ஆடை குறித்த கவனம் அத்தனை முக்கியமானதா?

ஆடை குறித்த கவனம் அத்தனை முக்கியமானதா?

உடை வடிவமைப்பாளர் ஒருவர் தொழில்முறையாக அடிக்கடி என்னைச் சந்திப்பவர். எப்போதும் என்னிடம் நான் தேர்ந்தெடுக்கும் உடை குறித்துப் பேசுவார். சில உடைகளின் புகைப்படங்களைக் கொண்டுவந்து ‘இது உங்களுக்கு நன்றாக இருக்கும். ஒரே ஒருமுறை எனக்காக முயற்சி செய்யுங்கள்’ என்பார். அந்த உடைகள் நன்றாகவே இருந்தன என்றாலும் என்னுடைய இயல்புக்கு ஒத்துவராதவை. ஒருவர் தேர்ந்தெடுக்கும் உடைக்கும் உளவிவியலுக்குமான தொடர்பை நாங்கள் பேசியிருக்கிறோம். ஆனால் ஆச்சரியமாக அவர், அப்படி ஒன்று இல்லை என்பார். உடை மாறுகிறபோது எல்லாமே மாறிவிடும் என்பார். நான் அதை ஒப்புக்கொள்வதில்லை என்றபோதும் அவர் அதை வலியுறுத்துவார்.

ஒருவகையில் அவர் அதில் பழக்கப்பட்டிருக்கிறார். விஐபிகள் அவரிடம் ஒவ்வொரு விழாக்களுக்கும், எது மாதிரியான உடை சரியாக இருக்கும் என்று கேட்பார்கள். இது சகஜம். ஆனால், இன்று மக்களுக்கும் அந்த எண்ணம் வந்துவிட்டது என்றும் தான் பலருக்கு ஃபேஷன் கன்சல்டன்ட் ஆக இருப்பது குறித்தும் சொன்னார். ‘ஒரு சிட்டிங்குக்கு இவ்வளவு கன்சல்டேஷன் பீஸ்’ என்றார். அது கொஞ்சம் அதிகமாகப்பட்டது. ‘குடுக்கறதுக்கு எல்லாரும் தயாரா இருக்காங்க’ என்றார்.

நாம் இதைப் புறந்தள்ள முடியாது. இன்னும் சில வருடங்களில், குடும்ப மருத்துவர் போல family wardrobe consultant என்பவரையும் நாம் நமது அங்கமாக்கிக்கொள்ளலாம்.

எனது வாதமெல்லாம், ஒரு உடைக்காக நான் என்னுடைய நேரத்தையும் பணத்தையும் ஏன் செலவு செய்ய வேண்டும்? இது என்னுடைய கவனத்தைத் திசைதிருப்புகிறது; நேரம் என்பது போதாமல் இருக்கிறபோது, இதற்காக நான் ஏன் மெனக்கிட வேண்டும் என்பதுதான். என்னுடைய இயல்புக்கு மீறிய உடையை அணிந்துகொண்டு, எதற்கு அது குறித்த சிந்தையிலேயே நேரத்தைப் போக்க வேண்டும் என்பதுதான். இதைத்தான் அவரிடம் எப்போதும் முன்வைப்பேன். அது தவிர்க்க முடியாத அவசியம் என்பார்.

உடை என்பது ஒவ்வொருவரின் இயல்பைச் சார்ந்தது. நமக்கு என்ன தேவை, எது வசதி, நம் ரசனை என்பதையெல்லாம் பொறுத்து மட்டுமே அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இந்த உலகம் அதைச் செய்ய விடுவதில்லை.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் குறித்த ஒரு ஆவணப் படத்தில், மார்க்கின் உடைத் தேர்வு குறித்து சொல்லப்படுகிறது. கல்லூரி காலத்தில் தொடங்கி ஃபேஸ்புக் நிறுவிய பிறகும் அவர் அத்தனை உயர்மட்ட சந்திப்புகளிலும் டீஷர்ட்டையே அணிந்திருக்கிறார். இப்போது சற்று மாறியிருக்கிறார். ஏன் ஒரே விதமான உடை எனும் கேள்விக்கு, “நமது மூளை ஒருங்கிணைந்து செயல்பட அதற்கு நாம் உதவ வேண்டும். காலையில் என் வார்ட்ரோப் முன் நின்று எந்த உடை அணியலாம். போன வாரம்தானே இதை அணிந்தோம் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தால், அது என் மூளையின் செயல்பாட்டைத் திசைதிருப்பும்” என்று அவர் பதிலளித்திருந்தார்.

மார்க் மட்டுமல்ல, பெப்சிகோவின் முன்னாள் சிஇஓ இந்திரா நூயியும் இதே ரீதியிலான பதில் தந்திருக்கிறார். “ஒரு நாளின் 24 மணிநேரங்கள் போதாமல் நான் ஓடிக்கொண்டிருந்தேன். அதனாலேயே சி.இ.ஓ பதவி தேடிவந்தது. இந்தியாவிலிருந்து வந்த ஒரு பெண்ணுக்கு இந்த உயரிய இடம் என்பதை நான் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தபோது, சில பத்திரிகைகள் என்னுடைய உடைத் தேர்வுகள் குறித்து கிண்டலடித்துக்கொண்டிருந்தன” என்றார்.

ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. பாலிவுட் நடிகை ஒருவர் ஒரு விருது விழாவுக்கு வருகையில், தனது உடையில் எங்கோ ஒரு ஓரத்தில் பின் குத்தியிருந்தார். சமூக வலைதளங்களில் அதை அன்புக்குறியிட்டு சுட்டிக்காட்டி, மீண்டும் மீண்டும் அதைப் பற்றி பலர் பேசினர்.

உடை என்பது ஒவ்வொருவரின் இயல்பைச் சார்ந்தது. நமக்கு என்ன தேவை, எது வசதி, நம் ரசனை என்பதையெல்லாம் பொறுத்து மட்டுமே அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், இந்த உலகம் அதைச் செய்ய விடுவதில்லை. கண்ணுக்குத் தெரியாத வகையில் எங்கெல்லாம் நமக்கான வலையை விரித்திருக்கிறார்கள் என்று பார்த்தோமானால், ஆச்சரியம் ஏற்படும். நான் பழகுகிற நடிகர், நடிகைகளிடமும் இதுபற்றிப் பேசும்போது, அவர்கள் தாங்கள் எப்போதுமே ‘தேவதைக’ளாக இருக்க வேண்டியிருக்கும் அழுத்தத்தைச் சொல்லியிருக்கிறார்கள். இந்த அழுத்தம் நம் மீதும் வேகமாகத் திசைதிரும்புகிறது.

வலைகளை நாம் கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது!

கட்டுரையாளர்: எழுத்தாளர், ஊடகவியலாளர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in