
மத்திய பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்யும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு மாணவர்களால் ரகசியமாக படமாக்கப்பட்ட இந்த வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஜூனியர் மாணவர்கள் தலைகுனிந்து வரிசையில் நிற்பதையும், மூத்த மாணவர்கள் ஒவ்வொருவராக வரிசையாக அவர்களை அறைவதும் தெரிகிறது. இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இது குறித்து பேசிய ரத்லம் மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் ஜிதேந்திர குமார் குப்தா, “இந்த விஷயம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. ராகிங் நடவடிக்கைகள் பற்றி வியாழன் இரவு ஓரளவு தெரிந்து கொண்டோம். நேற்று காலை ராகிங் தடுப்புக் குழுவைக் கூட்டியதைத் தொடர்ந்து முழுத் தகவல் எங்களுக்கு கிடைத்தது.
சம்பந்தப்பட்ட 10 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2021 பேட்ச் மாணவர்களை 2020 பேட்ச் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். விரைவில் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார். இந்த ராகிங் தொடர்பாக போலீஸில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ராகிங் புகார்கள் நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கியது. இந்த கல்லூரியில் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை தலையணையுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியதாக காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.