கழுதையை கல்யாணப் பரிசாக அளித்த கணவன்

கழுதையை கல்யாணப் பரிசாக அளித்த கணவன்

புது மனைவிக்கு திருமணப் பரிசாக கழுதைக் குட்டியை பரிசளித்த கணவனும், கழுதையுடனான புதுமண தம்பதியரும் இணையவெளியில் தற்போது ட்ரெண்டிங்காகி வருகின்றனர்.

பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்தவர் அஸ்லான் ஷா. விலங்கு ஆர்வலர். பிரபல யூட்யூபரும் கூட. இவருக்கும் சக யூட்யூபரும் பல் மருத்துவருமான வாரிஷாவுக்கும் இடையே இணையத்தில் காதல் மலர்ந்தது. ஒருமித்த மனதோடு திருமண வைபவத்துக்கு இந்த ஜோடி திட்டமிட்டது.

பாகிஸ்தானின் நட்சத்திர திருமணமாக இருவரின் மண விழாவும் கடந்த வாரம் அரங்கேறியது. மண விழாவைவிட, புது மனைவிக்காக கணவர் அஸ்லான் ஷா அளித்த கல்யாணப் பரிசு பெரும் பேசுபொருளானது. அப்படி அஸ்லான் ஷா அளித்த பரிசு ஒரு கழுதைக் குட்டி!

விலங்கு நேசரான அஸ்லான் ஷா, புது மனைவிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் தருவதாக முன்னரே அறிவித்திருந்தார். அது என்னவாக இருக்கும் என்பதில் மணப்பெண் வாரிஷா மட்டுமன்றி, இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகள் எகிறியிருந்தன. எவரும் கணிக்காத வகையில் புது மனைவிக்கு கழுதைக் குட்டியை பரிசளித்து ஜமாய்த்திருக்கிறார் அஸ்லான் ஷா.

கழுதைக் குட்டி வயதில் சிறியது என்பதால், தாயிடமிருந்து அதனை பிரிக்க விரும்பாத அஸ்லான் ஷா தாயும் சேயுமாக சேர்த்து வாங்கி வந்ததும், கழுதை குடும்பத்தோடு கூட்டுக் குடும்பமாக தங்கள் இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கப் போவதுமாக மணமக்கள் அறிவித்திருப்பதும் நெட்டிசன்களின் வாழ்த்துக்களை பெற்றிருக்கிறது.

அதேபோல தேனிலவு கொண்டாட்டத்துக்கான படங்கள் மற்றும் வீடியோக்களுடன், பரிசாக கிடைத்த கழுதைக் குட்டியுடன் மனைவி வாரிஷா விளையாடும் பதிவுகளையும் பகிர்ந்து வரவேற்புகளை அள்ளி வருகிறார் அஸ்லான் ஷா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in