மொழியால் விழிபிதுங்கிய சொமேட்டோ!

மொழியால் விழிபிதுங்கிய சொமேட்டோ!

சொமேட்டோ ஊழியர் ஒருவர் தமிழக வாடிக்கையாளரிடம், ‘இந்தி தேசிய மொழி, சிறிதளவேனும் தெரிந்திருக்க வேண்டும்’ என்று சொன்னதால், சமூக வலைதளங்களில் தீயாகப் பற்றிக்கொண்டது விவகாரம். தமிழர்களின் உணர்ச்சி கொந்தளிப்பைப் பார்த்து, உடனே அந்த ஊழியரை வேலையிலிருந்து நீக்கியது சொமேட்டோ. உடனே, ‘ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டுமே தவிர வேலையைவிட்டு நீக்கியது தவறு’ என்று கருத்துகள் பறந்தன. இதனால், மீண்டும் அந்த ஊழியரை வேலையில் அமர்த்தியது சொமேட்டோ. இதனால், ஒருபக்கம் சொமேட்டோவின் பங்குகள் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தது. சொமேட்டோ நிறுவனரோ, சகிப்புத்தன்மை குறைந்துவருவதாக ஆதங்கப்பட்டார். அதற்கும் எதிர்வினைகள் கடுமையாக இருந்தன. கடந்த வாரத்தில், எந்தப் பக்கம் திரும்பினாலும் சொமேட்டோ, சொமேட்டோ... சொமேட்டோதான். இதில் யாருக்கு என்ன லாபமோ தெரியாது. ஆனால், சொமேட்டோவுக்கு நாடு முழுக்க நல்ல விளம்பரம்!

சசிகலா பற்றி எங்களுக்கு ஏன் கவலை?- எடப்பாடி பழனிசாமி

ஆமா தலைவரே... ரெய்டு கவலையே நமக்கு பெரிய கவலையா இருக்கு..!

- லட்சுமணன்

நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம்கொடுத்து விட்டோம்! - சசிகலா

எதிரின்னு யாரச் சொல்றீங்க சின்னம்மா... திமுகவையா பாஜகவையா?

- தமிழ்

அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்! - மோடி

பொறுங்க ஜி... ஓவர் டைம் பார்க்காதீங்க. இப்ப தான கேஸ் விலைய ஏத்துனீங்க?

- இதயவன்

கட்சி விட்டு கட்சி தாவுவோர் இப்போதே சென்றுவிடுங்கள் - மருத்துவர் ராமதாஸ்

ஆமாம்... கூட்டணி விட்டு, கூட்டணி தாவுவோர் மட்டும் ஐயாவோடு இருங்கள்.

- ரஹீம் கஸ்ஸாலி

ஜெ சமாதியில் சசிகலா ஆதரவாளர்கள் 20 பேரிடம் பிக்பாக்கெட் அடிப்பு - செய்தி

பர்ஸ்ல இன்னமும் அம்மா போட்டோ இருக்கான்னு பாக்கத்தான் எடுத்தேன் ஜட்ஜய்யா - பிக்பாக்கெட்டர்

- பிரபு

Related Stories

No stories found.