ஜே.சி.குமரப்பா பிறந்தநாள்: காந்தியத்தின் சஹிருதயர்!

ஜே.சி.குமரப்பா பிறந்தநாள்: காந்தியத்தின் சஹிருதயர்!

காந்தி எப்போதும் அஞ்சலட்டையில்தான் கடிதங்கள் எழுதுவாராம். அதற்கு அவர் சொன்ன இரண்டு காரணங்கள்: ஒன்று, அஞ்சலட்டையின் விலை குறைவு. இந்தக் காரணத்தை, கஞ்சர்கள் சிலர்கூட சொல்லலாம். இரண்டாவது காரணம்தான் அவரை உத்தமர் என்று அழைக்க வைத்தது. ‘என்னுடைய கடிதங்கள் பொதுவெளிக்கு உரியவை. யார் வேண்டுமானாலும் அவற்றைப் படிக்கலாம்.’

கிராமப் பொருளாதாரம் குறித்த காந்தியின் சிந்தனைகளுக்கு சஹிருதயர் ஜே.சி. குமரப்பா (1892-1960). நீடித்த வளர்ச்சி என்று இன்று பேசப்படும் கோட்பாட்டுக்கு மூலகர்த்தா அவர்தான். தஞ்சையில் ஆசாரமான கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த தமிழர். லண்டனில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ஸி படிப்பு படித்தவர். 1912 முதல் 1927 வரை மும்பையில் பெரும் ஐரோப்பிய, பார்சி வணிகர்களுக்குத் தணிக்கையாளராக இருந்தார். 1928, 1929 -ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் சிராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும் படித்தபின் முனைவர் பட்ட ஆய்வேட்டையும் சமர்ப்பித்தார். ஆய்வுத் தலைப்பு - ‘பொது நிதி மற்றும் இந்திய வறுமை’ (Public Finance and Indian Poverty). பிரிட்டிஷ் வரிவிதிப்பு முறையின் சுரண்டல் தொடர்பானது.

அவருடைய பொருளாதாரத் தத்துவம் ‘நீடிக்கும் பொருளாதாரம்’ (Economy of Permanence) என்று அழைக்கப்படுகிறது. இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் மனித குலம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது அதன் சாராம்சம். ரசாயன உரங்களுக்கும் டிராக்டர் போன்ற எந்திரங்களுக்கும் அவர் எதிரி. டிராக்டர் சாணி போடாது என்றார்.

தம்முடைய ஆய்வுக் கட்டுரையை நூலாக வெளியிட விரும்பினார். பதிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. காந்தியைச் சந்திக்கும்படி யாரோ சொல்ல, சபர்மதி ஆசிரமத்தில் சந்திப்பு நடந்தது. இரண்டு பேரின் கிராமப் பொருளாதாரக் கருத்துகளும் ஒரே அலைவரிசையில் இருந்தன. கட்டுரையை தம் ‘யங் இந்தியா’ பத்திரிகையில் காந்தி தொடராக வெளியிட்டார். குமரப்பாவின் ஐரோப்பிய பாணி உடை கதருக்கு மாறியது. ஒருகட்டத்தில் ‘யங் இந்தியா’வின் ஆசிரியருமானார்.

சுதந்திரத்துக்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரம் தொடர்பான குழுக்களில் அவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. அக்குழுக்கள் மையமழித்தலுக்கு எதிராக இருந்ததால் அவற்றிலிருந்து விலகினார். சுதந்திரத்துக்குப் பின் திட்டக் குழுவுக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பில் உறுப்பினரானார். திரும்பத் திரும்ப அமைப்புகளுக்கு உள்ளே அவரை அழைத்தவர்கள் காந்தி, நேரு, ராஜேந்திர பிரசாத் போன்றோர். கிராமத் தொழில் வாரியம் என்ற ஒரு அமைப்பு இன்றும் குற்றுயிரும் குலை உயிருமாகவாவது இருப்பதற்கு அவர்தான் ஆதிக் காரணம். அதிகாரம் மக்களுக்குத்தான் இருக்க வேண்டுமே ஒழிய அரசுக்கோ அமைப்புகளுக்கோ அல்ல என்றவர். இந்திய வரலாற்றின் மிகச் சிறந்த அனார்க்கிஸ்ட்டுகளில் காந்தியும் குமரப்பாவும் மிக முக்கியமானவர்கள்.

நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஒரு முக்கியக் கூட்டம். திட்டக் குழு தொடர்பானது. குமரப்பா மாட்டு வண்டி ஒன்றில் போனார். நாடாளுமன்ற வீதியிலேயே மாட்டு வண்டியை விடமாட்டார்கள். நாடாளுமன்றத்துக்கு உள்ளே எப்படி? வாயிலில் பெரும் வாக்குவாதம். இந்தியாவில் பெரும்பான்மையோரின் வாகனத்தில்தான் தாம் வந்திருப்பதாக குமரப்பா வாதித்தார். அதாவது, விவசாயிகளின் வாகனம். செய்தி நேருவுக்கு எட்டியது. உடனே வண்டியுடன் அவரை உள்ளே அனுப்பும்படி அறிவுறுத்தினார்.

திருமணம் செய்துகொள்ளாத அவர் 1955 முதல் மதுரை ட்டி.கல்லுப்பட்டியிலிருந்த காந்தி நிகேதன் ஆசிரமத்தில் வசிக்கத் தொடங்கினார். உயர் ரத்த அழுத்தத்தால் நலம் குன்றி சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அங்கு சந்தித்து நலம் விசாரித்தவர்கள் நேரு, ராஜாஜி, காமராஜ் போன்றோர். 1960-ல் மறைந்தார். தேதி ஜனவரி 30. காந்தி நினைவுநாள் அது. சஹிருதயர்களின் வாழ்விலும் மறைவிலும் ஒற்றுமை!

ஆர்.சிவகுமார், ஓய்வுபெற்ற பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், ‘உருமாற்றம்’ (காஃப்கா), ‘இலக்கியக் கோட்பாடு’ (ஜானதன் கல்லர்), ‘வசை மண்’, 'சோஃபியின் உலகம்' உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தவர். இவர் எழுதிய ‘தருநிழல்' எனும் நாவல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. தொடர்புக்கு: sivaranjan51@yahoo.co.in

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in