’ஆண்களின் சோகத்தைக் கேட்க ஆளில்லையா?’: சர்வதேச ஆண்கள் தினத்தில் சலம்பும் சமூக ஊடகம்

’ஆண்களின் சோகத்தைக் கேட்க ஆளில்லையா?’: சர்வதேச ஆண்கள் தினத்தில் சலம்பும் சமூக ஊடகம்

அனுதினமும் ஏதோவொரு தினத்தின் பெயரில் கொண்டாட்டங்களும் அனுசரிப்புகளும் தொடர்ந்து வருகின்றன. அவற்றின் மத்தியில் நவ.19 சர்வதேச ஆண்கள் தினத்தையும், ஆண்களின் புலம்பலையும் கண்டுகொள்வோர் இல்லையா என்ற சலம்பல் இன்றைய தினம் சமூக ஊடகங்களில் எதிரொலித்து வருகிறது.

நாளொரு வைபவமாய் சிறப்பு தினங்களை கொண்டாடுவது மேற்கத்திய கலாச்சாரம். உலகமே கிராமமாக சுருங்கியதில் அந்த காய்ச்சல் எல்லா திசைகளிலும் பரவியது. குடும்ப அமைப்பு சிதறலுக்குள்ளாகும் மேற்கு நாடுகளில் வருடத்தில் ஓரிரு முறையேனும் குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக குவிக்க அன்னையர், தந்தையர் தினங்கள் பேரில் கொண்டாட்டங்களை கொண்டு வந்தார்கள். நுகர்வு சந்தைக்கான பெரும் உபாயமாகவும் கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்த தினங்களின் முக்கியத்துவம் ஊதிப் பெருக்கப்பட்டது. அதற்கு சிறந்த உதாரணம் காதலர் தினம். கீழை நாடுகளின் கலாச்சாரத்துக்கு சற்றும் பொருந்தாத இந்த இறக்குமதி கொண்டாட்டங்கள் குறிப்பிட்ட கட்டத்தில் தவிர்க்க முடியாதும் போயின. அப்படி இறக்குமதி ஆனவற்றில் பரிதாபத்துக்குரிய தினங்களும் உண்டு. அவற்றில் முக்கியமானது சர்வதேச ஆண்கள் தினம்.

மகளிர் தினம், உழைப்பாளர் தினம் ஆகியவற்றுக்கு எல்லாம் வரலாற்றில் பெரும் இடம் உண்டு. தொடரும் உரிமைப் போராட்டம், சித்தாங்களின் நினைவு கூறல், அடுத்த கட்டத்துக்கான நகர்வு என பெரும் விவாதங்கள் இந்த தினத்தை முன்னிட்டு அரங்கேறும். ஆனால் ஆண்களுக்கு என ஒரு தினம் அனுசரிக்கப்படுவதை பெரும்பாலான ஆண்களே பொருட்படுத்துவதில்லை என்பது மற்றொரு சோகம்.

நாம் ’தாய் நாடு’ என்பது போல, தங்களது தேசங்களை ’தந்தையர் நாடா’க கொண்டாடும் நாடுகளில் முதலில் ஆண்கள் தினத்துக்கான ஆர்வம் உருவானது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்ததும், மார்ச் 8-க்கு முன்னதாக என பிப்ரவரியில் சிலர் ஆர்வக்கோளாறு ஆண்கள் தமக்கான தினத்தை அறிவித்து கொண்டாடினர். ஆனால் அந்த மாதத்தின் பெரும் கொண்டாட்டமான காதலர் தினத்தின் முன்பாக ஆண்கள் தினம் சோபையிழந்தது. கல்லூரி பேராசிரியர் ஒருவர் தனது தந்தையின் பிறந்த தினத்தை முன்னிட்டு நவ.19 அன்று ஆண்கள் தினத்துக்கான கொண்டாட்டத்தை தொடங்கியது மெல்லப் பரவி 90களில் சர்வதேச அங்கீகாரத்துடன் நிலைபெற்றது.

இதர சர்வதேச தினங்களின் போதெல்லாம் களைகட்டும் சமூக ஊடகங்களில், ஆண்கள் தினத்தை முன்னிட்டு பெரும் கேவலாகவும் பதிவுகள் எதிரொலிக்கின்றன. ஆண்கள் தினம் என்பதை பெண்கள் தினத்துக்கு எதிரானதாக புரிந்துகொண்டவர்களின் புலம்பலாக இவை இருக்கின்றன. மேலும் ஆண்கள் மீதான பெண்ணினத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் சிலர் இந்த தினத்தை நினைவுகூர்கிறார்கள். காதலியால் கழற்றி விடப்பட்டவர்கள், விவாகரத்துக்கு காத்திருப்போர், குடும்பச் சண்டையின் சட்டை கிழிந்தோர், பணியிடங்களில் சக பெண் ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் இருப்பை சகிக்க மாட்டாதோர், அதீத ஆணாக்கவாதிகள் என சகல தரப்பினர் இந்த குமுறல் கச்சேரிகளில் குவிந்துள்ளனர்.

நாளிதழ்களில் அதிகம் இடம்பெறும் கள்ளக்காதல் கொலைகள், கணவனை தாக்கிய மனைவி, இல்லற துரோகங்கள் ஆகிய செய்தி துணுக்குகள் இந்த பதிவுகளில் அதிகம் பகிரப்படுகின்றன. அண்மையில் டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா போன்ற கொலை சம்பவங்களுக்கு அளிக்கப்படும் ஊடக முக்கியத்துவம், பெண்களால் கொலையுறும் அப்பாவி ஆண்களுக்கும் அவர்களின் வழக்குகளுக்கும் அளிக்கப்படுவதில்லை என எங்கிருந்தோ வாட்ஸ் அப் செய்திகளை பட்டியலிடுகிறார்கள்.

சந்தடியில் ’என் சோகக்கதையை கேளு தாய்க்குலமே’ என்று பெண்கள் சமூகத்தின் இரக்கத்தை அள்ளும் முயற்சியிலும் சில வழிசல் பேர்வழிகள் இறங்கியுள்ளனர். இவர்கள் பெரும்பாலானோர் சர்காசம் மற்றும் சுயபகடிக்கான உற்சாகத்துடனும் இவற்றை பகிர்வதால் அவை வரவேற்புக்கும் ஆளாகி வருகின்றன. இவர்களுக்கு அப்பால் சொற்ப எண்ணிக்கையிலான சிலர் ’பெண்களால் பாதிக்கப்பட்டோர் சங்க’மாக வரிந்துகொண்டு முழங்கி வருகிறார்கள்.

இவர்களுக்கு மத்தியில் சர்வதேச ஆண்கள் தினத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையிலும் பலர் பதிவுகளிட்டு வருகிறார்கள். நிஜத்தில் மகளிர் தினத்துக்கு இணையான முக்கியத்துவமும், கோரல்களும் ஆண்கள் தினத்துக்கும் அவசியம் என அவை சுட்டிக்காட்டுகின்றன. இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் பாலின சமத்துவத்துக்கும் முக்கியத்துவம் சேர்க்கின்றன.

ஆண் குழந்தைகளின் வளர்ப்பில் அவை தொடங்குகின்றன. ’ஆண் பிள்ளை என்றால் அழக்கூடாது, பெண்கள் போன்று பொம்மைகள் வைத்து விளையாடக் கூடாது, பிங்க் நிறத்தை விரும்பக்கூடாது’ என ஏராளமான திணிப்புகள் குழந்தை பிராயம் தொட்டே தொடங்கி விடுகின்றன. சக பெண்களை மதிக்க வேண்டும், அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், எவருக்கும் தீங்கிழைக்கக் கூடாது என்பது போன்றவை ஆண் குழந்தைகளின் வளர்ப்பில் முறையாக வழங்கப்படுவது மிகவும் அரிதாக இருக்கிறது. ’நீ ஆண் பிள்ளை; அவள் கிடக்கிறாள் பெண் பிள்ளை; ஆண் பிள்ளை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்’ என்றெல்லாம் பிஞ்சிலேயே நஞ்சை கலக்கும் பெரியவர்களே இங்கு அதிகம். பெண்ணினத்துக்கு எதிரான இந்த பெரும் பிழைகளை தாய்மார்களே முன்னின்று செய்வது மற்றொரு கொடுமை.

ஆண் வளர்ப்பில் சேரும் அபத்தங்கள் குழந்தை பிராயத்தோடு முடிவதில்லை. பருவமடையும் பெண் குழந்தையை சிறப்பித்து, சடங்குகள் செய்து, பூடகமாய் விளக்கங்கள் அளித்து அரவணைத்துக்கொள்ளும் சமூகம், பருவ வயதை எட்டும் ஆண் குழந்தையை நட்டாற்றில் கழற்றி விடுகிறது. ’அவன் ஆண் பிள்ளை; தானாக தெரிந்துகொள்வான்’ என்று சமாளிக்கிறது. அப்படி போகிறபோக்கில் கிடைக்கும் வம்புகள், வதந்திகள், இணைய வாந்திகள் ஆகியவற்றிலிருந்து தன்னை வளர்த்துக்கொள்ளும் ஆண் குழந்தை எப்படி முழுமையான ஆணாக சமுதாயத்தில் கலப்பான்?

அதன் பிறகும் இளம்பருவத்து ஆணை துரத்தும் நிதர்சன நிர்பந்தங்கள் தனி. வேலை, திருமணம், குழந்தைப் பேறு, சம்பாதித்தியம், சொத்து சேர்ப்பு, இதர குடும்பக் கடமைகள் என சாவு வரை அவன் முதுகை ஒடிக்கும் சமூக அழுத்தங்கள் எத்தனையோ. இவற்றில் எல்லாம் பெண்ணுக்கு கிடைக்கும் தளர்வுகளில் பாதி கூட ஆண்களுக்கு கிடைப்பதில்லை என புலம்புகிறது சமூக ஊடக ஆண் சமுதாயம். மணவாழ்வின் அழுத்தங்களால் ஆண்டுதோறும் தற்கொலைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறது ஒரு புள்ளி விபரம்.

இவற்றையெல்லாம் புலம்பல்கள் என ஒதுக்குவதற்கும் இல்லை. பெண் குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்கும் அரவணைப்பும், பாதுகாப்பும், ஆண் குழந்தைகளுக்கும் அவசியம் கிடைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு நிகராக ஆண் குழந்தைகளும் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாவது பெரும்பாலும் வெளித்தெரிவதே இல்லை. அங்கே தொடங்கி முதிர் பருவம் வரை ஆணின் உடல், மனம் சார்ந்த பிரச்சினைகளை, நமது குடும்ப மற்றும் சமூக அமைப்புகள் சற்று கரிசனத்தோடு செவிமெடுப்பது நல்லது. எல்லா அழுத்தங்களையும் உள்ளுக்குள் பூட்டிவைத்து, பின்னர் அந்த அழுத்தம் தாங்காது அவன் தடம் மாறும்போது மட்டும் நிந்தித்து பலனில்லை.

சர்வதேச ஆண்கள் தினத்தின் சலம்பல்களுக்கு அப்பால் கசியும் கேவல்களுக்கும் காது கொடுப்போம். பாலின சமத்துவம் என்பது ஆண்களின் பாடுகளையும் உள்ளடக்கியது தானே?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in