இந்தியாவில் மீண்டும் பொதுமுடக்கம்?: நெட்டிசன்களை கலங்கடித்த டிரெண்டிங்

இந்தியாவில் மீண்டும் பொதுமுடக்கம்?: நெட்டிசன்களை கலங்கடித்த டிரெண்டிங்

இந்தியாவில் மீண்டும் பொதுமுடக்கம் என்ற சமூக ஊடக டிரெண்டிங்கால் நெட்டிசன்கள் பீதியில் ஆழ்ந்து மீண்டிருக்கின்றனர்.

கரோனா தாண்டவத்தின் 2 ஆண்டு இம்சைகளில் இருந்தும் அதன் பலதரப்பட்ட பக்கவிளைவுகளில் இருந்தும், இப்போதுதான் படிப்படியாக தேசம் மீண்டு வருகிறது. இதற்கிடையில் இந்தியாவில் மீண்டும் பொதுமுடக்கம் என்பதாக பரவிய ட்விட்டர் டிரெண்டிங் காரணமாக மக்கள் தவித்துப்போனார்கள். 2 தினங்களாக நீடித்த இந்த டிரெண்டிங்கில் தலையும் வாலும் இன்றி ‘இந்தியா லாக்டவுன்’ என்ற ஹேஷ்டாக் மட்டுமே அலைபாய்ந்தது.

அதையொட்டிய தகவல்கள் ஏதும் இல்லாததால் மக்கள் தம் பங்குக்கு பதட்டத்துக்குரிய செய்திகளை இணைத்து பரப்ப ஆரம்பித்தனர். வசிப்பிடம், வாழ்வாதாரம் மற்றும் அன்றைய செய்திகள் அடிப்படையில் அவை அமைந்திருந்தன. தலைநகர் டெல்லி வாழ் மக்களிடையே பனிப்புகை காரணமாக மாநகரம் மீண்டும் பொதுமுடக்கத்துக்கு ஆளாவதாய் வதந்தி பரப்பினர். சீனத்திலிருந்து வந்த செய்திகளின் அடிப்படையில் கரோனாவின் புதிய திரிபு பரவுவதாக சிலர் கிளப்பிவிட்டனர். தேசிய பாதுகாப்பு முகமையின் புதிய பாய்ச்சலை மேற்கோள் காட்டி இந்திய பெருநகரங்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் என்றும் சிலர் பயமுறுத்தினர்.

தங்கள் பதிவுகளின் மூலம் டிவிட்டரில் செல்வாக்காக இயங்குவோர் மற்றும் சில பாலிவுட் பிரபலங்கள் திட்டமிட்டு இந்த டிரெண்டிங்கை தொடங்கி வைத்தது பின்னர் தெரிய வந்தது. வழக்கமான மார்க்கெட்டிங் உத்தியாக ’இந்தியா லாக்டவுன்’ பரப்பப்படுவதாக சமூக ஊடக சூரர்கள் கண்டு சொன்னபோது முழு உண்மையும் வெளியில் வந்தது. ’இந்தியா லாக்டவுன்’ என்ற தலைப்பில் தயாராகி இருக்கும் புதிய இந்தி திரைப்படத்துக்கான எதிர்பார்ப்புகளை பொதுவெளியில் திணிப்பதற்காக உருவாக்கப்பட்ட டிரெண்டிங் இது என்பதும் புரிந்தது.

லாக்டவுன் பின்னணியில் உருவாகும் இந்த புதிய திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடாக ஜீ5 தளத்தில் டிசம்பர் 2 அன்று வெளியாக இருக்கிறது. மாதுர் பந்தர்கர் இயக்கிய இந்தியா லாக்டவுன் படத்தின் டீஸர் வெளியீட்டை முன்னிட்டு வித்தியாசமான ஏற்பாடாக இந்த டிரெண்டிங்கை வலிய உருவாக்கி இருக்கிறார்கள். தங்கள் பீதி பொய்த்த திருப்தியில் வழக்கம்போல நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டு இந்தியா லாக்டவுன் டிரெண்டிங்கை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in