யுவன் மீது வன்மம்: ‘லவ் டுடே’ இயக்குநர் தரும் பாடம்

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு எதிராக வன்மம் கக்கியதாக எழுந்த புகார்களால், லவ் டுடே திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் திரைப்படத்தின் வெற்றியை முழுதாக கொண்டாட முடியாது தவிக்கிறார்.

கோலிவுட்டின் மிக மகிழ்ச்சியான கலைஞராக நேற்றுவரை திகழ்ந்தவர் பிரதீப் ரங்கநாதன். ஆனால் ஒரே இரவில் பிரதீப்பின் குதூகலத்தை காணடிக்கச் செய்துவிட்டார்கள்.

தனது குறும்படங்களின் வாயிலாக திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தின் இயக்குநராக வெற்றிக் கணக்கை தொடங்கியவருக்கு அடுத்த படமே ஜாக்பாட் ஆனது. லவ் டுடே திரைப்படத்தை எழுதி இயக்கியதோடு கதாநாயகனாகவும் நடித்திருந்தார். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கணிப்பில் ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் லவ் டுடே படத்தை விமரிசையாக வெளியிட்டார். அவரது கணக்கு பொய்க்கவில்லை. பிரதீப் ரங்கநாதனே எதிர்பார்த்திராத மேஜிக் அதன் பின்னர் நிகழ்ந்திருக்கிறது. படம் பார்த்தவர்கள் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாளர் தயார் என்றார்கள். பிரதீப்பை வரவழைத்து ரஜினி காந்த் வாயார வாழ்த்தியிருக்கிறார்.

லவ் டுடே படத்தில்..
லவ் டுடே படத்தில்..

இளம் வயதினர் கொண்டாடும் கதை என்றபோதும், சகல வயதினரும் திரையரங்குகளில் கூடி லவ் டுடே படத்தை வெற்றிகரமாக்கினர். படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. யுவனை போற்றும் வகையில் லவ் டுடே படத்திலும் காட்சி வைத்திருப்பார் பிரதீப். பட வெளியீட்டின் பின்னரான பேட்டிகளிலும் யுவனை வாயார புகழ்ந்தார். எவர் கண்பட்டதோ யுவனை முன்வைத்து, பிரதீப் மீதான கல்லடிகள் விழத் தொடங்கின. அதற்கு பிரதீப்பே வழி செய்தும் வைத்திருந்தார்.

மாமாங்க காலத்துக்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் ஆர்வக்கோளாறில் பதிவிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவுகளை ஒரு பிரகஸ்பதி அள்ளி வந்து சமூக ஊடகங்களில் படையலிட்டார். அந்த பதிவுகளில் ஆர்வக்கோளாறு இளைஞனின் பிரதிநிதியாக சகல திசைகளிலும் சர்ச்சையை கூட்டியிருந்தார் பிரதீப். அவற்றில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எதிரான பதிவும் அடங்கும். ’யுவன் ஒரு வேஸ்ட், ஃபிராடு’ என்று திட்டியதோடு, மங்காத்தா பின்னணி இசை எங்கிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற விவரங்களோடு சாடியும் இருந்தார்.

அவ்வளவுதான். இணைய உலகம் பற்றிக்கொண்டது. பிரதீப் ரங்கநாதனை பலரும் திட்டித்தீர்க்க, அவரும் தாமத நடவடிக்கையாக முகநூல் கணக்கை டிஆக்டிவேட் செய்தார். இப்போது லவ் டுடே திரைப்படத்தின் வெற்றியை முழு மனதாக கொண்டாட முடியாது தவித்து வருகிறார். மேலும் திரையரங்குகள் தோறும் சென்று ரசிகர்களுடன் களித்திருந்த பிரதீப் தற்போது ஆளரவமின்றி அடங்கிப் போயிருக்கிறார். அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்துக்கான ஏற்பாட்டிலும் மும்முரமாக இருந்தவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலின்றி முடங்கி இருக்கிறார்.

ஒரு சாமானிய இளைஞனாக, இளம் கலைஞனாக பிரதீப் மேற்கொண்ட முகநூல் பதிவுகளை, யுவன் புரிந்துகொள்ளக் கூடும். பிரதீப்பும் விரைவில் இந்த சங்கடத்திலிருந்து மீண்டு வரவும் கூடும். தற்கால இளைஞர்களுக்கு, குறிப்பாக தனது திறமைக்கான அங்கீகாரம் தேடுவோருக்கு பிரதீப் ரங்கநாதனின் அனுபவத்தில் கிடைத்திருக்கும் பாடமே இங்கே முக்கியமானது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in