இணைய உலகம்

நீதிமன்ற நேரலையில் ஹாலிவுட் காட்சிகள்!
நீதிமன்ற விசாரணையில் ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹேர்ட்
நீதிமன்ற விசாரணையில் ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹேர்ட்

யூடியூப் வீடியோக்களில் நேரலைகள் தனி ரகம்! செய்தி சேனல்கள், ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளிட்ட ஒரு சிலது தவிர்த்து நேரலை வீடியோக்களுக்கு வரவேற்பு கிடையாது. ஆனால், அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் ஹாலிவுட் நட்சத்திர முன்னாள் ஜோடிக்கு இடையிலான வழக்கு விசாரணை இதனை மாற்றியுள்ளது.

அமெரிக்காவில் கணிசமான நீதிமன்ற வழக்குகளை நேரலையில் ஒளிபரப்பவும் செய்கிறார்கள். ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹேர்ட் ஆகியோர் தம்பதியராக இருந்து மன வேறுபாட்டால் பிரிந்தவர்கள். இவர்களுக்கு இடையிலான மானநஷ்ட வழக்கொன்று நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையில் இவர்கள் இருவரும் ஆஜராகும் லைவ் காட்சிகள், யூடியூபின் நேரலை வீடியோக்களில் சர்வதேச அளவில் வைரலாகி வருகின்றன.

ஜானி டெப் - ஆம்பர் ஹேர்ட்
ஜானி டெப் - ஆம்பர் ஹேர்ட்

அதிலும் நடிப்புத் திறனில் சோடை போகாத இந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் இருவரும், நடிப்பா அல்லது இயல்பா என ஊகிக்க முடியாதபடி தங்களது எதிர்வினைகளால் நீதிமன்றத்தை திக்குமுக்காடச் செய்கின்றனர். அடுத்து என்ன கேள்வி கேட்பது, விசாரணையை எப்படி நகர்த்துவது என்று புரியாது வழக்கறிஞர்களும், நீதிபதியும் மென்று விழுங்குகின்றனர்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முழுக்கவும் நேரடியாக ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டதுபோல, நேரலையாகும் டெப் - ஹெர்ட் வழக்கு விசாரணைக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். நேரலையின் முழு வீடியோவையும் காண நேரமில்லாதவர்களுக்காக, விளையாட்டு போட்டிகளின் ஹைலைட்ஸ் போல சிறப்பு தொகுப்பான வீடியோக்களும் யூடியூபில் வெளியாகி ஹிட் அடித்து வருகின்றன.

முன்னதாக அமெரிக்க நீதிமன்றங்களின் சுவாரசியமான நேரலை விசாரணைக் காட்சிகள் பலவும் ஹாலிவுட் திரைப்படங்களில் காட்சிகளாகவும், கதைக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் இடையிலான வழக்கு விசாரணையும், அதன் மையமான குடும்ப வன்முறை குறித்தான விழிப்புணர்வும் முழுநீள திரைப்படமாவதற்கான விவாதங்களையும் உருவாக்கியுள்ளன.

அவலான ‘அடக்கடவுளே..’!

பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோரை முன்னிறுத்திய இந்த வாரத்தின் ட்விட்டர் விவாதங்கள் ’ஓ மை காட்...’ என தலையில் அடித்துக்கொள்ளும்படி வலம் வந்தன. இவர்களை முன்னிறுத்திய ஹேஷ்டாக் கூட ’ஓ மை காட்’ என்ற தலைப்பிலேயே ட்ரெண்டிங் செய்யப்பட்டன.

தனது 3 நாள் ஐரோப்பிய பயணத்தின் அங்கமாய் பிரதமர் மோடி டென்மார்க்கில் மையம் கொண்டிருந்தார். அங்கத்திய நிகழ்வொன்றில், தீடீரென குறுக்கிட்ட செய்தியாளர்களை கண்டதும் ’ஓ மை காட்’ என்று அவர் அதிர்ச்சி காட்டியதாக, வீடியோ துணுக்கு ஒன்றினை மோடி எதிர்ப்பாளர்கள் பரப்பினர். மோடியின் உலகம் சுற்றும் ஆர்வம், அவரது உடையலங்காரம் ஆகியவற்றை மட்டுமே மென்று வந்தவர்களுக்கு இந்த ’ஓ மை காட்’ அவல் தந்தது.

டென்மார்க்கில் மோடியின் ஓ மை காட்...
டென்மார்க்கில் மோடியின் ஓ மை காட்...

ஒரு சில பிரத்யேகப் பேட்டிகளுக்கு அப்பால், தேசத்தின் பிரதமராக பத்திரிகையாளர்களை நேரடியாக சந்திக்கத் தயங்கும் மோடியின் ஊடக ஒவ்வாமை குறித்தும், பொதுவெளி உரைகள் எதுவானாலும் டெலிபிராம்ப்டர் உதவியை சார்ந்திருக்கும் மோடியின் திறமை குறித்துமான பழைய சர்ச்சைகள் மீண்டும் தோண்டப்பட்டன. ஒரு பிரதமராக மன்மோகன் சிங் பேட்டியாளர்களை எதிர்கொண்ட விதம், வெளிநாட்டு பயணங்களில் சர்வதேச ஊடகங்களை துணிவுடன் அவர் எதிர்கொண்ட விதம் ஆகியவற்றை ஒப்பிட்டும் இந்த விமர்சனங்கள் மோடியை பகடி செய்தன.

ஆனால், மோடியின் ’ஓ மை காட்’ எதிர்வினையின் பின்னணியில், ’நிகழ்வு அரங்குக்கு எங்களை அனுமதிக்கவில்லை’ என்ற பத்திரிகையாளரின் முறையீடு இருந்தது குறித்த விளக்கம் வெளியான பின்னரும் டென்மார்க் சர்ச்சை தீரவில்லை. அதே வேளையில் மோடி எதிர்ப்பாளர்கள் கைக்கொண்டிருந்த ’ஓ மை காட்’ என்ற ஹேஷ்டேக் கீழாக, மோடி ஆதரவாளர்களும் அணி திரள ஆரம்பித்தனர். தங்கள் பங்குக்கு ராகுல் காந்தியின் வீடியோ துணுக்கு ஒன்றினை பகிர்ந்து ’ஓ மை காட்’ என்றார்கள்.

மோடி ஆதரவாளர்கள் பரப்பும் ராகுல் படங்கள்...
மோடி ஆதரவாளர்கள் பரப்பும் ராகுல் படங்கள்...

வெளிநாட்டு சந்திப்பு ஒன்றில் ’உற்சாகமான’ நண்பர்கள் புடைசூழ ராகுல் காட்சியளிக்கும் அந்த வீடியோ துணுக்கும் வைரலானது. அந்த நிகழ்ச்சி நேபாளத்தில் நடந்தது என்றும், ராகுலின் நண்பர் வீட்டுத் திருமண நிகழ்வென்றும், மேற்படி நேபாள நண்பர் சார்பில் விளக்கங்கள் வெளியான பின்னரும் #ஓமைகாட் வைரல் வாரல்கள் சுருதி குறையவில்லை.

முத்தத்தில் முடித்த பார்த்திபன்!

கோலிவுட்டில் ’மைக்’ மோகனுக்குப் பின்னர், அந்த வஸ்து உடன் அதிகம் ஊடாடியவர்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறார் இயக்குநர் - நடிகரான ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

’இரவின் நிழல்’ என்ற தலைப்பில் உலகின் முதல், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான்-லீனியர் திரைப்படத்தை எடுத்துள்ளார் பார்த்திபன். இதன் அறிமுக விழா ஒன்றுக்காக படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடனான அளவளாவல் அமர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உரையாடல் தொடக்கத்திலேயே பார்த்திபனின் மைக் மக்கர் செய்ய, கடுப்பில் அதனை தூக்கிப் போட்டார். பொதுவெளியில் உணர்வுகளை வெளிப்படுத்தாது அடக்கி வாசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், பார்த்திபனின் இந்த ’மைக் வீச்சு’ வேகத்துக்கு சங்கடமான ரியாக்‌ஷன் கொடுத்தார்.

ரோபோ சங்கருக்கு பார்த்திபன் முத்தம்
ரோபோ சங்கருக்கு பார்த்திபன் முத்தம்

வேறு மைக் உடன் அதன் பிறகான உரையாடலை ஒருவாறாக முடித்த பார்த்திபனை, இந்த மைக் வீச்சு விவகாரம் கரும்புள்ளியாக துரத்தியது. ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சங்கடமூட்டும் பதிவுகள் தொடர்ந்தன. ’பக்குவமற்றவர் பார்த்திபன்’ என்பதில் தொடங்கி ’படத்தின் புரமோஷனுக்காக நிகழ்த்தப்பட்ட நாடகம், ரஹ்மானை பார்த்திபன் அவமானப்படுத்திவிட்டார்...’ என்றெல்லாம் வகைதொகையான பழிச்சொற்கள் பார்த்திபனை பதம் பார்த்தன.

சங்கடமுற்ற பார்த்திபன், தன்னிலை விளக்கத்தை வீடியோவாக்கி வெளியிட்டார். மேலும், தான் தூக்கிப்போட்ட மைக்கை ’கேட்ச்’ பிடிக்காது தவறவிட்ட நடிகர் ரோபோ சங்கருக்கு முத்தமிட்ட புகைப்படத்தையும் வெளியிட்டு மைக் விவகாரத்தை மியூட் செய்ய முயன்றிருக்கிறார்.

தத்துவ முத்துகள்

1. சாதாரணமாய் இருப்பதுதான் இங்கே மிகக் கடினமாக இருக்கிறது @mazhaikuruvi

2. மென்மேலும் மகிழ்ச்சி என்று தேடுவதிலேயே, இருக்கும் மகிழ்ச்சியையும் இழக்க நேரிடுகிறது @srisivasankari

3. இழந்து விடக்கூடாது என்ற பேராசையே பலவீனங்களுக்கு வேராகிறது @sankariofficial

4. நிஜங்கள் சுடும்போது, கனவுகளே நீர் வார்க்க வரும் @asdbharathi

5. இஷ்டப்பட்ட வாழ்க்கையை தேடிக் கொண்ட பின்னர், அதில் இடறும் கஷ்டங்களை வெளியே சொல்லக் கூடாது @i_akaran

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in