`இளையராஜா கருத்து மட்டும்தான் இப்போது பிரச்சினையா?'- கொதிக்கும் தங்கர் பச்சான்

`இளையராஜா கருத்து மட்டும்தான் இப்போது பிரச்சினையா?'- கொதிக்கும் தங்கர் பச்சான்

"இளையராஜா கூறிய கருத்து மட்டும் தான் இப்போது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? போராட, வாதங்கள் புதிவதற்கு வேறெதுவும் இங்கே இல்லையா" என இயக்குநர் தங்கர் பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு ஒரு நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா குறித்து எதிர்வினைகளும், அவருக்கு ஆதரவு கருத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இச்சூழலில் இளையராஜாவிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் குடியரசு தலைவருக்கான தேர்வில் இளையராஜா பெயரும் உள்ளது என்றும் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் தங்கர் பச்சான் தனது முகநூல் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ''இளையராஜா கூறிய கருத்து மட்டும்தான் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? கேள்வி எழுப்பவும், போராடவும், வாதங்கள் புரிவதற்கும் வேறெதுவுமே இங்கே இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்," மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல் பிழைப்புவாதிகளும், ஊடக பிழைப்புவாதிகளும் இதே போன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும், குடிநீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரி பொருள் விலை உயர்வு, தொடர் மின் வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் குறித்து இதே போல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா?'' என்றும் அவர் கேட்டுள்ளார்.

தங்கர் பச்சானின் இந்த பதிவிற்குப் பலர் பதிலளித்து வருகின்றனர். அதில், ''உண்மைதான் … நீங்கள் கூறியதுபோல் நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, அதை விட்டுவிட்டு இதை நீங்கள் பதிவிட என்ன காரணம்?'' என்று தங்கர் பச்சானுக்கு இசையமைப்பாளர் தாஜ்நூர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in