’ஹாய் ஃபிரண்ட்ஸ் ஆக்சிடண்ட் ஆயிடுச்சு..’

பொறுப்பற்ற இளசுகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
’ஹாய் ஃபிரண்ட்ஸ் ஆக்சிடண்ட் ஆயிடுச்சு..’

இன்றைய இளம் தலைமுறையினரில் பெரும்பாலானோர் சமூக ஊடக அடிமைகளாக உழல்கிறார்கள். அனைவரும் தன்னை கவனிக்க வேண்டும், பொதுவெளியில் பிரபலமாக வேண்டும் என்பது இந்த வயதினரின் ஆர்வக்கோளாறாக நிலவுகிறது. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை விபரீதமாகவும் கூடும்.

செல்ஃபி எடுப்பது அதனை பொதுவெளியில் பகிர்வதும் அதற்கு லைக்ஸ் பெறுவதும் இளம் வயதினர் சிலரின் தவிப்பாக தென்படுகிறது. இதற்காக என்ன செய்தால், எதனை பகிர்ந்தால் சமூக ஊடகத்தில் பிரபலமாகலாம் என்று அலைபாய்கிறார்கள். இந்த தவிப்பும் அதற்கான அங்கலாய்ப்புமே அவர்களை விபரீதங்களில் இறங்கவும் செய்கிறது. அவற்றுக்கான அண்மை உதாரணமாக, சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ உலா வருகிறது.

ஒரு இளைஞனும் யுவதியும் பைக்கில் விரைகிறார்கள். இளைஞன் வண்டியை செலுத்த, பின்னே அமர்ந்திருக்கும் பெண் ஃசெல்போனும் கையுமாக தங்களை படம் பிடித்தபடி இருக்கிறார். கூடவே ’ஹாய் ஃபிரண்ட்ஸ் இங்கே பாருங்க..’ என்று பைக் பயணத்தை ஏதோ சாகசம் போல படம் பிடித்தவாறு குதூகலம் காட்டுகிறார். வண்டியோட்டும் இளைஞனின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் அந்தப் பெண்ணின் உரையாடலும், படம் பிடித்தலும் தொடர்கிறது.

இந்த கவனச் சிதறல் காரணமாக நிலைதடுமாறி பைக் விபத்துக்குள்ளாகிறது. லேசான காயங்களுடன் எழும் யுவதி விபத்து மற்றும் அடிபட்டது குறித்து எந்த பிரக்ஞையும் இன்றி, ’ஹாய் ஃபிரண்ட்ஸ் ஆக்சிடண்ட் ஆயிடுச்சு’ என்று விட்ட இடத்திலிருந்து உரையாடலை தொடர்கிறார். தனது காயத்தை அலட்சியப்படுத்தியவாறு, சாலையோர புதரில் சரிந்து கிடக்கும் பைக் மற்றும் அதை ஓட்டி வந்த இளைஞனை படம் பிடிக்கவும் செய்கிறார். அவரால் தம்பி என்றும் நண்பன் என்றும் விளிக்கப்படும் அந்த இளைஞனை ‘உனக்கு வண்டி ஓட்டவே தெரியலை’ என்று வம்பிழுக்கிறார். இவை அத்தனையும் வீடியோ பதிவாக தொடர்கின்றன.

நடந்த விபத்தில் அதிர்ஷடவசமாய் காயமின்றி தப்பியதோடு, அப்போதைக்கு அந்த வழியாக வாகனங்கள் ஏதும் குறுக்கிடாததில் இருவரும் உயிர் தப்பவும் செய்திருக்கிறார்கள். ஆனால் அவை எது குறித்தும் உறுத்தல் ஏதுமின்றி அவர்கள் சகலத்தையும் படம் பிடித்ததும், பொதுவெளியில் பகிர்ந்ததும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வகையில் அவர்கள் இருவரும் எதிர்பார்த்ததும் நடந்திருக்கிறது. தங்களது பொறுப்பற்ற செயலுக்காக நெட்டிசன்களால் கடுமையாக வறுத்தெடுக்கப்பட்டும் வருகிறார்கள். இன்னும் சிலர் ’பப்ளிசிட்டி மோகத்தில் அரங்கேற்றப்பட்ட நாடக விபத்தாகவும்’ இது இருக்கலாம் என்றும் ஐயம் எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in