சமூக ஊடக வானவில் 15: விமியோ எனும் வீடியோ முன்னோடி!

சமூக ஊடக வானவில் 15: விமியோ எனும் வீடியோ முன்னோடி!

இணையத்தில் காணொலி என்றாலே யூடியூப்தான் நினைவுக்கு வரும். யூடியூபில் ஆயிரக்கணக்கான சேனல்களும், கோடிக்கணக்கான காணொலிகளும் இருக்கின்றன. எந்த வகையான காணொலியைப் பார்க்க விரும்பினாலும் யூடியூபில் பார்க்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் புதிய சேனல் தொடங்க விரும்பினால், உடனே யூடியூப் சேனலைத் தொடங்கி காணொலிகளையும் பதிவேற்றத் தொடங்கலாம்.

வரவேற்பால் கிடைத்த வரவு

யூடியூப் தான், காணொலி சார்ந்த பிரதான தளம் என்றே பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும், வேறு பல தளங்களும், அதாவது சமூக வலைப்பின்னல் சேவைகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றில் ஒன்றான விமியோ (https://vimeo.com/ ) பற்றி பார்க்கலாம். யூடியூப் தவிர அறிய வேண்டிய காணொலிப் பகிர்வு சேவைகளில் விமியோ முதன்மையானது என்பது மட்டும் அல்ல, இந்தப் பிரிவில் முன்னோடி சேவையாகவும் விமியோ விளங்குகிறது.

ஆம், யூடியூப் தளம் தொடங்கப்படுவதற்கு முன்பே விமியோ அறிமுகமானது. இணையத்தில் பகிர்வு அலை வீசிக்கொண்டிருந்த காலத்தில், 2004-ல் காணொலிகளை எளிதாகப் பகிர்ந்துகொள்வதற்கான வழியாக விமியோ இணையதளம் அறிமுகமானது. ஜேக் லாட்விக் மற்றும் ஜாக் க்ளின் எனும் 2 மென்பொருள் வல்லுநர்கள் இணைந்து விமியோ தளத்தை உருவாக்கினர்.

இணையத்தின் முன்னோடி இணையதளங்களில் ஒன்றான ‘காலேஜ் ஹியூமர்’ (http://collegehumor.com/) தளத்தை நடத்திவந்த கனெக்டெட் வென்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, துணைச் செயல்பாடாக விமியோ தளத்தை உருவாக்கினர். காலேஜ் ஹியூமர் தளத்தில் பகிரப்பட்ட ஒரு காணொலிக்கு ரசிகர்களிடம் இருந்து அதிக வரவேற்பு கிடைத்ததை அடுத்து, காணொலிகளை உருவாக்கி பகிரும் சேவைக்குத் தேவை இருக்கும் என உணர்ந்து விமியோவை உருவாக்கினர்.

தனிப்பாதை

இணையத்தில் காணொலிகளைப் பார்ப்பதே அரிதான விஷயமாகக் கருதப்பட்ட காலத்தில், வீடியோ பகிர்வை எளிதாக்கும் வகையில் விமியோ அமைந்தது. விமியோ அறிமுகமான சில மாதங்களுக்குப் பிறகு, 2005-ல் யூடியூப் சேவை அறிமுகமானது. தொடக்கத்தில் காணொலி சார்ந்த டேட்டிங் சேவையாக உருவாக்கப்பட்ட யூடியூப், பின்னர் காணொலி பகிர்வு சேவையாக அறிமுகமாகி, இந்தப் பிரிவில் வேகமாக வளர்ச்சி பெற்று பெரும் வெற்றி பெற்றது.

இதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட டெய்லிமோஷன் உள்ளிட்ட தளங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, காணொலிப் பகிர்வு சேவைகளில் யூடியூப் முன்னணி தளமாக உருவாகிவிட்டாலும், விமியோ தளம் தனிப்பாதை அமைத்துக்கொண்டு தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

எண்ணிக்கை மற்றும் வீச்சில் யூடியூப் தளத்துடன் ஒப்பிட முடியாவிட்டாலும் விமியோ தனக்கான தனித்தன்மையான அம்சங்களைப் பெற்றிருக்கிறது. முதல் விஷயம் யூடியூப் பிரபலமானது என்றால், விமியோ தொழில்முறையானது. யூடியூபில் விளம்பர நெடியும், வர்த்தக இடையூறுகளும் அதிகம் என்றால் விமியோவில் எல்லாம் வீடியோமயம் தான்!

இவை எல்லாவற்றையும்விட, தரத்திலும், நேர்த்தியிலும் யூடியூப் காணொலிகளுக்கும், விமியோவுக்கும் அதிக வேறுபாடு இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், விமியோவின் பார்வையாளர் பரப்பு வேறுபட்டதாக இருப்பதுதான். யூடியூபில் யார் வேண்டுமானாலும் காணொலியைப் பதிவேற்றலாம், எந்த வகையான காணொலியை வேண்டுமானாலும் பதிவேற்ற முடியும்.

ஆனால், விமியோ உருவாக்குனர்களை மையமாகக் கொண்டது. உருவாக்குனர்களுக்கும் கட்டுப்பாடுகள் உண்டு. எதிர்மறையான உள்ளடக்கம் கொண்ட வீடியோக்கள், வீடியோ கேம் சார்ந்த வீடியோக்கள் மற்றும் வர்த்தக நோக்கிலான வீடியோக்கள் போன்றவற்றுக்கு எல்லாம் அனுமதி இல்லை. இதன் காரணமாக தொடக்கத்திலிருந்தே விமியோவில் தரமான நேர்த்தியான காணொலிகளே பதிவேற்றப்படுகின்றன. எனவே விமியோ தரமான உள்ளடக்கத்துக்காக அறியப்படுகிறது.

அதேபோல, யூடியூப் முழுக்க முழுக்க விளம்பர வருவாய் சார்ந்து இயங்குகிறது என்றால், விமியோ கட்டணச் சேவையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. விமியோவில் அடிப்படை சேவை இலவசம் என்றாலும், மேம்பட்ட அம்சங்களைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். பல்வேறு வகையான கட்டண விகிதங்கள் உண்டு. கட்டண விகிதத்துக்கு ஏற்ற வசதிகள் உண்டு. எனவே, விமியோவில் விளம்பரத் தொல்லை அதிகம் கிடையாது. இலவச சேவையில்கூட காணொலிக்கு மத்தியில் விளம்பரங்கள் தோன்றாது.

உருவாக்குனர்களை மையமாகக் கொண்ட சேவை என்பதால், காணொலி உருவாக்கத்துக்குத் தேவையான பல்வேறு வசதிகளை விமியோ அளிக்கிறது. இந்தத் தளத்திலிருந்தே உருவாக்குனர்கள் தங்கள் காணொலிகளை உருவாக்கி எடிட் செய்து மெருகேற்றிக்கொள்ளலாம். அதே போல, விமியோவில் உருவாக்கும் காணொலிகளை எந்தத் தளத்தில் வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம்.

திரைத் துறையினரைக் கவர்ந்தது

விமியோ தளம் சராசரி பார்வையாளர்களைவிட, தொழில்முறை நபர்கள் மத்தியில் குறிப்பாகத் திரைப்படத் துறையினர் மற்றும் குறும்பட ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. குப்பை காணொலிகளால் மலினப்படாமல் இருப்பது ஒரு காரணம் என்றால், காணொலி ஆக்கங்களை முன்னிறுத்த மேம்பட்ட வழிகள் அளிக்கப்படுவதும் மற்றொரு முக்கியக் காரணம்.

விமியோவால் தேர்வு செய்யப்பட்டால் திரைப்பட உலகால் கவனிக்கப்படும் வாய்ப்பு அதிகம்!

விமியோவில் பகிரப்படும் காணொலியானது, பொதுப் பார்வைக்கு உரியது அல்லது தனிப்பார்வைக்கு உரியது என தீர்மானிக்கும் வசதி கொண்டது. இளம் படைப்பாளிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் காணொலிகளைப் பதிவேற்றி அவற்றை விரும்பியவர்களுடன் மட்டும் பகிர்ந்துகொள்ளலாம். இதன் மூலம் காணொலியின் காப்புரிமையையும் பாதுகாக்கலாம். இளம் படைப்பாளிகள் தங்கள் படைப்பூக்கம் திருடப்படும் அபாயம் இல்லாமல், காணொலிகளைப் பாதுகாப்பாகப் பகிர்ந்துகொள்ளலாம். இவற்றின் காரணமாகவே படைப்பாளிகளும், உருவாக்குனர்களும் விமியோவை விரும்பிப் பயன்படுத்திவருகின்றனர்.

மேலும், யூடியூப் போல விமியோ எண்ணிக்கை அடிப்படையில் அல்லது பிரபலமாகும் தன்மையில் காணொலிகளை முன்னிறுத்தாமல், உள்ளடக்கத்தின் தரம் சார்ந்தே அவற்றை முன்னிறுத்துகிறது. எனவே, விமியோ முகப்புப் பக்கத்தில் தரமான காணொலிகளைப் பார்க்கலாம். வர்த்தக கணக்கு சார்ந்த அல்கோரிதங்களில் தலையீடு எல்லாம் விமியோவில் கிடையாது.

எல்லாவற்றையும்விட முக்கியமாக, விமியோவில் அதன் ஊழியர்களால் தேர்வுசெய்து பரிந்துரைக்கப்படும் படங்களுக்கு என்று தனி மதிப்பு இருக்கிறது. திரைப்பட ஆர்வலர்கள் விமியோ தேர்வுகளை ஆர்வத்துடன் நோக்குகின்றனர் என்றால், படைப்பாளிகள் விமியோ தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விமியோவால் தேர்வு செய்யப்பட்டால், திரைப்பட உலகால் கவனிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதுதான் இதற்குக் காரணம்!

(தொடரும்)

பெட்டிச் செய்தி:

பிரத்யேக முகப்புப் பக்கங்கள்

சமூக வலைப்பின்னல் பரப்பில் பிரபலமாக இருக்கும் மற்றொரு காணொலிப் பகிர்வு சேவை, டெய்லிமோஷன் (Dailymotion). பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் பேஜ்பாம் மற்றும் ஆலிவர் பாய்ட்ரேவால் 2005-ல் டெய்லிமோஷன் தளம் நிறுவப்பட்டது. அதன் பிறகு 2006-ல் வரத்தக நோக்கில் நிறுவப்பட்ட டெய்லிமோஷன், உலகின் 183 மொழிகளில் காணொலிச் சேவையை வழங்கிவருகிறது. ஒவ்வொரு பகுதிக்கான தனி முகப்புப் பக்கத்துடன் செயல்படுகிறது. இந்தத் தளத்தில் இந்தியாவுக்கான முகப்புப் பக்கத்தில் இந்திய மொழி காணொலிகளைப் பார்க்கலாம். சர்வதேசத் தன்மையோடு செயல்படும் தளமாக இருக்கிறது டெய்லிமோஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in