சமூக ஊடக வானவில் - 16: செல்லப்பிராணிகளுக்கான வலைப்பின்னல்!

சமூக ஊடக வானவில் - 16: செல்லப்பிராணிகளுக்கான வலைப்பின்னல்!

சமூக வலைப்பின்னல் பரப்பு எந்த அளவுக்குப் பரந்து விரிந்தது என்பதை உணர வேண்டுமானால் 'டாக்ஸ்டர்' பற்றியும், அதன் துணைச் சேவையான 'கேட்ஸ்டர்' பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த இரு தளங்களுமே செல்லப்பிராணிகளுக்கான பிரத்யேக சமூக வலைப்பின்னல் தளங்களாகத் தொடங்கப்பட்டவை.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற பொதுவான சமூக வலைப்பின்னல் தளங்கள் தவிர, எண்ணற்ற துறை சார்ந்த பிரத்யேக வலைப்பின்னல் தளங்கள் இருக்கின்றன என்பதை அறிந்தவர்கள்கூட, செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கும், பூனைகளுக்கும் என்று தனி வலைப்பின்னல் தளங்கள் இருப்பதைத் தெரிந்துகொண்டால் வியந்துபோவார்கள். ஆனால், இதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

சமூக வலைப்பின்னல் தளங்களின் அடிப்படை அம்சங்களில் ஒன்று, குறிப்பிட்ட ஆர்வம் அல்லது ஈடுபாடு அடிப்படையில் தனிநபர்கள் இணையவெளியில் தங்களுக்கான மெய்நிகர் சமூகத்தை உருவாக்கிக்கொள்வது என்பதால், செல்லப்பிராணிப் பிரியர்கள் இப்படி இணையத்தில் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக்கொள்வதன் அவசியத்தை உணர்ந்ததை இயல்பாகவே கருத வேண்டும்.

நிஜமான அக்கறை

இதை முதலில் புரிந்துகொண்ட மனிதராக டெட் ரெயின்கோல்டு (Ted Rheingold) திகழ்கிறார். இவர்தான், 2004-ல் செல்லப்பிராணிகளுக்கு முதல் வலைப்பின்னல் சேவையான டாக்ஸ்டர் (https://www.dogster.com/) தளத்தைத் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக, பூனைகளுக்கான பிரத்யேக சமூக வலைப்பின்னல் சேவையான கேட்ஸ்டர் தளத்தையும் ஆரம்பித்தார்.

சமூக வலைப்பின்னல் அலைக்கு நடுவே தொடங்கப்பட்ட தளம் என்றபோதிலும், டாக்ஸ்டர் தளத்தை ஆரம்பத்தில் பலரும் சந்தேகத்துடன்தான் பார்த்தனர். சில ஆண்டுகளுக்கு முன் டாட்காம் அலை உச்சத்தில் இருந்தபோது, செல்லப்பிராணிகளுக்கான உணவு உள்ளிட்ட சேவைகளை ஆன்லைனில் வழங்கும் நிறுவனமாக அறிமுகமான ‘பெட்ஸ்.காம்’ தளம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திப் பின்னர் மூடுவிழா கண்டிருந்ததுதான் இதற்குக் காரணம்.

பெட்ஸ்.காம் தளத்தின் தோல்விக்கான காரணங்கள் ஆய்வுக்குரியது என்றாலும், பலரும் நினைத்தது போல டாக்ஸ்டர் தளம் சமூக வலைப்பின்னல் அலையைச் சாதகமாக்கிக்கொள்ளும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதாக அல்லாமல், உண்மையிலேயே நாய்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவை தேவை எனும் புரிதலில் தொடங்கப்பட்டிருந்தது.

இதற்காக நிறுவனர் டெட் ரெயின்கோல்டை நிச்சயம் பாராட்ட வேண்டும். நாய்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவையைத் தொடங்கினால், அதன் வாயிலாக முதலீடுகளை அள்ளலாம் என்றெல்லாம் அவர் ஆசைப்படவில்லை. மாறாக, இணையத்தில் நாய்களுக்கு என்று ஒரு இணையப் பக்கத்தை அமைக்க வழியில்லாமல் இருப்பதைக் கண்டு, அந்தக் குறையைப் போக்குவதற்கான வழியாக இத்தகைய சமூக வலைப்பின்னல் சேவை தொடங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். (ரெயின்கோல்டு இப்போது உயிருடன் இல்லை. புற்றுநோய் பாதிப்பால் 2017-ல் காலமானார்).

வித்தியாசமான அணுகுமுறை

இணையத்தில் நாய்கள் படத்தைப் பகிர்ந்துகொள்ளலாம் என்றாலும், குறிப்பிட்ட நாயின் பெயரைத் தெரிந்துகொள்ள வழியில்லாமல் இருப்பதையும் பெருங்குறையாக உணர்ந்திருந்தார். இதன் அடிப்படையில் தான், நாய்களை வளர்ப்பவர்கள் இணையத்தில் சந்தித்துக்கொண்டு, நாய் வளர்ப்பு தொடர்பான விஷயங்களை அன்போடு பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் வகையில் டாக்ஸ்டர் தளத்தை உருவாக்கினார். டாக்ஸ்டர் தளத்தின் மூலத் தோற்றத்தை இப்போது பார்த்தாலும் வியப்பாக இருக்கும். ‘உங்கள் நாய்க்கான இணையப் பக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்!’ என அழைப்பு விடுத்த முகப்புப் பக்கத்தில், நாய்களின் பெயரைப் பதிவுசெய்து அவற்றுக்கான தனிப்பக்கத்தை உருவாக்கிக்கொள்ளும் வசதி இருந்தது. அதோடு, முகப்புப் பக்கத்தில் தினமும் ஒரு நாய் அறிமுகம் செய்யப்படுவதையும் பார்க்கலாம். நாயின் பெயருடன் அதன் தனித்தன்மையான அம்சங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.

இவைதவிர, நாய்களுக்கான விவாதக் குழுக்கள், தனிக் குழுக்கள், வீடியோ உள்ளிட்ட பகுதிகளும் இருந்தன. உள்ளூர் குழுக்களை அமைக்கும் வசதி இருந்ததோடு, நாய்களைத் தேடிப்பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டிருந்தது. நட்பான அம்சம் கொண்ட நாய் அல்லது புத்திசாலியான நாய் என்று தேடிப்பார்க்கலாம். நாய்கள் தொடர்பான பதிவுகளை எழுதும் வசதியும் இருந்தது. மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு, புதிதாக தினமும் சேரும் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் முகப்புப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுருக்கமாகச் சொன்னால், செல்லப்பிராணிகளை வளர்க்கும் யாரும் இந்தத் தளத்தைப் பார்த்தால் சொக்கிப்போகும் அளவுக்கு இதன் அம்சங்கள் இருந்தன. இதன் காரணமாகவே டாக்ஸ்டர், நாய்களுக்கான மைஸ்பேஸ் என்றோ அல்லது நாய்களுக்கான பிரன்ஸ்டர் என்றோ வர்ணிக்கப்பட்டன. (இதே ஆண்டு அறிமுகமான பேஸ்புக் அந்தச் சமயத்தில் சமூக வலைப்பின்னல் பரப்பில் பிரபலமாகத் தொடங்கியிருக்கவிலை).

முன்னோடித் தளம்

அமெரிக்காவில் இந்தத் தளம் லட்சக்கணக்கான பயனாளிகளைப் பெற்றதோடு, மற்ற நாடுகளுக்கும் விரிவானது. அடுத்து வந்த ஆண்டுகளில் சமூக வலைப்பின்னல் தளங்கள் மேலும் பிரபலமான நிலையில், டாக்ஸ்டர் தளம் செல்லப்பிராணிப் பிரியர்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்ந்தது. டாக்ஸ்டர் தாக்கம் காரணமாகச் செல்லப்பிராணிகளுக்கான வேறு பல சமூக வலைப்பின்னல் தளங்களும் உருவாயின. ஐரோப்பாவில் யுனைடெட்டாக்ஸ், யுனைடெட்கேட்ஸ் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் தொடங்கப்பட்டன. இவற்றில் பல வர்த்தக நோக்கில் ஆரம்பிக்கப்பட்டவை.

டாக்ஸ்டர் தளம் சில ஆண்டுகளுக்குப் பின், செல்லப்பிராணிகளுக்கான பத்திரிகைகளை நடத்தும் நிறுவனத்திடம் விற்கப்பட்டுவிட்டது. இன்று டாக்ஸ்டர், கேட்ஸ்டர் எனும் பெயரில் செல்லப்பிராணிகளுக்கான இணைய இதழ்களாக இவை செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. டாக்ஸ்டர் தளத்தின் பழைய வலைப்பின்னல் அம்சங்களைத் தற்போதைய இணையதள வடிவில் பார்க்க முடியாவிட்டாலும், செல்லப்பிராணிகளுக்கு என்று பிரத்யேகமான வேறு பல சமூக வலைப்பின்னல் சேவைகள் இல்லாமல் இல்லை. பெட்ஸ்பி (Petzbe), யம்மிபெட்ஸ் (Yummypets) , பார்க்ஹேப்பி (BarkHappy) உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவைகள் இந்தப் பிரிவில் செயல்பட்டு வருகின்றன.

சமூக வலைப்பின்னல் சேவை தளங்களின் பயன்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருவதைப்போலவே, டாக்ஸ்டர், கேட்ஸ்டர் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கான சேவைகள் குறித்தே தனியே ஆய்வும் நடத்தப்பட்டு கட்டுரை ஒன்று ஆய்வாளர்களுக்கான சமூக வலைப்பின்னல் தளமான ரிசர்ச்கேட்டில் (https://www.researchgate.net/) வெளியாகியுள்ளது. சமூக வலைப்பின்னல் தளங்களை நெட்வொர்க் தளங்கள் என பிரபலமாகக் குறிப்பிடுவது போலவே, இந்தத் தளங்கள் செல்லப்பிராணி வலைப்பின்னல்கள் என்பதைக் குறிக்கும் வகையில் ‘பெட்வொர்க்ஸ்’ (petworks) எனப் பிரபலமாகக் குறிப்பிடப்படுகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

(தொடரும்)

பெட்டிச்செய்தி

பூனைகிராம்

இணைய வரலாற்றில் எப்போதுமே பூனைகளுக்குத் தனியிடம் இருக்கிறது. இணையத்தில் அதிகம் நிறைந்திருக்கும் பூனைப் படங்களும் வீடியோக்களுமே இதற்குச் சான்று. இந்தப் பூனைப் பாசத்தின் தொடர்ச்சியாக அமைகிறது ‘டேக் ஏ கேட்’ (http://www.tagacat.net/ ) செயலி. பூனைப் படங்களுக்கான இன்ஸ்டாகிராம் எனச் சொல்லக்கூடிய இந்தச் செயலியில், பூனைப் படங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். பார்த்து ரசிக்கலாம். பூனைப் படங்கள் தொடர்பான கருத்துகளையும் பகிரலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in