‘கைலாசாவில் வேலைவாய்ப்பு’: நித்தி பெயரில் அடுத்த ஐலேசா!

‘கைலாசாவில் வேலைவாய்ப்பு’: நித்தி பெயரில் அடுத்த ஐலேசா!

அடிக்கடி லைம்லைட்டுக்கு வருவதும், அதிரிபுதிரி அருளாசிகளை அள்ளிவிடுவதும் அவை பொதுவெளியில் பெரிதாய் பேசப்படும்போது திடீரென சைலண்ட் மோடில் செல்வதும் பரஹம்ச நித்தியானந்தாவின் லீலைகளில் ஒன்று. அப்படி ’கைலாசாவில் வேலைவாய்ப்பு’ என்ற தலைப்பில் இப்போதும் அடிபட ஆரம்பித்திருக்கிறார் நித்தி.

உயிருக்கு ஆபத்து என்ற களேபரத்துடன் கடைசியாக ஊடக வெளிச்சத்தில் திளைத்திருந்தார் நித்தியானந்தா. ஆபத்தில் நித்தி என்பது உண்மை என்னும் அளவுக்கு உடல் நலிவடைந்ததையும், உயிருக்கு போராடி மீண்டதையும் அவரே அப்போது ஒப்புக்கொண்டார். ’திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..’ என தனக்கே உரிய பாணியில் பழைய மோஸ்தருக்கு திரும்பினார். இதன் பின்னணியில் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி பொருளாதார நிலையிலும் நித்தி பலத்த அடிவாங்கியிருந்தது பின்னர் தெரிய வந்தது. நித்தி வசமிருந்த தங்கக்கட்டிகள் உள்ளிட்ட கைலாசாவின் கஜானா இருப்புகளை சிலர் சுருட்டிக்கொண்டு ஓடியதோடு, மெல்லக்கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதால் நித்தி உயிருக்கு போராடி மீண்டதாகவும் செய்திகள் வெளியாயின.

நம்பிக்கை துரோகிகளால் பெரும் விலைமதிப்பிலான சொத்துக்களை இழந்த நித்தியின் வழக்கமான வருமான வாய்ப்புகளை கரோனா முடக்கம் துண்டித்தது. இதனால் இணையம் வழியே நிதியுதவி கோரும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்படி கிடைத்த உதவிகளால் ஊறிய நித்தி படிப்படியாய் பழைய பொலிவுக்கு திரும்பி வருகிறார். சிவபெருமான் வேடங்களில் அவர் நிகழ்த்தும் போட்டோ ஷூட் அட்ராசிடி மீண்டும் முகநூலில் தலைகாட்டுவதே இதற்கு சாட்சி. இந்த சூழலில் கைலாசாவில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் மீண்டும் நித்தியின் பெயர் தற்போது அடிபடத்தொடங்கி இருக்கிறது.

ஆஸ்திரேலியா அருகே குட்டித் தீவு ஒன்றில் கைலாசாவை நித்தி நிர்மாணித்திருப்பதாக கூறப்பட்டபோதும், இங்கேதான் இந்தியாவின் கடற்கரை கிராமம் ஒன்றில் ஒளிந்துகொண்டு இணையத்தின் சந்துகளில் சித்து விளையாடுகிறார் என்றே நித்தியின் முன்னாள் சிஷ்யர்கள் அலட்சிப்படுத்துகின்றனர். அவற்றை உறுதிபடுத்துவதுபோல நித்தியின் பெயரில் வெளியாகும் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் எல்லாம் அதே வேகத்தில் நீர்த்துப்போவதும் தொடர்கிறது. அப்படித்தான் கைலாசாவுக்கு என தனி கரன்சியுடன், ரிசர்வ் வங்கி ஒன்று தொடங்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தார். திடீரென ’கைலாசா உங்களை அன்போடு வரவேற்கிறது; ஆஸ்திரேலியா வரை சொந்த செலவில் வருபவர்களை எங்கள் கருடா விமான சேவை கைலாசாவுக்கு அழைத்துச் செல்லும்’ என்ற அறிவிப்பு வெளியானது. அப்படி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டவர்கள் விபரமேதும் வெளியாகவில்லை.

இந்த வரிசையில் கைலாசாவில் வேலைவாய்ப்பு என்ற அறிவிப்பு தற்போது வேகமாக பரப்பப்படு வருகிறது. நித்தி என்றாலே உற்சாகம் பீறிடும் இளைஞர்கள் மத்தியில், கைலாசாவில் பணி என்ற அறிவிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தக் கூடியது. சிருங்கார அலங்காரத்துடன் சிஷ்யைகள் சூழ அருளுரை ஆற்றும் நித்தி மீது பித்தானவர்கள் தவிப்புடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக வேலைவாய்ப்பும், ஊதியமும் இன்ன பிற சலுகைகளும் தந்து நித்தியின் நிர்வாகிகள் வரவேற்வு விடுத்துள்ளனர். இதற்கு முன்னரும் கைலாசாவுக்கு செல்லும் யோசனை குறித்து, சமூக ஊடகங்களில் செல்வாக்காளர்கள் ஏராளமான பதிவுகள், வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார்கள். புலனாய்வு புலிகள் சிலர் தங்கள் கற்பனைத் திறனையும் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் இப்போது கைலாசாவே நேரடி அழைப்பு விடுத்துள்ளது.

’இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாசா கிளைகளில் தகுந்த ஊதியத்துடனான வேலை வாய்ப்பு’ என்று தொடங்கும் அந்த அறிவிப்பின் கீழ், ’நித்யானந்தா இந்து பல்கலைக்கழகம், கைலாசாவின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆலயங்கள், கைலாசாவின் ஐடி பிரிவு, அயல்நாட்டு தூதரகம், பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் மற்றும் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள்’ பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும் ஓராண்டு ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்குப் பின்னர் அயல்தேசங்களின் கைலாசா கிளைகளிலும் மேற்கண்ட பிரிவுகளில் வேலைவாய்ப்பு காத்திருப்பதாகவும் அந்த அறிவிப்பு ஆசை காட்டுகிறது. அது மட்டுமன்றி உணவு, மருத்துவ வசதி, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அந்த அறிவிப்பின் கீழ் தகவல் தொடர்புக்காக இருக்கும் அலைபேசி எண்களை ஆவலாதியாய் தொடர்புகொள்வோருக்கு எதிர்முனையில் செவிமெடுக்க ஆளே இல்லை. ஒருவேளை அந்த பணியிடமும் ஆளின்றி காலியாக இருக்கக்கூடும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in