
நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சன்சத் டிவியின், யூடியூப் சேனலை கிரிப்டோகரன்சி ஆர்வலர் பெயரிலான சிலர் இன்று அதிகாலை ஹேக் செய்துள்ளனர்.
ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி என்ற பெயர்களில் நாடாளுமன்ற அவைகளின் நிகழ்ச்சிகளை பிரத்யேகமாக ஒளிபரப்பி வந்த தொலைக்காட்சி சானல்கள், கடந்த அக்டோபரில் ’சன்சத்’ என்ற ஒரே டிவியாக ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த டிவிக்கு என தனியாக யூடியூப் சானலும் உண்டு. சன்சத் டிவி என்ற பெயரிலான இந்த சானலை மர்ம நபர்கள் இன்று(பிப்.15) அதிகாலை ஹேக் செய்துள்ளனர்.
சைபர் தாக்குதல்களை ஆராயும் பாதுகாப்பு முகமைகளின் கவனத்துக்கு இந்த ஹேக்கிங் தகவல் வந்ததை அடுத்து, அதிகாலை 3.45 மணிக்கு சேனல் மீட்கப்பட்டது. ஆனால் யூடியூப் விதிமுறைகள மீறிய செயல்பாடுகளுக்கு இந்தச் சேனல் ஆனதாக கூறி, யூடியூப் நிர்வாகத்தால் தற்போது சன்சத் சானல் முடக்கப்பட்டுள்ளது.
சன்சத் சேனலை ஹேக் செய்தவர்கள், கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான எதிரியம் என்ற பெயரை சானலுக்கு சூட்ட முயற்சித்துள்ளனர். மேலும் சானலின் வீடியோ இருப்புகளையும் குலைத்துள்ளனர். இதன் காரணமாகவே யூடியூப் நிர்வாகம் சானலை முடக்கி வைத்துள்ளது.
ஒரு மாதம் முன்னதாக, பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கை இதே போன்று ஹேக் செய்தவர்கள், இந்தியாவில் கிரிப்டோகரன்சி அதிகாரபூர்வமாக அங்கீகாரம் பெற்றுள்ளதாக ட்விட் பதிவிட்டனர். இந்த வகையில் சன்சத் சேனலின் பெயர் மற்றும் உள்ளடக்கத்தையும், கிரிப்டோகரன்சி தொடர்பாக மாற்ற முயன்றுள்ளனர். இந்த ஹேக்கர்கள் கிரிப்டோகரன்சி ஆதரவாளர்களா அல்லது கிரிப்டோ ஆர்வலர்களின் மீது பழிபோடும் விஷமிகளின் கைங்கரியமா என்பது தெளிவாகவில்லை.
சன்சத் சானலுக்கு நிகழ்ந்த விரும்பத்தகாத சம்பவத்தை அடுத்து, மத்திய அரசின் இதர சானல்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளின் பாதுகாப்பு அம்சங்களை கூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.