சூர்யவன்ஷியும் சூர்யாவின் ஜெய் பீமும்!

சூர்யவன்ஷியும் சூர்யாவின் ஜெய் பீமும்!

சர்ச்சைகளுக்கு மட்டுமல்ல, இந்திய அளவில் திரையுலகிலும் சமூகத்திலும் சாதகமான மாற்றங்களுக்கும் ‘ஜெய் பீம்’ படம் வழிவகுத்திருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஆங்கிலம் மற்றும் இந்தி நாளிதழ்களில் இந்தப் படம் குறித்த கட்டுரைகளும், அது குறித்த வாசகர் கடிதங்களும் தொடர்ந்து வெளியாகின்றன. அமேசான் பிரைம் வீடியோவில் ‘ஜெய் பீம்’ வந்து 2 வாரங்களுக்குப் பின்னரும், ஷோபா டே உள்ளிட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்கள்வரை இந்தப் படம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய ஊடகங்களில் விவாதங்களும் நடக்கின்றன. கூடவே, யூடியூபில் அரசியல், சமூகப் பிரச்சினைகளை அலசுபவர்களும் இந்தப் படத்தைப் பற்றி தொடர்ந்து உரையாற்றிவருகிறார்கள்.

கூடவே, வெறுமனே பாடல்கள், காதல் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள், தேசிய உணர்வை ஊட்டும் படங்கள் எனும் பெயரில் அபத்தமான முயற்சிகள் பாலிவுட் திரையுலகத்தில் அதிகம் காணப்படுகின்றன. ‘சர்தார் உதம்’, ‘ஷேர்னி’ போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர, இதுதான் நிலவரம். அத்துடன் தமிழிலிருந்து இந்திக்குப்போன ‘சிங்கம்’ பாணித் திரைப்படங்களைத்தான் அங்குள்ள முக்கிய இயக்குநர்கள் கையாள்கிறார்கள். இந்நிலையில், காவல் துறையினரின் சாகசத்தை விதந்தோதும் வகையில் உருவான ‘சூர்யவன்ஷி’ திரைப்படத்தையும், காவல் துறையினரின் அத்துமீறலுக்குள்ளானவர்களின் பரிதாபக் கதையைப் பேசும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தையும் ஒப்பிட்டுப் பலரும் பேசிவருகின்றனர் (ஒரிஜினல் ‘சிங்கம்’ படத்தின் நாயகனும் சூர்யாதான் என்பதும் இதில் முரணான விஷயம்தான்!).

‘ஜெய் பீம்’ படத்தைப் பற்றி யூடியூப் சினிமா விமர்சகர் சுசாரிதா சிங் முதல் ‘தி தேஷ்பக்த்’ யூடியூப் சேனலைச் சேர்ந்த ஆகாஷ் பானர்ஜி வரை, பலரும் தொடர்ந்து பேசிவருகிறார்கள். படத்தின் தொடக்கத்தில், கணக்கு காட்டுவதற்காகப் பழங்குடிகள் மீது பொய் வழக்குகள் போடப்படுவது குறித்துப் பேசும் சுசாரிதா, சாதிப் பாகுபாடு குறித்த விமர்சனங்களையும் முன்வைக்கிறார்.

ஆகாஷ் பானர்ஜி இன்னும் ஆழமாக இப்படத்தைப் பற்றி அலசுகிறார். 1970-களில் பிரபலமாகத் தொடங்கிய கோபக்கார இளைஞன் பாத்திரத்தில், அமிதாப் பச்சன் எப்படி பரிமளித்தாரோ அதேபோல் சூர்யாவும் இந்தப் படத்தில் அறச்சீற்றம் கொண்ட வழக்கறிஞராகப் பரிமளித்திருக்கிறார் என்று கூறியிருக்கும் ஆகாஷ், தனது சொந்தப் பணத்தில் இப்படி ஒரு படத்தை எடுக்கத் துணிந்ததற்கும் பாராட்டு தெரிவித்திருக்கிறார். பாலிவுட்டில் அப்படி எந்த நட்சத்திர நடிகரும் முன்வரமாட்டார் என்றும் மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக, வன்முறை மூலம்தான் உண்மையை வரவழைக்க முடியும் எனும் கருத்து கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரி பெருமாள்சாமி (பிரகாஷ் ராஜ்), காவல் துறையினரின் அராஜகத்தால் பாதிக்கப்படும் பழங்குடியினரின் துயரங்களை வழக்கறிஞர் சந்துரு மூலம் நேரடியாக அறிந்துகொண்ட பின்னர், அதன் மறுபக்கத்தையும் உணர்ந்துகொள்கிறார் எனச் சுட்டிக்காட்டுகிறார்.

‘சூர்யவன்ஷி’ படம் அளவுக்கு ஜெய் பீமில் மசாலா இல்லையா என்று சொல்லிவிட முடியாது என்று குறிப்பிடும் ஆகாஷ், ராஜாக்கண்ணுவின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவப்படும் காட்சியைச் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது கண்ணீர் வந்தால் வெட்கப்பட வேண்டாம் என்று சொல்லும் ஆகாஷ் போன்றோர், பாலிவுட் படங்களின் போலித்தனங்களைப் பட்டவர்த்தனமாக விமர்சித்துவருவது பாலிவுட் திரையுலகிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விசாரணையின்போது தன்னிடம் இந்தியில் பேசும் தமிழ்நாடுவாழ் வட இந்தியரைப் பிரகாஷ் ராஜ் பாத்திரம் கன்னத்தில் அறைவது குறித்து வட இந்தியாவில் ஏற்பட்ட அதிர்வுகள், இந்தப் படம் சுட்டும் காவல் துறை அத்துமீறல்கள், சாதியப் பாகுபாடு போன்றவற்றைப் பிரதானமாக அலசும் விமர்சகர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது. என்டிடிவி இணையதளத்தில், இந்தப் படம் குறித்துக் கட்டுரை எழுதியிருக்கும் ஷோபா டேயும் இதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஒருபக்கம் ‘மசான்’, ‘ஆர்ட்டிக்கிள் 15’ போன்ற பாலிவுட் படங்கள் இந்தியச் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிக் கொடுமைகள் சமகாலத்தில் வேறு வடிவம் எடுத்திருப்பதைப் பட்டவர்த்தனமாகப் பேசுகின்றன. மறுபக்கம் பெரும் பொருட்செலவில் பாடல்கள், நடனம் என நட்சத்திரக் குவியல்கள் மின்னும் படங்கள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், ஜெய் பீம் படம் இந்திய அளவில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், சமூகப் பிரச்சினைகளை அலசும் படங்கள் இந்தித் திரையுலகில் அதிகரிக்க உதவும் என நம்பலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in