'ஜெய் பீம்' சூர்யாக்களுக்கும்... 'அக்னி சட்டி' அன்புமணிகளுக்கும்!

ஞானவேல், சூர்யா, சந்துரு
ஞானவேல், சூர்யா, சந்துரு

‘ஜெய் பீம்’ படம் குறித்து அறிவிப்பு வந்தபோதே , இப்படி ஒரு தலைப்பு வைப்பதற்கே பெரிய துணிச்சல் வேண்டும் என்று பதிவு செய்திருந்தேன்.

ஆகவே, படம் வெளியான முதல் நாளே ஆர்வமாக குடும்பத்துடன் அமர்ந்து பார்த்தேன். திடீரென ஒருநாள், வீடு புகுந்து மனைவி பிள்ளைகள் கண்முன்னே சட்டையைப் பிடித்து போலீஸால் இழுத்துச் செல்லப்பட்டவன் என்ற அனுபவத்தால், இந்தப் படம் எனக்கு மிக நெருக்கமானதாக இருந்தது.

என்னுடன் அமர்ந்து படம் பார்த்த 7 வயதாகும் இளஞ்செழியன் படம் முடிந்ததும், “நான் ஒருநாளும் போலீஸா மட்டும் ஆக மாட்டேன்ப்பா...”என்று சொன்னான்.

அந்தக் குழந்தையின் வார்த்தையே ‘ஜெய் பீம்’ என்ற படைப்பின் தாக்கத்துக்குச் சான்று.

படம் பார்த்த உடனேயே விமர்சனம் எழுத நினைத்தேன். ஆனால், ஒரு படைப்பு நம் மனதுக்குள் ஊடுருவி தாக்குகிறது எனும்போது பல்வேறு உணர்வுகள் வரும். அதில் கனத்த அமைதியும் ஒன்று.

‘ஜெய் பீம்’ படம் மனதுக்குள் அப்படியான ஒரு கனத்தைக் கொடுத்தது. ஆகவே, அந்தப் படம் குறித்துப் பிறரின் பார்வைகள் எப்படி இருக்கின்றன என்பதை மட்டும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘அசுரன்’ படம் குறித்து விமர்சனம் எழுதாமல் இருந்ததற்கும், இதே காரணம்தான்.

ஆனால், தமிழக அரசியல் களம் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை முன்வைத்து அக்னி சட்டிகளாக கொதித்துக் கொண்டிருப்பதால், என் கருத்தையும் சொல்லி கருத்து கந்தசாமிகள் குழுவில் இணைய வேண்டிய நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறேன் என்பதால் மட்டுமே, இந்தப் பதிவு.

ஜெய் பீம் சூர்யாக்களுக்கு...

சந்தேகமே இல்லை... ‘ஜெய் பீம்’ படம் தமிழ் சினிமாவின் பெருமிதங்களில் ஒன்று. நடிகர் சூர்யா தன் திரைப் பயண வாழ்க்கையில் ஒரு பெருமைக்குரிய படம் நடித்திருக்கிறேன் என்று எங்கு வேண்டுமானாலும் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லிக் கொள்ளலாம். நீதியரசர் சந்துருவை பெருமைப்படுத்தியிருக்கிறது படைப்பு.

ராஜாக்கண்ணுவாக வரும் மணிகண்டன், செங்கேணி, சகோதரியாக வருபவர், குட்டிப்பொண்ணு, காவலர்கள் என அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் க்ளாசிக் சீன்... அந்த பாப்பா கால்மேல் கால்போடும் காட்சிதான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ ரசித்தேன்.

தன் 2-வது படைப்பில் முத்திரைப் பதித்திருக்கும், பத்திரிகையாளராக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்து வென்றிருக்கும் இயக்குநர் த.செ. ஞானவேல் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையே போராட்டங்களாலும் புரட்சிகளாலும் நிறைந்தது.

அதுபோலவே, அவரது வெற்றி முழக்கம் தாங்கி வெளியான ’ஜெய் பீம்’ படமும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு நடுவில் சிக்கியிருப்பது ஆச்சரியமல்ல.

உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த படத்தில் திருஷ்டி பொட்டு போல் ஒரு காலண்டர் இடம்பெற்றதால், போலீஸின் அரசப் பயங்கரவாதம் குறித்து பேசப்பட்டிருக்க வேண்டிய படம், தேவையற்ற சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது.

போலீஸ் எனும் அரசப் பயங்கரவாதத்தின் முகத்தை தோலுரித்துக் காட்டிய படம், ‘ஜெய் பீம்’. படத்தில் அது இருளர்களை காட்சிப்படுத்தியிருந்தாலும் கூட, இந்தக் கதை போலீஸின் லத்திகளுக்கு பலியாகும் அனைத்து மக்களுக்கும் பொதுவானது.

அதுபோல், அம்பேத்கர் என்ற மனிதரின் முகமும் பெயரும் பொதுச் சமூக சாதி மனிதர்களுக்கு கசப்பைக் கொடுத்துள்ள நிலையில், அவர்கள் அனைவரது வாயாலும் ‘ஜெய் பீம்’ என்ற சொல்லை சொல்ல வைத்தது, இயக்குநரின் சிறப்பு என்றே சொல்வேன்.

படத்தின் மொத்த அரசியலையும் சிறை வாசல் காட்சி மற்றும் வசனங்களில் சொல்லிவிட்டார் இயக்குநர் ஞானவேல். அப்புறம் எதற்கு தேவையில்லாமல் அந்த காலண்டர் வலிந்து திணிக்கப்பட்டது. அக்னி சட்டி காலண்டர் பிரச்சினை பற்றி எரியும் அளவுக்கு போனதற்கு காரணம், இது உண்மைக் கதை என்று சொன்னதுதான்.

உண்மைக் கதை என்று சொல்லிவிட்டப்பிறகு, பிற பாத்திரங்களுக்கு பயன்படுத்தியிருப்பதுபோல், இன்ஸ்பெக்டரின் பெயரையும் அப்படியே பயன்படுத்தியிருக்க வேண்டும். நிஜத்தில் இன்ஸ்பெக்டர் அந்தோணி சாமி `முத....யார்’ சமூகத்தைச் சேர்ந்தவர் எனும்போது, அந்த கேரக்டரின் வீட்டில் வன்னியர்களின் குறியீடாக பார்க்கப்படும் அக்னி சட்டி வைக்கப்பட்டது நிச்சயமாக நேர்மையற்ற செயலே.

ஏனெனில் அந்த இன்ஸ்பெக்டர் வன்னியராக இருந்திருந்தால், வீட்டில் அப்படியொரு காலண்டர் வைத்திருப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது.

ஆனால், அப்படியொரு கொடூரச் செயலை செய்தவர்கள் வன்னியர்கள் அல்ல... ராஜாக்கண்ணு மனைவிக்கு துணையாக இருந்தவர்களே எனும்போது, காட்சியின் மூலம் அவர்களைச் சுட்டுவது என்பது கண்டிப்பாக மன வருத்தத்தையே உண்டுபண்ணும்.

அதன் வெளிப்பாடே வன்னியர்களின் எதிர்வினை. இதை பாமக சாமர்த்தியமாக தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டது.

அதற்கான வாய்ப்பை அறிந்தோ அறியாமலோ என்றெல்லாம் சொல்ல மாட்டேன்... அறிந்தே, இயக்குநர் ஞானவேல் கொடுத்துவிட்டதாகவே நினைக்கிறேன். அது என்ன பின்புலமாக இருக்கும் என்ற ஆய்வுக்குள் போக விரும்பவில்லை.

இதுபோல் ‘அசுரன்’ படத்தில், ஆண்ட பரம்பரை என்ற வசனத்துக்காக ஒரு சமூகம் பஞ்சாயத்து கிளப்பியதும் இயக்குநர் வெற்றிமாறன் அந்த வார்த்தையை நீக்கிய காமெடியும் நடந்தது.

ஆண்டப் பரம்பரை என்ற சொல் எப்போதிலிருந்து அந்த சமூகத்துக்குச் சொந்தமானது என்று புரியவில்லை. இப்போது சூர்யாவுக்காக கருத்து சுதந்திரம் பேசும் இயக்குநர் வெற்றிமாறன், அப்போது அது கருத்துச் சுதந்திரம்... அனைவரும் அவன் அவன் நிலத்துக்கு ஆண்டப் பரம்பரையே என்று சொல்லாமல், ஏன் அந்தக் காட்சியை நீக்கிவிட்டு அமைதியாகப் போனார் என்பது அவருக்கே தெரியும்.

ஆக, இப்போது இந்த ‘ஜெய் பீம்’ பஞ்சாயத்தில், இயக்குநர் ஞானவேல் மட்டுமே முதன்மையான பொறுப்பாளர். சூர்யா ஒரு தயாரிப்பாளர் என்ற அளவில் மட்டுமே பெறுப்புக்குரியவராகிறார். நடிகர் சூர்யாவுக்கு இந்தப் பஞ்சாயத்தில் தொடர்பே கிடையாது என்பதே என் கருத்து.

ஒரு நடிகராக, தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார். பின்னணியில் இருந்த காலண்டர் உள்ளிட்ட பொருட்களை அவர் அவ்வளவு கூர்ந்து கவனித்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

அரசியல் குறித்த பார்வைகள் கொண்டோர் பலருக்கும்கூட, அக்னி சட்டி, வன்னியர்களை குறிக்கக் கூடியது என்ற அறிதல் இருப்பது சிரமம்தான். ஆக, இப்படியொரு காலண்டர் உள்ளிட்ட குறியீடுகளை வைத்ததற்கு ஞானவேல் அவர்களே முதன்மையான பொறுப்பாளர்.

ஆனால், விவாதம் அவரை சுற்றிச் செல்லாமல் சூர்யாவை மையப்படுத்துகிறது. படைப்பாளியாக ஞானவேல்தான் பதில்சொல்ல கடமைப்பட்டவர்.

ஒருவேளை, இயக்குநர் த.செ.ஞானவேல், தர்மபுரி இளவரசன் திவ்யா காதல் கதை மற்றும் பின்விளைவுகள் குறித்த உண்மைக் கதையை இதே சூர்யாவை வைத்துப் படமாக எடுத்தால், தாராளமாக பாமகவினர் படத்தையோ அக்னி சட்டியையோ பயன்படுத்தலாம்.

அதற்கான அத்தனை அறமும் நியாயமும் அந்த உண்மைக் கதையில் உண்டு. அதே அறமும் நியாயமும் தாமிரபரணி படுகொலை குறித்த படம் எடுத்தால், பின்னணியில் கருணாநிதி படம் வைப்பதிலும் உண்டு.

அக்னி சட்டி அன்புமணிகளுக்கு...

‘ஜெய் பீம்’ படம் குறித்து அன்புமணி உள்ளிட்டோர் எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள். அதில் நியாயம் இல்லை என்று கடந்து போக முடியாது. ஆனால், படக்குழு குறிப்பிட்ட காட்சியை நீக்கியப் பின்பும் நடிகர் சூர்யாவை குறிவைத்து அடாவடி அரசியல் செய்வது நியாயமற்றது.

முன்பு ரஜினியை வைத்து ராமதாஸ் அவர்கள் அரசியல் செய்த அதே உத்தியை, இப்போது மகனான நீங்கள் சூர்யாவிடம் செய்து பார்க்கிறீர்கள். இது ஆரோக்கியமான அரசியலாகாது. இது, நாளை மஞ்சள் வண்ணத்தையும், மாம்பழத்தையும் யாரும் பயன்படுத்தக்கூடாது என்றெல்லாம் சொல்லும் அளவுக்குப் போனாலும் ஆச்சரியமில்லை.

இப்படி ஒவ்வொருவரும் கிளம்பினால், எந்த ஒரு படைப்பும் வெளியாகாது. காலண்டரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள்... நியாயமான கோரிக்கை. படக்குழு நீக்கிவிட்டது. அவ்வளவுதான். தொடர்ந்து மிரட்டல் அரசியல் செய்வதை விடுத்து ‘ஜெய் பீம்’ பட பஞ்சாயத்துக்கு எண்ட் கார்டு போடுங்கள்.

அதுவே, ஆரோக்கியமான அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அழகு.

அப்புறம் தமிழர்களுக்கு...

ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் மட்டுமல்ல... ஒரு காலண்டருக்குப் பின்னும்கூட அரசியல் இருக்கலாம். தமிழர்கள் இனமாக ஒன்றுகூட விரும்பும்போதெல்லாம், இப்படியான பிளவுபடுத்தும் அரசியல் நடக்கும் என்பது கடந்த கால வரலாறு. வரும்காலங்களிலும் அதுவே நடக்கும். ஆரிய திராவிடம் விரிக்கும் வலைகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டியது தமிழர்களே!

நன்றி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in