‘ஃபோட்டோஷாப் பண்ணிட்டாங்க..’: புலம்பும் பிரதீப்; தேற்றும் ரசிகர்கள்

‘ஃபோட்டோஷாப் பண்ணிட்டாங்க..’: புலம்பும் பிரதீப்; தேற்றும் ரசிகர்கள்

’10 வருடங்களுக்கு முந்தைய தனது ஃபேஸ்புக் பதிவுகள் என்ற பெயரில் உலவுபவை பலதும் போட்டோஷாப் செய்யப்பட்டவையே’ என்று புலம்பும் ’லவ் டுடே’ திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை அவரது ரசிகர்கள் தேற்றி வருகின்றனர்.

ஜெயம் ரவி நடிப்பிலான ‘கோமாளி’யைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி அண்மையில் வெளியான திரைப்படம் ’லவ் டுடே’. இதில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். சுமாரான பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். இளமை பொங்கும் கதையும் உறுத்தாத நகைச்சுவையுமாக இளசுகள் மத்தியில் லவ் டுடே வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் ஒரு காரணம் என்பதால், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு நெக்குருக நன்றி தெரிவித்து வருகிறார். ஆனால் 10 வருடங்களுக்கு முன்னர் இதே யுவனை கடுமையாக விமர்சித்து பிரதீப் ரங்கநாதன் பதிவிட்டவை என சில ஸ்கிரீன் ஷாட்டுகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு பிரதீப்பை தர்மசங்கடத்தில் ஆழ்த்தின.

அந்த பதிவுகளில் கல்லூரி பருவத்திலிருக்கும் ஓர் இளைஞரின் துடிப்போடும், ஆர்வக்கோளாறோடும் சகலரையும் விமர்சித்திருந்தார் பிரதீப். அப்படி யுவன் குறித்தும் சில பதிவுகளை செய்திருக்கிறார். அவை தரக்குறைவான பதிவுகள் என்றபோதும், சமூக ஊடகங்களில் உலவும் இளைஞர்களின் வழக்கமான போக்கை ஒட்டியே அவை அமைந்திருந்தன. தற்போது அதே யுவன் இசையில் ஒரு வெற்றிகரமான படத்தை கொடுத்திருக்கும் பிரதீப் ரங்கநாதனை, அவர் பெயரிலான பழைய பதிவுகள் புதிய குடைச்சலை கொடுத்திருக்கின்றன. வாழ்த்துக்களைவிட சமூக ஊடகங்களில் வசவுகளே சுலபத்தில் கிடைக்கும் என்பதால், இரு தினங்களாக வசவாளர்கள் வாயில் விழுந்து அரைபடுகிறார் பிரதீப்.

உடனடியாக முகநூல் கணக்கை டீஆக்டிவேட் செய்த பிரதீப் திடீர் மவுனத்தில் ஆழ்ந்தார். லவ் டுடே வெற்றியை கொண்டாடும் வகையில் ரசிகர்களுடன் சதா தொடர்பிலிருந்த பிரதீப்பின் தர்மசங்கடத்தில் அவரது ரசிகர்களும் பங்கெடுத்தனர். சுமார் 19 வயது இளைஞனாக பிரதீப்பின் பழைய பதிவுகளை பெரிதுபடுத்தாது கடந்து செல்லுமாறு சக ரசிகர்களை கேட்டுக்கொண்டனர். லவ் டுடே படத்தின் வசனங்கள் மற்றும் மீம்ஸ் கொண்டே பிரதீப்புக்கு ஆதரவு கொடி அசைக்க ஆரம்பித்தனர். மேலும் சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் குறித்தெல்லாம் பிரதீப் பதிவிட்டிருந்த சில கொச்சையான பதிவுகளை சிலாகித்தும் வந்தனர். இதனால் சகஜமான பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் மவுனம் கலைத்தார்.

‘இங்கே பரப்பப்படும் ஏராளமான பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் முகநூல் கணக்கை முடக்கியுள்ளேன். சிலவற்றை செய்ய முயற்சிக்கும் மக்கள் மீது எனக்கு கோபம் இல்லை. உங்கள் ஆதரவுக்கு நன்றி’ என்பதோடு, ‘அதில் சில பதிவுகள் உண்மையானவையே. அவை அந்த வயதுக்கே உரியவை. வளரும் போக்கில் என்னை சிறந்த நபராக மாற்ற நாள்தோறும் முயற்சித்து வருகிறேன்’ என்றும் விளக்கம் கொடுத்திருந்தார் பிரதீப். அதில் திருப்தி ரசிகர்கள், மீண்டும் லவ் டுடே கொண்டாட்டத்துக்கு இளம் இயக்குநரை நகர்த்தி வருகின்றனர்.

அந்த ரசிகர்களில் ஒருவராக நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் பதிவிட்டதும், ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பிரதீப் ரங்கநாதன் குறும்ப இயக்குநராக இருந்தபோது, தன்னுடைய படைப்புகளை சினிமா புள்ளிகள் பலரின் பார்வைக்கும் ட்விட்டர் வாயிலாகவே கோரிக்கை விடுப்பார். அப்படி தனக்கு பிரதீப் விடுத்த கோரிக்கையை தற்போது ரீட்விட் செய்திருக்கும் பிரேம்ஜி, ’சார், தயவுசெய்து தங்களுடைய அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு தாருங்கள் சார்’ என்று ஜாலியாக விண்ணப்பம் விடுத்திருக்கிறார். அதனை சுட்டிக்காட்டி ’இது கடின உழைப்பின் பயனாக பிரதீப் அடைந்திருக்கும் உயரத்தை பிரதிபலிப்பதாகவும், அவரது சிறுபிள்ளைத்தனமான பழைய பதிவுகளை வைத்து இப்போது எடைபோட வேண்டாமென்றும்’ பொதுவெளியில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in