‘மாமன் மகள் ஓடிப்போனதால் முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்..’

‘மாமன் மகள் ஓடிப்போனதால் முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்..’

’என்னுடைய மாமன் மகள் ஓடிப்போனதற்கு முதல்வர்தான் காரணம்; உடனடியாக அவர் ராஜினா செய்ய வேண்டும்’ இப்படியோரு கோரிக்கையும் அதனை விடுத்த குடிமகனும் சமூக ஊடகங்களின் இன்றைய வைரல் பதிவுகளில் சேர்ந்திருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் இன்று( நவ.5) மதியம் முதல் திமுக அனுதாபிகள் மத்தியில் வீடியோ ஒன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரை ஒருமையிலும், ஏக வசனத்திலும் இன்னும் பொதுவெளியில் பகிர முடியாத வகையிலெல்லாம் அந்த வீடியோவில் ஒரு நபர் பேசுகிறார். அவரது பேச்சு முழுக்க முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிவைத்து இருக்கிறது. முதல்வரை தரக்குறைவாக பேசும் அந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, திமுக ஐடி விங், தமிழக காவல்துறை மற்றும் திமுக பிரமுகர்களின் பார்வைக்கு அந்த வீடியோவை பலரும் டேக் செய்து வருகின்றனர்.

அப்படியென்னதான் அந்த நபர் பேசுகிறார் என்பதை அறிய வீடியோவை ஓரிரு முறை ஓட்டிப் பார்க்க வேண்டியதாகிறது. தங்களை உயர் சமூகத்தினர் என்று விளித்துக்கொள்ளும் அந்த நபர், ’சாதியடுக்கில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு நபருடம் தன்னுடைய மாமன் மகள் ஓடிப்போய்விட்டதாகவும், இதற்கு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலினே’ என்றும் அந்த வீடியோவில் அன்னார் முழங்குகிறார். அவர் உதிர்க்கும் ஏகவசனங்களை எடிட் செய்தால் இப்படித்தான் விளங்கிக்கொள்ள முடிகிறது. உடனடியாக முதல்வரை ராஜினாமா செய்யுமாறு எச்சரிப்பதோடு தனக்கு எதிராக காவல்துறை மற்றும் ராணுவத்தையும் கொண்டுவந்தாலும் கவலையில்லை என கர்ஜிக்கவும் செய்கிறார்.

இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள் பலரும் ’இன்றைய கன்டெண்ட் இதுதான்’ என்பதாக கமெண்டுகளை வாரியிறைத்து வருகின்றனர். திமுக அனுதாபிகள் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்க்க, கணிசமானோர் மென்போக்கில் விமர்சித்து வருகின்றனர். ’அவர் பேசவில்லை; அவருக்குள் சென்றிருக்கும் சரக்கு பேசுகிறது. எனவே அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்றும், ’அவர் பின்னணியில் பாஜக அடையாளங்கள் தென்படுவதாக’ இன்னொருவரும் கமெண்ட் செய்துள்ளார்கள். ’அந்த நபரை அநேகமாக போலீஸார் கைது செய்திருக்கும்; பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக விரைவில் செய்தி வரும்’ என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in