எலான் மஸ்க்கின் விநோத நிபந்தனைகள்: என்ன நினைக்கிறார் இந்தியாவின் முதல் ட்விட்டர் பயனாளர்?

 நய்னா ரெது
நய்னா ரெது

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் எடுத்துவரும் பல நடவடிக்கைகள் தொடர்ந்து கவனம் ஈர்த்துவருகின்றன. சர்ச்சைக்குள்ளாகிவருகின்றன. இந்தச் சூழலில், இந்தியாவின் முதல் ட்விட்டர் பயனாளரான நய்னா ரெது இந்த மாற்றங்கள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் 50 சதவீத ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தார். அத்துடன், ட்விட்டர் கணக்குக்கு ‘ப்ளூ டிக்’ அங்கீகாரம் வேண்டும் என்றால் மாதக் கட்டணமாக 8 அமெரிக்க டாலர்கள் (650 ரூபாய்) செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். முன்னதாக, ட்விட்டரின் பல விளம்பரதாரர்கள் விலகிக்கொண்டுவிட்டனர். இதனால், சர்ச்சைக்குரிய சமூகவலைதளமாகப் பேசப்படுகிறது ட்விட்டர்.

இந்நிலையில், இந்தியாவில் முதன்முதலாக ட்விட்டர் கணக்கைத் தொடங்கிய நய்னா ரெதுவிடம் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பேட்டி எடுத்திருக்கிறது. 16 ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் பதிவுகளை எழுதத் தொடங்கிய நய்னா, இதுவரை 1.75 லட்சம் ட்வீட்களை எழுதியிருக்கிறார். தற்போது ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்துவருகிறார்.

2006-ல், ஆர்குட் போன்ற சமூகவலைதளங்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் ட்விட்டரில் சேர்ந்தவர் இவர். அந்தக் காலத்திலேயே ட்விட்டரா என ஆச்சரியப்படுபவர்களுக்கு ஒரு தகவல். உண்மையில், 2006-ல்தான் ட்விட்டர் தொடங்கப்பட்டது. ஆனால், அப்போது அதன் பெயர் Twitter அல்ல.. TWTTR. ஆரம்ப நிலையில் இருந்த ட்விட்டர், மின்னஞ்சல் மூலம் நேரடியாகப் பயனாளர்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்படித் தனக்கு வந்த மின்னஞ்சலைப் பார்த்த நய்னா ரெது, அதில் சேர முடிவெடுத்தார். அதன்படி, அதிகாரபூர்வமாக ட்விட்டரில் சேர்ந்த முதல் இந்தியப் பயனாளர் அவர்தான்.

“அப்போது இந்தத் தளம் பெரிய அளவில் வளர்ச்சிபெறும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. அப்போது இந்தியாவிலிருந்து வேறு யாரும் ட்விட்டரில் கணக்கு தொடங்கியிருக்கவில்லை. அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள்தான் அதில் இருந்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்கள். அப்போது நான் மும்பையில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். எனக்கு அவர்களிடம் உரையாட ஒன்றுமில்லை என்பதால், முதல் ஒன்றரை வருடம் நான் ட்விட்டரைப் பயன்படுத்தவில்லை” என்று அவர் கூறியிருக்கிறார்.

ட்விட்டரில் அவரது சுயவிவரப் பக்கத்தில், ‘புகைப்படக் கலைஞர், ஓவியர், அனுபவங்களைச் சேகரிப்பவர்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதல் ட்விட்டர் பயனாளர் எனும் குறிப்பெல்லாம் இடம்பெறவில்லை. இதுகுறித்து பேசிய அவர், “நான் ட்விட்டர் பயனாளரானது தற்செயலானது. சுயவிவரத்தில் குறிப்பிடும் அளவுக்கு அது முக்கியமானது அல்ல. முதல் 140 ட்விட்டர் பயனாளர்கள் குறித்து அமெரிக்கர் ஒருவர் எழுதிய கட்டுரையில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது” என்றார். இத்தனை ஆண்டுகளில் ட்விட்டரில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், எலான் மஸ்க் அந்நிறுவனத்தை வாங்கிய பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ப்ளூ டிக்குக்குக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகப் பேசிய அவர், இவ்விஷயத்தில் ஒரு தெளிவு இல்லை எனக் குறிப்பிட்டார். இத்தனை ஆண்டுகளாக இதற்காகக் கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில், இப்போது மட்டும் ஏன் இப்படி ஒரு நிபந்தனை என்றும் கேள்வி எழுப்பினார். தான் அந்தக் கட்டணத்தைச் செலுத்தப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், “ப்ளூ டிக் வசதி எல்லோரும் தேவைப்படாது என்பதால், இந்தியாவில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நினைக்கவில்லை. அந்த வசதி வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான கட்டணத்தைச் செலுத்தக்கூடியவர்களாகவே இருப்பார்கள். சாமானியர்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படாது. இதழியல் போன்ற சுயாதீனப் பணிகளில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பாதிப்பு ஏற்படலாம்” என்றார்.

ட்விட்டரில் கருத்துச் சுதந்திரம் தொடர்பாக எழுந்திருக்கும் விவாதங்கள் குறித்துப் பேசிய அவர், “ஒரு நாட்டின் கருத்து சுதந்திரம் ட்விட்டரைச் சார்ந்தது அல்ல; நாம் ட்விட்டரைச் சார்ந்திருப்பது சரியல்ல. நாம் வெவ்வேறு வேலைகளில் மும்முரமாக இருப்பதால் இதுகுறித்து எந்த ஆய்வும் செய்வதில்லை. அதனால்தான் நாம் ட்விட்டரைச் சார்ந்திருக்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in