட பாடப்பகுதிகளில் இருந்தெல்லாம் வினாக்கள் வந்திருந்தன.

கணக்கு என்றாலே பிணக்கில் அல்லாடும் எளிய மாணவர்களை இந்த வினாத்தாள் மிகவும் பயமுறுத்தியது. அதுவரை மாணவர்களுக்கு எதிராக பதிவிட்டு வந்த ஆசிரியர்கள் பலரும் கடின வினாத்தாள் தயாரிப்புக்கு எதிராக பதிவிட ஆரம்பித்தனர். தேர்ச்சி சதவீதம் குறைவது ஆசிரியர்களையும் அதிகம் பாதிக்கும் என்ற பதற்றமும் அதில் வெளிப்பட்டது.

தத்துவ முத்துகள்

உண்மை ஒருமுறை பேச வைக்கும். பொய் தொடர்ந்து புலம்ப வைக்கும் @sankariofficial

மனம்விட்டுச் சிரிக்கப் பெரிதாய் காரணம் தேவையில்லை என்பதை குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளலாம் @asdbharathi

யாரோ எதையோ சொல்லிவிடுவார்கள் என்ற அநாவசிய அச்சமே பலரின் இயல்பை தொலைக்கச் செய்கிறது @jeevak2000

எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் என்று நம்மை நம்ப வைக்கிறதுதான் மூளையின் புத்திசாலித்தனம்! @Anvar_officia

மனவுறுதி மிக்கவர்களிடம் பழிவாங்கும் எண்ணமோ வஞ்சகமோ தென்படாது. மாறாக, இதழ் நிறைந்த புன்னகையுடன் கடந்து செல்லும் பக்குவே இருக்கும் @Beauty_amaz

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in