
தொடர்ந்து இசைஞானி இளையராஜாவைக் கவனித்து வருபவர்களுக்கு அன்றாடம் ஓர் ஆச்சரியம் காத்திருக்கும். அவரது அரிய பாடல்கள் எல்லாப் பாடல்களையும் கேட்டுவிட்டதாக இறுமாந்திருக்கும் தீவிர ரசிகரிடம் யாரேனும் ஒருவர் ஒரு அரிதினும் அரிய ராஜா பாடலை அறிமுகப்படுத்துவார். அவர் அதைச் சமூகவலைதளத்தில் சிலாகித்து எழுத ராஜா ரசிகர்கள் பரவசத்தில் துள்ளுவார்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் குழுமங்களில் விவாதங்கள் நடக்கும். திடீரென மராத்தி இயக்குநருடன் இளையராஜா இணைகிறார் எனச் செய்தி வெளியாகும். ஆங்கிலப் படத்துக்கு இசையமைக்கிறார் என்று இன்னொரு செய்தி வரும். அவரது பாடல்களை ‘கவர்’ வெர்ஷனாக இசைத்துப் பாடி இன்புறும் இளைஞர் கூட்டம், இளம் தலைமுறை ரசிகர்களுக்கு இனிய விருந்து வைக்கும்.
பிரசாத் ஸ்டுடியோ பிரச்சினை, ‘கடைசி விவசாயி’ பஞ்சாயத்து என ஏதாவது ஒரு விஷயத்தில் எதிர்மறையாகவாவது இளையராஜா குறித்து விவாதங்கள் நடக்கும். ஆனால், இரவில் எல்லோரின் இயர்போன் வழியாக இளையராஜாவே செவிக்கு இதம் தந்துகொண்டிருப்பார். ஆம், என்ன நடந்தாலும் தன் ‘பாட்டுக்கு’ அவர் இயங்கிக்கொண்டே இருப்பார். அதிசயங்களை நிகழ்த்துபவருக்கா பரவசம் இருக்கும்? பார்த்து சிலிர்ப்பவர்களுக்குத்தானே அது பாத்தியப்பட்டது!
அவரது பழைய பாடல்கள் மட்டுமல்ல, புதிய பாடல்களும் கவனம் ஈர்க்கத் தவறுவதில்லை. அப்படித்தான், மாயம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது ‘மாயோன்’ திரைப்படத்துக்காக அவர் இசையமைத்த ‘மாயோனே மணிவண்ணா’ பாடல். யூடியூபில் டிசம்பர் 10-ல் வெளியானது. உடனடியாக ஹிட் ஆனது.
இந்தப் பாடலுக்கு இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்திருக்கின்றன. ராகா சகோதரிகள் என்று கர்னாடக இசை உலகத்தில் கொண்டாடப்படும் ரஞ்சனி, காயத்ரி இருவரும் பாடிய இந்தப் பாடல், ஆன்மிகமும் அமானுஷ்யமும் கலந்த காட்சிப் பின்னணியைச் சுட்டும் இசையமைப்பில் உருவானது. ‘நான் கடவுள்’ படத்தின் ‘ஓம் சிவோஹம்’ பாடலுக்கு நிகரான பரபரப்பு நிரவல் இசையில் தெறிக்கிறது. பாடலை எழுதியதும் இளையராஜாதான்.
இப்பாடலின் தெலுங்கு வடிவமும் ஹிட் ஆகியிருக்கிறது. சைந்தவி, வினயா கார்த்திக் ராஜன் பாடியிருக்கிறார்கள். பாஸ்கரபத்ல ரவிக்குமாரின் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். தெலுங்கில் ராஜா இசையமைப்பில் வெளியான ‘கமனம்’ படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அடுத்து ஆதி நடிப்பில் ‘க்ளாப்’ படம் வேறு காத்திருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘விடுதலை’ படத்துக்கு இசையமைத்துவரும் இளையராஜா, அடுத்து பால்கி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கும் இசையமைப்பார் எனச் செய்திகள் பரபரக்கின்றன. தனது விளம்பரப் படங்களுக்கே இளையராஜாவின் பாடல்களின் மெட்டுக்களைப் பயன்படுத்திய பால்கி, ‘சீனி கம்’ தொடங்கி, ‘பா’, ‘ஷமிதாப்’ போன்ற இந்திப் படங்களுக்கும் இளையராஜாவைத்தான் இசையமைக்க வைத்தார். சில படங்களில் அது வாய்க்கவில்லை என்றாலும், ராஜாதான் அவருக்கு இசைக் கடவுள்.
அடுத்து ரஜினி படத்துக்கு பால்கிதான் இயக்குநர் என்றால், ராஜாதான் இசை என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. அது உண்மையாக இருந்தால், புத்தாண்டில் இளையராஜா ரசிகர்களுக்குப் பொங்கல், தீபாவளியெல்லாம் அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு தினமாகத்தான் இருக்கும்.
எப்படி இருந்தாலும் புத்தாண்டை இளையராஜாவின் ‘இளமை இதோ இதோ’விலிருந்துதானே ஆரம்பிக்க வேண்டும். பார்க்கலாம்!