இணைய உலகம்

ஃபேஸ்புக்: மாரிதாஸின் சீற்றமும் மாற்றமும்
இணைய உலகம்

’சண்டையில் எந்த சமரசமும் கிடையாது’ கடந்த டிசம்பர் இறுதியில் மாரிதாஸ் பெயரில் இப்படி ஒற்றை வரி முகநூல் பதிவு வெளியானபோது, பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு கிளம்பியது. ஆனால், தன் மீதான வழக்குகளை ஒவ்வொன்றாக முறியடித்து வீடு திரும்பிய மாரிதாஸின் இந்த பதிவும், மாரிதாஸின் பாஜக பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பும் சீக்கிரமே நமுத்துப் போயின.

பாஜகவில் முழுமையாய் ஐக்கியமாவதில் தகுதிக்கு மேல் மாரிதாஸ் எதிர்பார்க்கிறார் என்றும், மாரிதாஸ் பிரவேசத்துக்கு அண்ணாமலை நந்தியாகிறார் என்றும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் பாஜகவுக்குள் கமுக்கமாய் ஓடின. ’யாரும் எனக்கு முட்டுக்கட்டை போடவில்லை’ என மாரிதாஸ் கடந்த வாரம் வெளியிட்ட வீடியோவில், அண்ணாமலையை சுற்றி வளைத்து தாக்கியும் இருந்தார்.

ஒயிட் போர்டும், ஓங்கார விளக்கமுமாக வீடியோ வெளியிடுவதுடன் தனது அரசியல் கனவு அஸ்தமித்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார் மாரிதாஸ். 3 வாரங்களுக்கு முன்னர் தமிழருவி மணியனுடனான நேரடி ஆலோசனைக்குப் பின்னர் மாரிதாஸ் மாற்றம் வெளிப்படையானது.

தான் பெரிதும் முன்னெடுக்கும் தேசியம், இந்துத்துவம் ஆகியவற்றை அண்ணாமலை நீர்த்துப்போகச் செய்வதாகவும் புலம்ப ஆரம்பித்தார். அதிலும் திராவிடத்துக்கு எதிரான போரில் அதனை அழித்தொழிப்பதற்கு பதில் ’திராவிடம் பிளஸ்’ என்ற விநோத வியூகத்தை கைக்கொள்வதாக அண்ணாமலைக்கு எதிரான மாரிதாஸின் அதிருப்தி அதிகரித்தது. ராஜ்சபா எம்பி முதல் கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் வரை மாரிதாஸ் எதிர்பார்த்த விஷயங்கள் படியாததே புலம்பல்களுக்கு காரணம் என்கிறார்கள் அண்ணாமலை ஆதரவாளர்கள்.

தனது அரசியல் பிரவேச சங்கடங்களை விவரிக்கும் ’முட்டுக்கட்டை’ வீடியோவை முகநூலில் பகிர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் ஆழம் பார்த்தார் மாரிதாஸ். ஆனால், எதிர்பாரா வகையில் ’அண்ணாமலையுடன் இணக்கமாக போகவும்’ என்ற ஆலோசனையே அதிகமானோரிடமிருந்து கிடைத்து வருகிறது. எனவே, தற்போதைக்கு கட்சியில் சங்கமிக்கும் முடிவை ஒத்திப்போட்டதுடன் வழக்கமான ஒயிட்போர்டுக்கு திரும்பியிருக்கிறார் மாரிதாஸ்.

ட்விட்டர்: விஜய் மீது பாய்ந்த வடக்கு விமானிகள்

திரையரங்குகளில் ஓடும்போதே, ஓடிடி தளங்களுக்கும் தாவியது பீஸ்ட் திரைப்படம். ’சன் நெக்ஸ்ட்’ மட்டுமன்றி ’நெட்ஃப்ளிக்ஸ்’ தளத்திலும் களம் கண்டிருப்பதாலும், பரவலான பார்வையாளர்களை சென்றடைந்து வருகிறது பீஸ்ட். அதே அளவுக்கு சச்சரவுகளை கூட்டியும் உள்ளது.

பீஸ்ட் திரையரங்குகளில் வெளியானபோது, அதன் லாஜிக் பொத்தல்கள் குறித்து ரசிகர்களால் அதிகம் வறுத்தெடுக்கப்பட்டது. அதிலும் ஒருசேர வெளியான கேஜிஎஃப்-2 திரைப்படத்துடன் ஒப்பிட்டு மாஸ் ஆக்‌ஷன் திரைப்படத்தை முறையாக எடுப்பது குறித்து ஆளாளுக்கு பாடம் எடுத்தார்கள். இதே பீஸ்ட் இதர தென்னக மொழிகள் மட்டுமன்றி ’ரா பீஸ்ட்’ என்ற தலைப்பில் இந்தியிலும் வெளியானதில் பீஸ்ட் வறுவலின் எல்லையும் விரிந்தது.

’ரா’ புலனாய்வு அமைப்பின் இயங்கியல் மற்றும் அதன் ஏஜென்டுகள் குறித்து போதிய புரிதல் இல்லாததாலும், போர் விமானங்கள் தொடர்பான தொழில்நுட்பக் காட்சிகளில் அலட்சியம் காட்டியதாலும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பீஸ்ட் பெரும் பகடிக்கு ஆளானது. அதிலும் கோலிவுட் திரைப்படங்களை ஏளனமாய் எதிர்கொள்ளும் வடக்கத்திய ரசிகர்களின் இளக்காரம் இதில் அதிகம் எதிரொலித்தது.

ட்விட்டரில் களைகட்டிய இந்த கிண்டல் பந்தியில் இந்திய விமானப் படையின் விமானிகளும் சேர்ந்துகொண்டனர். உரிய ஹெல்மெட் மற்றும் ஆக்ஸிஜன் உதவியின்றி போர் விமானத்தை செலுத்தும் நாயகனின் சாகசமும், ஆயிரம் கிமீ வேகத்தில் கடக்கும் போர் விமானிகள் பரஸ்பரம் சல்யூட் பரிமாறிக் கொள்வதுமாக, பீஸ்ட் க்ளைமாக்ஸ் வீடியோ ஒன்று வெளிநாட்டு சினிமா ரசிகர்கள் வரை சதாய்ப்புக்கு ஆளானது. ’காப்பி ரைட்’ மீறலை காரணமாக்கி அந்த வீடியோவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கிய பிறகும் கிண்டல்கள் குறையவில்லை. அதற்கு பின்னர்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

பீஸ்ட் தமிழில் வெளியானபோது அதன் லாஜிக் ஓட்டைகளை கிண்டல் செய்துவந்த ரஜினி, அஜித், சூர்யா உள்ளிட்ட இதர நாயகர்களின் ரசிகர்கள் பலரும், ஓடிடி பீஸ்ட்டுக்கு ஆதரவாக ட்விட்டரில் அணிவகுத்தனர். ஹாலிவுட்டின் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தொடங்கி பாலிவுட்டின் அஜய்தேவ்கன் வரை ஆக்‌ஷன் என்ற பெயரில் அறிவியலுக்கு புறம்பான அட்டூழியங்களை பட்டியலிட ஆரம்பித்தனர். அதிலும் பாலிவுட் ஹீரோக்கள் பலரும் தேசபக்தியின் பெயரால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்‌ஷன் காட்சிகளில் அநியாயத்துக்கு சொதப்பி இருந்தனர். இந்த ட்விட்டுகளை பாகிஸ்தான் பக்கமிருந்தெல்லாம் சிலாகிக்க ஆரம்பித்ததும், பாலிவுட் ரசிகர்கள் சுதி குறைந்தார்கள்.

யூடியூப்: மேலெழும்பும் சித்தண்ணன் வீடியோக்கள்

சித்தண்ணன் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. தமிழக காவல்துறையின் பல்வேறு உயர் பதவிகளை அலங்கரித்தவர். ஓய்வு காலத்தில் காக்கிச் சட்டையை கழற்றிவிட்டு கருப்பு அங்கியுடன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக சுறுசுறுப்பு காட்டுபவர். தனது பணியனுபவத்தையும் சட்ட ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ’சித்தண்ணன் - தி ஐ ஓப்பனர்’ என்ற யூடியூப் சானலையும் நடத்தி வருகிறார்.

காவல் துறை மற்றும் சட்ட நுணுக்கங்கள் குறித்து பல்வேறு புத்தகங்களை வெளியிட்டிருக்கும் சித்தண்ணன், நாட்டுநடப்பில் இடறும் சர்ச்சைக்குரிய க்ரைம் விவகாரங்களை வீடியோவாக்கி வெளியிடுகிறார். ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக, தமிழக காவல்துறை, சிபிஐ, இந்திய அமைதிப்படை மற்றும் உளவு நிறுவனங்களின் ஓய்வுபெற்ற அதிகாரிகளை பேட்டி கண்டு, பல சுவாரசியமான வீடியோக்களை 2 வருடங்களுக்கு முன்னர் சித்தண்ணன் வெளியிட்டிருந்தார்.

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, விடுதலை புலிகள் மற்றும் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான புதிய பார்வையிலான அலசல்கள் மீண்டும் மேலெழுந்து வருகின்றன. கரோனா காலத்தில் சித்தண்ணன் வெளியிட்ட அலசல் வீடியோக்கள், தற்போதைய சூழலில் அதிகமானோரின் பார்வையை எட்டி வருகின்றன. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சமூக ஊடகங்களில் வாதிடும் பலரும், தங்கள் தரவுகளின் அங்கமாக இந்த யூடியூப் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தத்துவ முத்துகள்

1. நாம் செய்யும் காரியங்களில், பிறரிடம் வெளிப்படையாக சொல்ல முடியாத எதிலும் தவறு மறைந்திருக்கவே செய்யும் @siva_satha

2. சந்தேகப்படுறியானு கேட்டு சந்தேகப்படுவது கூட ஒரு வியாதிதான் @manipmp

3. நேரத்தையோ வாழ்க்கையையோ வீணடிக்க விரும்பாதவர், கோபம் வரும் இடத்தில் எல்லாம் சண்டையிடுவது இல்லை @mujib989898

4. அனுபவ பாடத்தை வாழ்க்கையும், வாழ்க்கை பாடத்தை அனுபவமும் கற்று தருகிறது @Meow_offl

5. திருமணமான ஆண்கள் சமாளிக்கத் தடுமாறும் 2 விஷயங்கள்: குழந்தைக்கு தெரியாமல் வீட்டுக்கு 'வெளியே' போவது, மனைவிக்கு தெரியாமல் வீட்டுக்கு 'உள்ளே' வருவது @Anvar_officia

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in