இணைய உலகம்

ஃபேஸ்புக்: நித்திக்கு என்னாச்சு?
இணைய உலகம்

உலகத்தையே புரட்டிப்போட்டிருக்கும் பெருந்தொற்று காலத்தின் பக்க விளைவுகள் நித்தியானந்தாவையும் விட்டு வைக்கவில்லை. சுகவீனம் கண்டிருக்கிறார், புரவலர்கள் புறக்கணிப்பால் விரக்தியில் ஆழ்ந்திருக்கிறார் என்பதில் தொடங்கி, நித்தி இறந்துவிட்டார் என்பது வரை கடந்த சில தினங்களாக வதந்திகள் பரபரத்தன.

புரளிகளைப் புறம் தள்ளுவதற்காக நித்தியானந்தாவின் பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை, நித்தி சீடர்கள் அதிகாரபூர்வமாக உலவும் முகநூல் பக்கங்கள் மற்றும் குழுக்களில் மீண்டும் சுற்றுக்கு விடப்பட்டன. அப்படியும் நித்திக்கு எதிரான வதந்தி புயல் ஓயாததில், கைலாசாவின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் நித்தியானந்தாவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டார்கள். அதில் நித்தியே கைப்பட எழுதுவதாக இரண்டொரு வரிகளையும் சேர்ந்திருந்தனர். அதில் ’நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...’ என்று வழக்கமான பஞ்ச் வைத்திருந்தார் நித்தி.

ஆனால், அந்த புகைப்படங்களில் பழைய நித்தியின் தேஜஸ் காணோம். படுசோர்வாகவும், தளர்ந்தும் காட்சியளித்தார். நித்தியின் உடல் பின்னடைவு குறித்த நீண்ட விளக்கமும் இந்த முகநூல் பக்கங்களில் வெளியாகின. சமாதி நிலையில் தனது உடலை ஆன்மிக பரிசோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகவும், 27 மருத்துவர்கள் அதனைப் பரிசோதித்து வருவதாகவும் புதிரான கருத்துக்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...’
'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...’

ஆஸ்திரேலியா அருகே அடையாளம் அறியப்படாத தீவு ஒன்றில் அமர்ந்துகொண்டு, கடந்த சில வருடங்களாக தனது கைலாசா அருளுரையை ஆன்லைனில் தொடர்ந்து வந்தார் நித்தி. இந்த இடைவெளியில் ’நித்தியின் முகமூடியைக் கிழிக்கிறோம்’ என அவரது முன்னாள் வெளிநாட்டு பக்தர்கள் சிலர் கிளம்பினர். இவர்கள் உட்பட மேலும் சிலர் தொடுத்திருக்கும் மோசடி குற்றச்சாட்டுகள், காலாவதியான பாஸ்போர்ட், இந்தியாவிலிருந்து நீண்ட ஆதரவு கரங்களின் நிராகரிப்பு, பிடதி ஆசிரமத்தில் அதிகரிக்கும் கொந்தளிப்பு உள்ளிட்டவை நித்தியானந்தாவை நிம்மதி இழக்கச் செய்திருக்கின்றன.

சமூக ஊடகங்களுக்கு ஓய்வின்றி கன்டென்ட் வாரி வழங்கி வந்த நித்தியானந்தாவின் உடல் நிலை பாதித்திருப்பது மட்டும் உறுதியாகியிருக்க, முதல்முறையாக நெட்டிசன்களின் பரிதாபத்தையும் சம்பாதித்திருக்கிறார் நித்தி.

ட்விட்டர்: கிராஃபிக்ஸ் வீடியோவும் கிரண்பேடியும்

’டெல்லி ஐஐடியில் படித்தவர், ஐபிஎஸ் அதிகாரியாக திஹார் சிறையின் சீர்திருத்தங்களுக்கு காரணமானவர், மதிப்புக்குரிய மக்சேசே விருதாளர், புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர்...’ என்று ஏகப்பட்ட சிறப்புகள் கொண்டிருக்கும் கிரண்பேடி, பாஜக ஆதரவு நிலைப்பாட்டின்படியான தனது ட்விட்டர் பதிவுகளால் அவ்வப்போது கடும் கேலிக்கும் ஆளாவதுண்டு.

அப்படி இந்த வாரம், ‘கடலுக்கு மேலே பறக்கும் ஹெலிகாப்டரை சுறா ஒன்று பாய்ந்து கவ்வும்’ வீடியோ துணுக்கினை வியப்புடன் பகிர்ந்திருந்தார் கிரண்பேடி. அதைக் கண்டதும் நெட்டிசன்கள் சிலிர்த்துக்கொண்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் குவிந்தனர். கிரண்பேடியின் படிப்பு, பதவி, அனுபவம் ஆகிய அனைத்தையும் இவர்கள் கேள்விக்கு உள்ளாக்கினர். அவற்றில் ஒன்றாக அந்த காட்சி இடம்பெற்ற திரைப்படம் குறித்த செய்திகளை சுட்டிக்காட்டிய பின்னரும் கிரண்பேடி பின்வாங்குவதாக இல்லை.

கிரண்பேடி பகிர்ந்த கிராஃபிக்ஸ் வீடியோ
கிரண்பேடி பகிர்ந்த கிராஃபிக்ஸ் வீடியோ

தொடர்ந்து அவர் சார்ந்த பாஜகவும், இன்னொரு ஐபிஎஸ் சிங்கமான அண்ணாமலையும் பின்னூட்டங்களில் அதிக பகடிக்கு ஆளானார்கள். ’மேடத்தின் ட்விட்டர் கணக்கு மறுபடியும் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது...’ என்றெல்லாம் பாஜக ஆதரவாளர்கள் சமாளித்துப் பார்த்தனர். ஆனால், ’வீடியோவின் உண்மைத் தன்மை ஆய்வுக்குரியது என்றபோதும் பயங்கரமாக இருக்கிறது. எச்சரிக்கையுடன் பாருங்கள்’ என்று அதே வீடியோவை மீண்டும் பகிர்ந்து, தனக்கு முட்டுக்கொடுத்தோர் முகத்தில் கரி பூசினார் கிரண்பேடி.

இம்மாதிரி ட்விட்டர் சர்ச்சைகள் கிரண்பேடிக்கு புதிதல்ல. 2 ஆண்டுகளுக்கு முன்னர் ’சூரியனின் ஓங்கார நாதத்தை பதிவு செய்த நாசா’ என்றொரு சித்தரிக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டார். அதன் கீழ் நாசாவின் நிஜ வீடியோவை பலரும் சுட்டிக்காட்டிய பின்னரும் கிரண்பேடி அசரவில்லை. இப்படி வாட்ஸ் - அப் வதந்திகள் பலவற்றையும் சரிபார்க்காது ட்விட்டரில் பகிர்வதன் வரிசையில், தற்போது சுறா சாகச வீடியோ மூலமாக மற்றுமொருமுறை லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார் கிரண்பேடி.

யூடியூப்: கமலின் தத்துவ குத்து!

’தமிழக சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி, சொந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெளியேறியது, எதிர்பார்ப்புக்குரிய ‘இந்தியன் 2’ உருவாக்கத்தில் தேக்கம்...’ இப்படி ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் அண்மையில் சந்தித்த சவால்கள் அதிகம். அதற்கெல்லாம் கிஞ்சித்தும் வருந்தாத உலக நாயகன், தனது விருப்பத்துக்குரிய வெள்ளித்திரை பக்கம் பிஸியானார். அதன் பலனாய் ‘விக்ரம்’ திரைப்படம் வாயிலாக, 4 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.

விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்டோர் உடன் நடிக்க, ஜூன் 3 அன்று 5 மொழிகளில் வெளியாகவிருக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தின் ’பத்தல பத்தல’ என்ற லிரிக் வீடியோ இந்த வாரம் வெளியாகி, இளம் ரசிகர்களை ஆச்சரியத்தில் தள்ளியிருக்கிறது. 67 வயதை வெறும் எண்களில் கடந்திருக்கும் கமல்ஹாசன், ’பத்தல...’ பாட்டில் போட்ட குத்தாட்டத்தில் பழைய கமர்ஷியல் கமலாக காட்சியளித்திருக்கிறார். ’இவருக்கு என் அப்பா வயதிருக்கும்; தாத்தா வயதிருக்கும்...’ என்றெல்லாம் பதிவிட்டு இளம் ரசிகர்கள் வாய் பிளந்தனர்.

’பத்தல...’ பாடலில் கமல்ஹாசன்...
’பத்தல...’ பாடலில் கமல்ஹாசன்...

மெட்ராஸ் பாஷை தெறிக்கும் பாடலை எழுதி பாடியிருப்பதுடன், சாண்டி அமைத்த குத்து நடனத்தையும் சளைக்காது ஆடியிருக்கிறார் கமல்ஹாசன். இதற்கான இளமை தெறிக்கும் நடன அசைவுகளை, தற்போதைய இளம் நடிகர்களுடன் ஒப்பிட்டு ரசிகமணிகள் சிலாகித்து வருகின்றனர். அதற்கேற்ப யூடியூப்பில் வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் 12 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது ’பத்தல...’ பாடல்.

மேலும், ’ஒன்றியத்தின் தப்பாலே ஒண்ணுமில்லே இப்பாலே; சாவி இப்ப திருடன் கையில் தில்லாலங்கடி தில்லாலே...’ என்றெல்லாம் பாடல் நெடுக பொடிவைத்த ஆண்டவரின் வரிகளுக்கு அரசியல் நெடியுடனான விமர்சன தும்மல்களும் அதிகரித்துள்ளன.

தத்துவ முத்துகள்

1. எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ, அத்தனை கோடி நியாயங்கள் இங்கே முன்வைக்கப்படும். ஆனால், அறம் ஒன்றுதான்! b_kaviyarasu

2. குறிப்பிட்ட ஒரு உறவுக்காக இதர உறவுகளை அலட்சியப்படுத்துவது, ஒருநாள் ஒட்டுமொத்த உறவுகளையும் இழக்க காரணமாகிவிடும் @N4LLANANBAN

3. உண்மையில் உலகின் ஆகச்சிறந்த போதை என்பது உழைத்துச் சம்பாதிக்கும் பணம்தான் @drloguortho1

4. வெற்றி - தோல்விக்கு அப்பால், தத்தம் நியாயங்களை எடுத்துரைப்பதே போரின் பிரதான நோக்கமாகும் @madurai_jinna

5. வீடு வரை உறவு; வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசி வரை கல்வி! @arulrajmv1

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in