
இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இருள் இணையத்துக்கு எதிரான நடவடிக்கையை, மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்பு பிரிவான என்சிபி தொடங்கியுள்ளது. ’டார்க்நெட்’டில் நடைபெறும் போதைப்பொருள் பரிமாற்றத்தின் கண்ணிகளை அம்பலப்படுத்தும் வகையில், ‘டார்கதான் -2002’ என்று பெயரில் ஒரு போட்டியையும் என்சிபி தொடங்கி உள்ளது.
நாம் புழங்கும் வழக்கமான இணையம் மற்றும் தேடு பொறிகளுக்கு அப்பால், இணையத்தின் ஆழத்தில் இயங்கும் இருட்டு இணையமே டார்க் நெட். பெயருக்கு ஏற்றவாறு நிழலான நடவடிக்கைகளை பின்பற்றுவோரே இங்கு அதிகமாக புழங்குகின்றனர். அவர்களைப் பின்தொடர்வதும், அடையாளம் காண்பதும் கடினம் என்பதாலும், தங்கள் நிழல் வர்த்தகங்களுக்கான செலாவணியாக பயன்படும் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்துக்காகவும் டார்க்நெட் பயன்பாட்டில் தீவிரமாக உள்ளனர்.
பொதுமக்கள் பங்களிப்புக்கான டார்கதான்-2022 அறிமுகத்தை முன்னிட்டு என்சிபி நேற்று(பிப்.15) வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் பிடிபட்ட போதைப்பொருட்களின் அளவு பல மடங்குகளுக்கு எகிறி உள்ளது. போதைப்பொருள் ரகங்களில் விலை உயர்ந்ததான ஹெராயின் கடந்த 2017-ல் 2,145கிகி பிடிபட்டது. அதுவே 2021-ல் 7,282கிகி என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது 300 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒப்பீட்டளவில் விலைகுறைவு ரகமான கஞ்சாவைப் பொறுத்தவரை, 2017-ல் சுமார் 3.5 லட்சம் கிலோ பிடிபட்டது. இதுவே 2021-ல் 6.75 லட்சம் கிலோவாக உயர்ந்தது.
இவை அனைத்தும் பல்வேறு சோதனை நடவடிக்கைகளில் பிடிபட்டவை மட்டுமே. நிஜமான போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் என்பதில், இவ்வாறு பிடிபட்டிருப்பது சிறு துளி மட்டுமே. போதைப்பொருள் நடமாட்டம் என்பது நவீனமடைந்து விட்டதால், அவற்றை கண்காணிக்கும் போதைப்பொருள் தடுப்பு அமைப்புகளும் நவீன அவதாரம் பெற வேண்டியதாகி விட்டது. அந்தவகையில் இருள் இணையத்தை துழாவுவது, நிழலுலகப் பேர்வழிகளை அங்கே பின்தொடர்வது, நிஜவுலகில் அவர்களை மடக்கி போதைப்பொருளை பறிமுதல் செய்வது ஆகியவற்றை குறிவைத்து தங்கள் தேட்டையைத் தொடங்கி உள்ளது என்சிபி.