‘உதயநிதி ஸ்டாலினுக்கு உப்புமா கிண்டுங்கள்’: கிருத்திகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

‘உதயநிதி ஸ்டாலினுக்கு உப்புமா கிண்டுங்கள்’: கிருத்திகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

உதயநிதி வீட்டில் நிகழும் சுவாரசியம் ஒன்றை பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார் அவரது மனைவி கிருத்திகா. இதையொட்டி உதயநிதிக்கு ஆதரவாக கருத்து பகிரும் நெட்டிசன்கள் பலரும் இணைய வெளியில் கலகலப்பூட்டி வருகின்றனர்.

இல்லற மனஸ்தாபங்களில் கணவன் மீதான கடுப்பை காட்டும் விதமாய் மனைவி கையெடுக்கும் அஸ்திரங்களில் ஒன்று உப்புமா! இந்த உப்புமாவை முன்வைத்து ஏராளமான மீம்ஸ் மற்றும் மிரள் பதிவுகள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வலம் வரும். இன்று காலை முதல் உதயநிதி ஸ்டாலின் - கிருத்திகா தம்பதியை மையமாகக் கொண்ட, இதேபோன்ற கலாய்ப்புகள் சமூக ஊடகங்களில் சூடு பிடித்திருக்கின்றன. ஒரே வித்தியாசம்; உதயநிதி வீட்டில் உப்புமாவுக்கு பதில் தோசை! ஆனபோதும், உப்புமாவால் பாதிப்புகளுக்கு நிகராக தோசை புராணமும் சுவையூட்டி வருகிறது.

தனக்கும் கணவர் உதயநிதிக்கும் இடையே ட்விட்டர் தளத்தில் நிகழ்ந்த உரையாடல் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட்டை நள்ளிரவில் பகிர்ந்திருந்தார் கிருத்திகா. 2013ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் அது. இணையத்தின் சுவாரசியங்களை மூழ்கி முத்தெடுக்கும் எவரோ பரப்பிய அந்த பதிவினை தனது பக்கத்திலும் பகிர்ந்திருந்தார் கிருத்திகா. அதில் உதயநிதி எழுப்பிய பொதுவான கேள்வி ஒன்றுக்கு, அவரது அபிமானிகளில் ஒருவராக பங்கேற்று கணவரை செம்மையாக சதாய்த்திருக்கிறார் கிருத்திகா.

இணைய உலகின் பிரபலங்கள் ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஆன்லைனில் பிரசன்னமாகி அபிமானிகளுடன் நேரடி நெருக்கத்தை வளர்க்க முற்படுவார்கள். அப்படி உதயநிதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வாய்ப்பினை அறிவித்திருந்தார். ’அடுத்த 15 நிமிடங்களுக்கு உங்களின் நல்லபடியான கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறேன்’ என்பதே உதயநிதியின் அந்த பதிவு. இதன் கீழ் கட்சிக்காரர்கள், ரசிகர்கள் மட்டுமன்றி உதயநிதியின் நண்பர்களும் பங்கேற்று சுவாரசியமான கேள்விகளை முன்வைத்தனர். இந்த வரிசையில் எவரும் எதிர்பாரா வகையில் கிருத்திகாவும் சேர்ந்தார்.

‘இன்று இரவு உணவாக என்ன வேண்டும்?’ என்பதுதான் ஸ்மைலி ஒன்றுடன் கிருத்திகா முன்வைத்த கேள்வி. இதற்கு திணறலாய் பதிலளித்த உதயநிதி, ‘ரொம்ப கஷ்டமான கேள்வியாச்சே. லைஃப் லைன் உபயோகித்துக் கொள்ளலாமா’ என்று கேட்டிருந்தார். கணவருக்கான லைஃப் லைன் சாய்ஸ்களையும் அடுத்து கிருத்திகாவே பதிவிட்டார். அதில் ஏ,பி,சி,டி என்று 4 வாய்ப்புகளை முன்வைத்து, அத்தனையையும் ’தோசை’ என்பதால் மட்டுமே நிரப்பியிருந்தார். இதுதான் கிருத்திகா பதிந்த மேற்படி ஸ்கிரீன் ஷாட். அத்துடன் ‘10 வருடங்களாகியும் இதே நிலைதான்..’ என்றும் பதிவிட்டிருந்தார்.

கிருத்திகாவின் இந்த பதிவுக்கு குபீர் பதில்கள் குவிந்து வருகின்றன. கிருத்திகாவின் பதிவை ரீட்விட் செய்பவர்களும் உதய் - கிருத்திகா தம்பதியை ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். ’அப்ப உங்க வீட்டில் உப்புமா கிடையாதா?’, ’உதய்ணாவுக்கு இன்னைக்கு உப்புமா கிண்டிப் போடுங்க அண்ணி..’, ’தோசையையும் உப்புமா ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களா..’ என்றெல்லாம் பதிவிட்ட பலரும் உப்புமா என்ற வஸ்துவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக தங்கள் அனுபவங்களையும் பதிவிட்டு வருகின்றனர். வேறு சிலர் ’உதய்ணாவுக்கு இந்த தோசை வெரைட்டியை பரிமாறுங்கள்’ என்று சொல்லி, பொடி தோசை, ஆனியன் தோசை என்ற வெரைட்டிகளுடன் தோசைக்கு சிறப்பு சேர்க்கும் குருமா, சட்னி ரகங்களையும் சீரியசாக பதிவிட்டு வருகிறார்கள்.

வாரிசு அரசியலில் சப்தமின்றி காலூன்றி வரும் உதயநிதி ஸ்டாலின், மனைவியின் ஆதரவோடு சினிமா துறையில் ஒரு காலை திடமாக பதிந்து வருகிறார். கோலிவுட்டில் தயாராகும் பிரம்மாண்ட படங்களில் பெரும்பாலனவற்றின் தயாரிப்பு அல்லது விநியோக உரிமையில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் வீற்றிருக்கிறது. மேலும் வித்தியாச கதைக்களங்களுடன் கூடிய புதிய திரைப்படங்களிலும் உதயநிதி ஆர்வத்துடன் நடித்து வருகிறார்.

ஒரு இயக்குநராக கிருத்திகாவும் கோலிவுட் பாய்ச்சலை தொடர்கிறார். இப்படி வியப்பூட்டும் இந்த தம்பதி, பொதுவெளியில் சாமானியர்களுடன் நெருக்கம் பாராட்டுவதற்கான வாய்ப்புகளை தவற விடுவதில்லை. கட்சி மற்றும் ஆட்சியில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் கூட இணையவெளியில் இவர்களை பின்தொடரவும் செய்கிறார்கள். ’எனக்கு திமுகவை பிடிக்காது; ஆனால் உதய்ணாவை ரொம்ப பிடிக்கும்’ என்று, கிருத்திகா பதிவின் கீழ் இளைஞர் ஒருவர் வாஞ்சையுடன் பதிலளித்திருப்பதே இதற்கு சான்று.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in