பெண்களின் உடை பற்றிப் பேச நீங்கள் யார்?

பெண்களின் உடை பற்றிப் பேச நீங்கள் யார்?

பெண்களின் உடைகள், அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தளங்களில் வெளிவருவது குறித்தெல்லாம் மதப் பிரச்சாரகர்கள் பேசிய காணொலிகள் வெளிவருகின்றன. இப்படி இவர்கள் பேசுவதும், இவர்கள் மட்டுமே இப்படிப் பேசுவதும் புதிதல்ல. இது எப்போதுமே இருப்பதுதான்.

பள்ளி. கல்லூரியில் படிக்கையில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு என்பது தாண்டி அவை எப்படி எங்கள் மீது திணிக்கப்பட்டன என்பதை இன்று யோசிக்கும்போது எரிச்சலாக வருகிறது. அப்போதெல்லாம் ‘ஏன் இப்படி?’ என்கிற கேள்வியும், எதேனும் காரணம் இருக்கும் என்கிற சுய ஆறுதலும் கொண்டிருந்ததால் அது அப்படியே கடந்து போயிற்று. மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு வந்தால் சக மாணவர்கள் அதனால் ஈர்க்கப்படுவார்கள் என்றெல்லாம்கூட பேசியிருக்கிறார்கள். சுடிதார் டாப்சின் கை முழங்கைக்கு சற்று மேல் வரையில் நிச்சயம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். அதிலும் ஸ்லீவ்லெஸ் போன்றவை அறிமுகம் இல்லாத திருநெல்வேலி மாதிரியான நகரத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக, நாங்களே விருப்பப்பட்டால்கூட எங்கள் ஊர் டெய்லர்கள் ஸ்லீவ்லெஸ் வைத்துத் தைத்து தர மாட்டார்கள். “உங்க அம்மைக்குத் தெரியுமா? அவாள் ஒத்துக்கிட்டாலும் நாங்க தச்சு தரமாட்டோம்” என்றிருப்பார்கள்.

ஆண், பெண் படிக்கும் கல்விக் கூடங்களில் எங்களுக்குத் தனித்தனியே நீதி போதனை வகுப்புகள் நடக்கிறபோது ஆண்களுக்கு என்ன கற்றுத் தருவார்கள் என்பது தெரியாது. பெரும்பாலும் பெண்களின் ஒழுக்கம் எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் என்றே இறைவனின் பெயரால் எங்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது.

ஈரான் நாட்டில் பெண்கள் கால்பந்து விளையாட்டை மைதானத்தில் போய்ப் பார்க்கத் தடை இருந்தது. கால்பந்து மேல் அதீத விருப்பம் கொண்டிருக்கிற அந்நாட்டில், பெண்கள் தங்களையும் மைதானத்துக்குள் அனுமதிக்க வேண்டுமென்று அரசிடம் கேட்டார்கள்.

அதற்கு அரசுத் தரப்பு சொன்ன பதில்களில் ஒன்று, ‘விளையாடும்போது உற்சாகத்தில், கோபத்தில் விளையாட்டு வீரர்கள் கெட்ட வார்த்தை பேசுவார்கள். அதைப் பெண்கள் கேட்கக்கூடாது’ என்பது. மற்றொரு காரணம், ‘அரை ட்ரவுசர் போட்டுக்கொண்டு வீரர்கள் ஆடுவதால், அது பெண்கள் பார்க்கத்தக்கதல்ல’ என்பது. இந்த அறிக்கையும்கூட இறைவனின் திருப்பெயரால் என்றே தொடங்கியிருந்தது.

இறைவன் எங்கும் இருப்பதால் இப்படியான அரிய சிந்தனை நாடு, மொழி, இனம் கடந்து எல்லாத் தரப்பிலிருந்தும் வழங்கப்படுகிறது. பெண்கள் உடை மேல் பதற்றம் கொள்ளும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தங்களின் கவசமாக இறைவனை வைத்துக்கொள்கிறார்கள். யாருக்காகப் பேசுகிறார்கள் என்பது தெரியாமலேயே பேசிக்கொண்டிருக்கிறார்கள். கண்ணாடியைத் தங்கள் மனதின் பக்கம் திருப்பிப் பேசியபடி இருக்கிறார்கள்.

அந்தக் கண்ணாடி அவர்களின் கீழ்மைகளை அதே இறைவனின் பெயரால் காட்டிக்கொண்டே இருக்கிறது!

ஜா. தீபா, எழுத்தாளர், ஊடகவியலாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in