1995 அக்.23: தீபாவளிக்கு ரிலீஸான ‘குருதிப்புனல்!’

1995 அக்.23: தீபாவளிக்கு ரிலீஸான ‘குருதிப்புனல்!’

முதலில் ஒரு கதையைச் சொல்லியாக வேண்டும்.

கோவிந் நிஹலானி. இந்தியாவின் ஆகச்சிறந்த இயக்குநர்களில் முதன்மையானவர். சொல்லப்போனால், இவர்தான் ஏ.ஆர்.ரஹ்மானை பாலிவுட்டுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் ரஹ்மானின் கம்ப்யூட்டர் மக்கர் செய்ய, கோவிந் நிஹலானி வேறு இசையமைப்பாளர்களை வைத்து அந்தப் படத்தை எடுத்துவிட்டார். ரஹ்மானும் அதற்கு அடுத்த ஆண்டு ராம் கோபால வர்மாவின் ‘ரங்கீலா’ படத்தின் மூலம் இந்திப் பட உலகில் அறிமுகம் ஆனார்.

ஆங், சொல்ல மறந்துவிட்டேனே, ரஹ்மான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டிய அந்த இந்திப் படம்தான் ‘துரோக்கால்’! இதைத்தான் கமல்ஹாசன் தமிழில் ‘குருதிப்புனல்’ என்று ரீமேக் செய்தார்.

கோவிந் நிஹலானியின் படங்களில் ‘ஆக்ரோஷ்’, ‘அர்த் சத்யா’ ஆகிய இரு படங்களைப் பாருங்கள். Pure Angst. இதுதான் கோவிந் நிஹலானி. இவரது படங்களில் பெரும்பாலும் ஓம் பூரி, நஸீருத்தின் ஷா, அம்ரிஷ் பூரி என்று இந்திப் படங்களின் ஆகச்சிறந்த நடிகர்கள் இருப்பார்கள், கவனிக்கவும், நடிக்க மாட்டார்கள். Just இருப்பார்கள்.

‘குருதிப்புனல்’ படத்தில் வரும் பெரும்பாலான ஒன் லைனர்கள், வசனங்கள் இன்றளவும் நினைவில் நிற்கும்.

1. தைரியம்னா என்னன்னு தெரியுமா?

பயம் இல்லாத மாதிரி நடிப்பது.

2. ஒவ்வொருத்தருக்கும் ஒரு Breaking Point இருக்கும்.

3. ஆயுதப் போராட்டம் இருதரப்புக்கும் இழப்பைத்தான் தரும்.

4. க்ளைமேக்ஸ்சில் “Shoot Me. Shoot Me, My Man. It’s a Bloddy Order”.

இந்த வசனங்கள் எல்லாம் ஸ்பெஷலாக இருக்க இன்னொரு காரணமும் உள்ளது. ஏனென்றால், இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர், கமல்ஹாசன்தான்.

இந்தப் படம் வந்தபோது ‘குமுதம்’ விமர்சனத்தின் கடைசி வரி (என்று நினைக்கிறேன்) இன்னமும் நினைவில் உள்ளது. “இந்தப் படத்தை டப்பிங் செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டால், ஹாலிவுட்டில் நன்றாக ஓடும்!”

இந்தப் படம் கமல்ஹாசனின் பட வரிசையில் இன்னொரு மைல்கல் (1991 - குணா, 1992 - தேவர் மகன், 1994 - மகாநதி). சொல்லப்போனால், இந்த நேரத்தில்தான் கமலின் படங்கள் தமிழக மக்களால் சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் போக ஆரம்பித்தன. அதற்குக் காரணம், அவர் வழக்கமான மசாலா படங்களில் இருந்து விலகி தனக்கான தனித்தடம் பதித்ததுதான்.

தேவர் மகனும், மகாநதியும் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்.

‘குருதிப்புனல்’ படத்துக்காகக் கமலுக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காமல், அவரே தயாரித்தார். படம் வெளியானபோது, படத்தின் ப்ரீமியர் காட்சிக்காக கோவிந் நிஹலானி, மன்மோஹன் ஷெட்டியை எல்லாம் அழைத்திருந்தார்.

படம் 1995-ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் ரிலீஸ் ஆனது. இதே தேதியில் ரிலீஸ் ஆன இன்னொரு படம், முத்து. சரத்குமார், நக்மா, கவுண்டமணி நடித்த ‘ரகசிய போலீஸ்’ படமும் இதே நாளில்தான் ரிலீஸ் ஆனது. மம்முட்டி, ரோஜா, ரஞ்சிதா நடித்த ‘மக்களாட்சி’ படமும் திரையரங்குக்கு வந்தது இதே நாளில்தான். பொழுதுபோக்குப் படங்களுக்குத் தரும் ஆதரவில் ஒரு 10% நாம் இதுபோன்ற Intense, Off Beat படங்களுக்குக் கொடுத்திருந்தால். . . ஹூம். (இந்த இடத்தில் நீங்களே பல பெருமூச்சுகளை விட்டுக்கொள்ளுங்கள்).

படத்தின் இயக்குநர் P.C.ஸ்ரீராம்.

படத்தின் போஸ்டரிலேயே, குறிப்பாக படத்தலைப்பின் Font டிலேயே கமல்ஹாசனின் தனித்துவம் தெரியும். குருதி + புனல் ஆகிய எழுத்துகள் கருப்பு நிறத்தில் இருக்க, இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே வரும் ‘ப்’ மட்டும் சிவப்பு நிறத்தில் இருக்கும். புனல் என்ற சொல் முடியும் இடத்தில் சிவப்பு நிற வட்டம் ஒன்றும் இருக்கும்.

இந்தப் படம்தான் டால்பி ஸ்டீரியோ( Dolby Stereo) ஒலியமைப்பைக் கொண்ட முதல் இந்தியப் படம். படத்தின் இசையமைப்பாளர் (காலம் சென்ற) மகேஷ் என்ற பன்முகத் திறமையாளர். ‘நம்மவர்’, ‘ஆளவந்தான்’ என்று கமலுடன் பல படங்களில் இணைந்துள்ளார், இந்தியா பிஸ்டன்ஸ், ரியல் இமேஜ் என்று பல கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தாலும் இவர் ஒரு விளம்பரப் பட இசையமைப்பாளர் என்றுதான் அறியப்பட்டார். ரீகல் சொட்டு நீலத்தின் மறக்கமுடியாத விளம்பரத்தை உருவாக்கியவர் இவர்தான். ‘சொட்டு நீலம் டோய்!’

அந்நேரத்தில் கமல் படங்கள், ‘பத்து வருடம் முன்னோக்கியவை’, கல்ட் க்ளாசிக்” என்றெல்லாம் முத்திரை குத்தப்பட ஆரம்பித்த தருணம்.

இந்தப் படத்தில் கமலின் கேரக்டர் பெயர் ஆதி. க்ளைமாக்ஸில்தான் அர்ஜுன் கேரக்டர் இஸ்லாமியர் என்பதே தெரியவரும்.

ஆனால், இவர்கள் இருவரைவிட இந்தப் படத்தில் ஸ்கோர் செய்தவர் பத்ரியாக வரும் நாஸர்தான்.

இந்தப் படம் சிறந்த அயல்நாட்டுப் பட வரிசையில் ஆஸ்கர் விருதுக்கான இந்தியப் படமாக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், டச்சுப் படமான அன்டோனியாவுக்குத்தான் விருது கிடைத்தது.

படம் தமிழில் எந்த ஓ.டி.டி-யிலும் இல்லை. யூடியூபில் இருக்கிறது. தெலுங்கு வெர்ஷன் (‘துரோகி’) அமேசான் ப்ரைம் வீடியோவில் கிடைக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in