குடிப்பவர்கள் பொதுவெளியில் நடமாடக்கூடாது என்ற உத்தரவையும் எதிர்பார்க்கிறேன்!

குடிப்பவர்கள் பொதுவெளியில் நடமாடக்கூடாது என்ற உத்தரவையும் எதிர்பார்க்கிறேன்!
சென்னையில்...

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கவனத்துக்கு...

கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தங்கள் கவனத்துக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரபிமணியன் உள்ளிட்டோரின் கவனத்துக்கும் வராமல் வெளியாகியிருக்காது என்று நம்புகிறேன்.

பாசிச பாஜககூட இப்படி ஒரு சர்வாதிகார அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், ஜனநாயகம் தனியுரிமை என்றெல்லாம் பேசும் தங்கள் ஆட்சியில் இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறது.

தடுப்பூசியோ அல்லது வேறு எந்த வகையான ஊசியையோ, மருத்துவத்தையோ தனிநபர் ஒருவரிடம் அவரது விருப்பத்தை மீறி திணிக்க முடியாது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு அளித்திருக்கும் தனி மனித உரிமை.

ஆனால் அதற்கு மாறாக, ஒரு மருத்துவ முறையின் ஊசியை அனைவரிடமும் கட்டாயத்தின் பேரில் அதிகாரத்தில் இருப்பவர்கள் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அடிப்படையில் நானும் ஆங்கில மருத்துவத்தையும் மரபு மருத்துவத்தையும் என் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறேன். நானும் சில தடுப்பூசிகளை போட்டிருக்கிறேன். அவையெல்லாம் என் சுய விருப்பம் சார்ந்தது.

ஆனால் ‘கோவிட் 19’ எனும் ஒரு தொற்றுநோயைக் காரணம் காட்டி, குறிப்பிட்ட ஒரு மருத்துவ முறையின் ஊசியை திணிப்பது நியாயமற்ற செயல். ஏனெனில், இங்கு அலோபதி மட்டுமல்ல, சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம் உட்பட பல மரபு மருத்துவ முறைகள் இருக்கின்றன.

ஒவ்வொருவரும் தங்கள் உடலுக்கு ஒத்துவரும் மருத்துவ முறையைப் பயன்படுத்தி பெருந்தொற்றில் இருந்து பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், உங்கள் சுகாதாரத் துறை அமைச்சர், ”டார்கெட்டை ஏன் முடிக்கவில்லை” என்று மருத்துவர்களுக்கு நெருக்குதல் கொடுக்கிறார்.

டார்கெட் என்ற வார்த்தை வியாபாரிகளிடம்தான் புழங்கும். அதை அமைச்சர் பயன்படுத்துகிறார். அதன் விளைவாகவே இந்த சுற்றறிக்கை வெளியாகியிருப்பதாக கருதுகிறேன். மருத்துவர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் நடக்கும் மோதலில் மக்களை பரிசோதனை எலிகளாக்கக்கூடாது.

தடுப்பூசி கட்டாயமாக்கப்படவில்லை... அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என்று ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் சொல்கிறது. அப்படி இருக்க, எப்படி ஒரு ஊசியை கட்டாயப்படுத்துவீர்கள். போடாதவர்களை பொதுவெளியில் நடமாட விடமாட்டோம் என்பதெல்லாம் என்ன வகையான அணுகுமுறை.

பரிசோதனை ஊசி வருவதற்கு முன் கபசுரத்தையும் நிலவேம்பையும் குடித்து உயிர் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். அலோபதியில் 24 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தியும் இறந்தவர்களும் உண்டு; உயிர் பிழைத்தவர்களும் உண்டு.

அதுபோல், பரிசோதனை ஊசியால் பாதுகாப்பாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். 2 டோஸ் ஊசி போட்டு கரோனா வந்து இறந்தவர்களும் உண்டு.

ஊசி போட்டவர்களுக்கு கரோனா வராது என்பதற்கும் அலோபதி மருத்துவர்களாலும் மருந்து நிறுவனங்களாலும் எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியவில்லை. ஆனாலும். “ ஊசி போடு... போடு” என்று மக்களை அடக்குமுறை செய்கிறீர்கள்.

இந்த ஊசி மட்டுமல்ல, எந்த ஊசியும் தனிநபர்களின் விருப்பம் சார்ந்ததே. மாறாக, கட்டாயம் போடவேண்டும் எனில் ஊசி போட்டபின் பக்க விளைவுகள் வந்து பாதிக்கப்படுபவர்களுக்கும், இறப்பவர்களுக்கும் அரசும் மருந்து கம்பெனி நிறுவனங்களும் இழப்பீடு தொகை அறிவித்துவிட்டு தாராளமாகக் கட்டாயப்படுத்தலாம்.

அதுபோல், உலகம் முழுக்க பல வகையான உணவுப் பழக்கங்களை கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஒருவாதத்துக்கு நாளையில் இருந்து மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் மட்டும் பொதுவெளியில் நடமாட முடியும். தயிர் சாதம் சாப்பிடுபவர்கள் நடமாட முடியாது என்றெல்லாம் உத்தரவு போடுவது எந்த அளவுக்கு அபத்தமோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல ஊசி போடாதவர்களுக்கு பொதுவெளியில் நடமாட அனுமதி இல்லை என்பதும்.

மேற்கண்ட உத்தரவு சரி எனில், இதுபோல் இனிமேல் குடிப்பவர்கள் எவரும் பொதுவெளியில் நடமாடக்கூடாது என்று உத்தரவிட்டு டாஸ்மாக்கை மூடவேண்டும். அப்படி ஒரு உத்தரவையும் எதிர்பார்க்கிறேன். ஏனெனில் டாஸ்மாக் மூலம் பல குடும்ப பெண்களின் தாலி அறுக்கப்படுகிறது.

ஒரு ஊசியைப் போட வைப்பதற்காக மக்களுக்கு பீதியூட்டும் செய்திகளை வெளியிட்டு, ஊசி போட நெருக்குதல் கொடுக்கும் உத்தி ஒரு ஜனநாயக அரசுக்கு அழகல்ல. ஒரு ஊசி மக்களுக்கு பலன் அளிக்குமெனில் அது குறித்து அரசு விழிப்புணர்வைத்தான் உண்டு பண்ண வேண்டும். மாறாக, பொதுவெளியில் நடமாடக்கூடாது என்பது பாசிச ஹிட்லரின் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துகிறது.

எனவே, தங்களின் விடியல் அரசு இதையெல்லாம் நன்கு யோசித்து இந்த உத்தரவை திரும்பப்பெறும் அறிவிப்பை வெளியிட வேண்டுகிறேன்!

நன்றி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in