இல்லம் தேடிக் கல்வி தற்காலிக நிவாரணி!

இல்லம் தேடிக் கல்வி தற்காலிக நிவாரணி!

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இல்லம் தேடிக் கல்வி செயல்திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையின் முகம் அல்ல என்று வாய்திறந்து சொல்லியிருக்கிறார். ஆனாலும் கல்வியாளர்கள், ஆசிரியர்களில் களப்போராளிகள் மற்றும் அரசியல் தலைவர்களில் சிலர் என எல்லாப் பக்கமிருந்தும் இந்தத் திட்டத்தின் நெகடிவ் கோணத்தையும் பேசிவருகின்றனர்.

இல்லம் தேடிக் கல்வியின் நோக்கம் என்ன? என்பதை முதல்வர் வெளிப்படுத்தியுள்ளார். நீதிக்கட்சித் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து மக்களின் கல்வியின் மீது அக்கறை செலுத்திவந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், எந்த ஒரு தேவைக்கும் நிரந்தர தீர்வு நோக்கிப் பயணிப்பதே அரசின் கொள்கையாக இருப்பது நன்மை பயக்கும். குழந்தைகளின் கற்றல் இடைவெளியை நீக்கிட அக்கறை கொள்ளும் அரசு, 6 மாத கால இடைவெளியில் முழுமையாக அந்தக் கற்றல் இடைவெளியை நீக்கிவிட முடியாது என்பதையும் அறிந்துள்ளதா?

தன்னார்வலர்கள் எந்த அளவு கற்றல் இடைவெளியைப் போக்க அக்கறையும், ஆர்வமும் கொண்டவர்களாகப் பயிற்சி பெற்றவர்களாக இருக்கப்போகிறார்கள் என்பதே, செயல்திட்டத்தின் வெற்றிக்கு அச்சாணியாய் இருக்கும்.

6 மாத காலத்தில், கற்றல் இடைவெளியை நீக்கிவிட முடியும் என்பதெல்லாம் சாத்தியமாய் தோன்றவில்லை. கற்றல் பாதையில் திரும்ப உதவும் நிகழ்வாக அது இருக்க வேண்டும். நிரந்தரமான தீர்வு பள்ளியில், வகுப்பறையில்தான் கொண்டுவர முடியும்.

அதற்குப் பள்ளிக் கட்டிட அமைப்பை மேம்படுத்தி, ஆசிரியர் எண்ணிக்கையை அதிகமாக்குவது கட்டாயமாகச் செய்ய வேண்டிய செயல். அரசு இதைக் கவனத்தில் கொள்ளுமா? பசியாற யோசிக்கும்போது, ஹோட்டலின் வரவேற்பிலும், ஒழுங்காய் அமைந்த இடவசதியிலும் மயங்கிப்போய் இறுதியில், சாப்பிட இயலாத உணவைப் பெற்று தவிப்பது போல நம் நிலைமை ஆகிவிடக்கூடாது.

இல்லம் தேடிக் கல்வி, அரசுக்குப் பிள்ளைகளின் மீதிருக்கும் அக்கறையின் கவர்ச்சிகரமான விளம்பரமாய் மாறிவிடுமோ என்று அச்சமாகவும் உள்ளது. எங்கள் குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளி என்பதை நீக்க அக்கறை கொண்ட அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும். கூடவே கல்வியாளர்களுடன், களத்தில் இருக்கும் ஆசிரியர்களையும் கருத்து கேட்டிருந்தால் அது செம்மையாயிருந்திருக்கும்.

ஏனெனில், கல்வியாளர்கள் என்பவர்கள் குழந்தைகளின் மனநிலையை சர்வே செய்தவர்கள். ஆசிரியர்கள் தினம் தினம் சர்வே செய்தும், கற்றல் பிரச்சினையைப் போக்க யோசித்தும் செயல்பட்டு வருபவர்கள். சென்ற அரசு கரோனா ஆரம்பத்திலேயே ஆசிரியர்களுடன் கலந்துரையாடி இருந்தால், முள்ளை எடுக்க ஆபரேசன் தியேட்டருக்குச் செல்ல வேண்டிய தேவையை அகற்றியிருந்திருக்கும்.

தற்போதைய மக்கள் நல அரசும் ஆசிரியர்களை பொருட்படுத்தாமல், ஆசிரியர்களோடு கலந்துரையாடாமல் கல்வி சார்ந்த, குழந்தை சார்ந்த முடிவுகளை எடுப்பது மனதுக்கு ஒவ்வாமையாகவே உள்ளது. ஆனாலும் கடைசிக் குழந்தையும் கற்பதில் உதவுவதே ஆசிரியர் மட்டுமல்லாது, ஒவ்வொரு குடிமகனின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் இல்லம் தேடிக் கல்வியில் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி, குழந்தைகள் மீதும், அவர்களின் வாழ்க்கை மீதும் ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களைக் கண்டுபிடிக்கவும், இந்த மக்கள் எழுச்சியில் தன் சமுதாயப் பங்கை உணர்ந்த இளைஞர் கூட்டத்தைக் கண்டெடுக்கவும் இயலும் எனத் தோன்றுகிறது. எதிர்கால சமுதாயத்தில், இந்த எழுச்சி மிகுந்த இளைஞர் கூட்டம் தேசப்பற்றுடன் செயல்படக்கூடும் என்று நம்பிக்கை எழுகிறது. இறுதியாக, இல்லம் தேடிக் கல்வி மேற்கூறிய வகையில் உதவுமேயல்லாது, முழுமையாக கற்றல் இடைவெளியைப் போக்கிட உதவும் என்பது நிச்சயம் இல்லை.

முழுமையான கற்றல் இடைவெளியைப் போக்க, அரசு செயலாற்ற வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. அதற்காக பெற்றோரும்,ஆசிரியரும், சமூக நல ஆர்வலர்களும் கைகோக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in