இணைய உலகம்

இன்ஸ்டாகிராம்: வென்றது ஸ்ரீநிதியின் மன வலிமை
ஸ்ரீநிதி
ஸ்ரீநிதி

'வலிமை' திரைப்பட சர்ச்சையால் எழுந்த மன அழுத்த சிக்கல்களிலிருந்து ஒருவழியாய் மீண்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் சின்னத்திரை நட்சத்திரமான ஸ்ரீநிதி.

விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி தற்போதைய பல மெகாத்தொடர்கள் வரை தொடர்பவர் ஸ்ரீநிதி. சின்னத்திரை தொடர்கள் தந்த பிரபல்யத்தைவிட, சமூக ஊடகங்களில் தனது வெளிப்படையான கருத்துக்களாலும் ரசிகர்களை கவர்ந்திருப்பவர்.

'வலிமை' திரைப்படம் வெளியானபோது அதில் நடித்திருந்த தனது தோழி சைத்ரா ரெட்டிக்காக, முதல் நாள் முதல் காட்சிக்கு சென்றிருந்தார் ஸ்ரீநிதி. படம் முடிந்து வெளியேறும்போது வழிமறித்த, யூடியூப் பேட்டி ஒன்றில் ஸ்ரீநிதி தெரிவித்த கருத்து அவருக்கே வினையானது.

’படத்தில் பைக்தான் ஓடுகிறது... படம் ஓடுமா என்று தெரியவில்லை...’ என்பது போன்ற ஸ்ரீநிதியின் எதிர்மறை கருத்துகளை மட்டும் வெட்டி ஒட்டிய விஜய் ரசிகர்கள், சமூக ஊடகங்களில் வைரலாக்கினர். புளூசட்டை மாறன் போன்ற எதற்கும் சளைக்காத விமர்சகர்களையே பொதுஇடங்களில் ஓடவிட்ட அஜித் ரசிகர்கள், சின்னத்திரையில் தலைக்காட்டி வரும் ஸ்ரீநிதியை வன்மத்தோடு குறி வைத்தனர். சமூக ஊடகங்களில் வெறுப்பாளர்கள் மற்றும் வசவாளர்களின் வகையான தொடர் தாக்குதல்களால் ஸ்ரீநிதி திக்குமுக்காடினார்.

தொடக்கத்தில் இவற்றை எதிர்கொள்ள தெரியாது ஸ்ரீநிதி அமைதி காத்தார். ஒருவாறாக சமாளித்து நேரலையில் விளக்கமளித்தார். ஆனால், மன்னிப்பு கேட்க மறுத்தார். மோசமான சூழலால் நட்புகளையும், புதிய வாய்ப்புகளையும் இழந்து நெருக்கடிக்கு ஆளானார். அனைத்துமாக சேர்ந்துகொண்டதில் மன அழுத்தத்தில் விழுந்தார். சற்றே இடைவெளிவிட்டு அதிலிருந்து முழுமையாய் விடுபட்டவராக விளக்கமளித்த பின்னரே, ஸ்ரீநிதியின் உளவியல் சார்ந்த பாதிப்பும், அதற்கு எதிரான அவரது போராட்டமும் வெளித்தெரிந்தது.

'வலிமை' சர்ச்சையை விட, மன அழுத்தம் குறித்த ஸ்ரீநிதியின் விழிப்புணர்வு பலரையும் கவர்ந்திழுக்க அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சில தினங்கள் முன்பு, தனது வாழ்க்கையில் முதல்முறையாக வங்கி இருப்பு ரூ.186-க்கு சரிந்ததை சுட்டிக்காட்டி, அவர் பகிர்ந்த பாஸிட்டிவ் பதிவும் பரவலாக ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.

ட்விட்டர்: ’அடுத்து எதை வாங்கட்டும்?’ தொடரும் எலான் மஸ்க் அலப்பறைகள்!

ட்விட்டரை வளைத்த கையோடு பிரபல கோலா நிறுவனத்தை முன்னிறுத்தி ’அடுத்து எதை வாங்கட்டும்?’ என்று எலான் மஸ்க் எழுப்பிய கேள்வி இந்த வாரத்தின் வைரல் வாசகங்களில் ஒன்றானது.

கோலா அறிமுகமான புதிதில், போதைப்பொருளாக பின்னாளில் தடைசெய்யப்பட்ட கொகைய்ன் கலந்தே விற்பனையானது. அதனை நினைவுகூர்ந்த எலான் மஸ்க், “கொகைய்னை மீண்டும் சேர்ப்பதற்காக கோலா நிறுவனத்தை வாங்கப்போகிறேன்” என்று வேடிக்கையாக அறிவித்தார். உடனே, பள்ளிக்கூட பிள்ளைகளுக்கான கட்டுரை தலைப்பு போல, ’நான் எலான் மஸ்க் ஆனால்...’ என்று சகலரும் தங்களை எலானாக பாவித்து, தாங்கள் வாங்க விரும்பும் அம்சங்களை பட்டியலிட ஆரம்பித்தனர்.

எலான் மஸ்க் வேடிக்கையாக பதிவிட்டாலும் பின்னாளில் அதனை நிஜமாக்கிக் காட்டுவதிலும் வல்லவர். சில வருடங்கள் முன்பு இப்படித்தான் “ட்விட்டரை வாங்கப் போகிறேன்...” என்று எலான் அறிவித்தபோது எல்லோரும் நகைத்தனர். தற்போதும் எலான் சொல்வதில் எது வேடிக்கை, எது நிஜம் என்பதை ஊகிக்க முடியாது, ட்விட்டர் வாசிகள் கிறுகிறுத்துப் போயுள்ளனர்.

இந்த வேடிக்கைகளின் இன்னொரு பக்கமாக, பராக் அகர்வால் உள்ளிட்ட ட்விட்டர் நிர்வாகிகள் அரண்டு போயிருப்பதாகவும் ட்விட்டர்வாசிகளே கும்மி கொட்டுகிறார்கள். ட்விட்டரை வாங்கும் முயற்சிகளின்போதே, “பயனற்ற நிர்வாக்குழு உறுப்பினர்களின் ஊதியத்தை குறைப்பேன்” என எலான் மஸ்க் எச்சரித்திருந்தார். இது உட்பட எலான் எடுக்கவிருக்கும் அதிரடிகளுக்கு ட்விட்டர் நிர்வாகம் தயாராகி வருகிறது.

எலான் மஸ்க் தயவிலான ட்விட்டர் மாற்றங்கள் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, தனது டெஸ்லா கார்களின் இந்திய விற்பனை தொடர்பாக மத்திய அரசுடனான கசப்பினை எலான் மஸ்க் பொதுவெளியில் வெளிப்படுத்தி இருந்தார். இதனால் ட்விட்டர் இந்தியா - இந்திய அரசு இடையிலான இறுக்கம் வளரும் என்றும், இந்தியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்படவும் வாய்ப்பாகலாம் என்றும் ட்விட்டர் விவாதங்களில் புதிய ஆருடங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.

ஃபேஸ்புக்: இந்தி எதிர்ப்பில் கைகோக்கும் கர்நாடகம்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயவில் இந்தி எதிர்ப்பு முழக்கம் தென்னிந்தியாவில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

பான் இந்தியா திரைப்படங்களை முன்வைத்து விழா ஒன்றில் பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், “இந்தி, இந்தியாவின் தேசிய மொழி அல்ல” என்றார். இதற்கு அதிரடியாக இந்தியில் பதிலளித்த அஜய் தேவ்கன், “பிறகு ஏன் கன்னட படங்களை இந்தியில் டப் செய்கிறீர்கள்...” என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியதோடு, “இந்தியாவின் தேசிய மொழி இந்திதான்” என்று அடித்துப் பேசினார்.

அஜய் தேவ்கன் - கிச்சா சுதீப்
அஜய் தேவ்கன் - கிச்சா சுதீப்Lenin SS

அஜய் தேவ்கனின் அறியாமையை தன்மையாக சுட்டிக்காட்டிய கிச்சா சுதீப், “எனது பதிலை கன்னடத்தில் அளித்தால் உங்களால் புரிந்துகொள்ள முடியுமா? நாங்களும் இந்தியாவில்தான் வாழ்கிறோம்...” என்று தேசத்தின் பன்முக சிறப்பையும் சுட்டிக்காட்டினார். அதற்குள் பலரும் இடித்துரைக்க, அஜய் தேவ்கன் தன்னுடைய நிலையிலிருந்து பின்வாங்கினார்.

இந்தி எதிர்ப்பில் இந்த முறை ஆச்சரியமாய், ஒட்டுமொத்த கன்னட அரசியல்வாதிகளும் இணைந்து கொண்டார்கள். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜகவும் இந்தி எதிர்ப்புக் குரலில் முன்நிற்கிறது.

ட்விட்டரில் தொடங்கிய இந்த மோதல் வழக்கம்போல, நீண்ட பதிவுகளின் ஊடாக சூடான விவாதங்களுக்கு வழிவகுக்கும் ஃபேஸ்புக்கில் நிலைகொண்டது. கர்நாடக பாஜகவினரை உதாரணமாக்கி தங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு பதிலளிக்க வழியின்றி, தமிழக பாஜகவினர் மற்றும் ஆதரவு பதிவர்கள் ஃபேஸ்புக் விவாதங்களில் பங்கமாகி வருகின்றனர்.

தத்துவ முத்துக்கள்

1. ஒருவர் வாழ்வில் உணர்ந்த இயலாமை, வலி, அனுபவம் ஆகியவையே அடுத்தவருக்கான அறிவுரைகளாக மாறுகின்றன @2sumi_Twetz

2. வெறுப்பதைவிட ஒதுங்கிச் செல்வது நல்லது; ஒதுங்குவதை விடவும் மறந்து விடுவது சாலச் சிறந்தது @Pkpremnath

3. புரிதலற்ற உறவுகளிடத்தில் விளக்கம் முதல் விவாதம் வரை எதுவும் எடுபடாது @Lachu_Twitz

4. முதிர்ச்சி எனப்படுவது யாதெனில், எவ்வளவு முக்கினாலும் நம்மால் முடியாது என்பதை முந்திப் புரிந்துக்கொள்வதே! @Kozhiyaar

5. ’எக்ஸ்’ என்பதன் மதிப்பை, கணித பாடத்தில் மட்டுமல்ல திருமண வாழ்க்கையிலும் லேட்டாகவே புரிந்துகொள்கிறோம் @HariprabuGuru

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in